கஞ்சா போதையில் தகராறு ; தந்தையே மகனை கழுத்தறுத்து கொடூரமாக கொலை ! அம்பத்தூரில் பரபரப்பு
கஞ்சா போதையில் தினமும் தகராறில் ஈடுபட்ட மகனை தந்தையே கழுத்து அறுத்து கொலை செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை அம்பத்தூரில் தினமும் தகராறில் ஈடுபட்ட மகனை தந்தையே கழுத்து அறுத்து கொலை
சென்னை அம்பத்துார் கல்யாணபுரத்தைச் சேர்ந்தவர் மன்மதன் ( வயது 57 ) இவர், அயனம்பாக்கத்தில் பன்றி இறைச்சி விற்பனை செய்து வருகிறார். இவரது மனைவி கல்யாணி ( வயது 53 ) தம்பதியின் மகன் ஸ்ரீதர் ( வயது 31 ) ஆட்டோ ஓட்டுநர். கஞ்சா போதைக்கு அடிமையான ஸ்ரீதர், சரிவர சவாரிக்கு செல்லாமல் ஊர் சுற்றி திரிந்துள்ளார்.
இந்த நிலையில் வீட்டின் படுக்கையறையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ஸ்ரீதர் இறந்து கிடந்தார். தகவலறிந்த அம்பத்தூர் போலீசார், ஸ்ரீதரின் உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர். இதில், ஸ்ரீதருக்கும், அவரது பெற்றோருக்கும் தினசரி தகராறு ஏற்பட்டு வந்தது தெரிய வந்தது.
இதையடுத்து, ஸ்ரீதரின் தந்தை மன்மதன் மற்றும் தாய் கல்யாணி ஆகியோரிடம், போலீசார் விசாரித்தனர். இதில், ஸ்ரீதர் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களுக்கு அடிமையானதும், பெற்றோர் வீட்டில் இருக்கும் போதே பெண்களை வீட்டிற்கு அழைத்து வந்து உல்லாசமாக இருந்ததும் தெரிய வந்தது.
இந்த நிலையில், மன்மதன் தன் புது வீட்டில் பயன்படுத்துவதற்காக வாங்கி வைத்திருந்த டைல்ஸ் மற்றும் ஜன்னல் கண்ணாடிகளை ஸ்ரீதர் உடைத்து, அட்டகாசம் செய்துள்ளார். மகனின் செயலால், கடந்த 10 நாட்களாக மன்மதன் மற்றும் கல்யாணி துாக்கத்தை தொலைத்து மன வேதனையில் இருந்துள்ளனர்.
மேலும் பெற்றோருக்கு ஸ்ரீதர் தொடர்ந்து கொலை மிரட்டலும் விடுத்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மன்மதன், கத்தியை வைத்து மகன் ஸ்ரீதரை கழுத்தறுத்து கொலை செய்ததும், இதற்கு ஸ்ரீதரின் தாய் கல்யாணி உடந்தையாக இருந்ததும் விசாரணையில் தெரிய வந்தது. அம்பத்தூர் போலீசார் இருவரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.
துபாயில் இருந்து கப்பலில் சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 13 கோடி ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு போலி சிகரெட்டு்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சென்னை துறைமுக சுங்கத்துறை புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு, துபாயில் இருந்து தடை செய்யப்பட்ட வெளிநாட்டு போலி சிகரெட்டுகள் கப்பலில் கடத்தி வரப்படுவதாக தகவல் கிடைத்து உள்ளது.
இதையடுத்து சென்னை துறைமுகத்திற்கு வந்த கப்பலில் பிரின்டிங் இங்க் என, அனுப்பப்பட்டு இருந்த கன்டெய்னரை திறந்து சோதனை செய்தனர். அதில், 13 கோடி ரூபாய் மதிப்புள்ள, 64.70 லட்சம் வெளிநாட்டு போலி சிகரெட்டுகள் கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது. அவற்றை பறிமுதல் செய்து, கடத்தலில் ஈடுபட்ட ஏஜன்டுகள் மற்றும் முக்கிய புள்ளிகள் குறித்து விசாரித்து வருகின்றனர்.
சூட்கேசில் ரூ.5 லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல்
சென்னை அம்பத்துார் ஓ.டி., பேருந்து நிலையத்தில் கஞ்சா விற்பனை நடப்பதாக கிடைத்த தகவலின்படி, அம்பத்தூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது கையில் சூட்கேசுடன் திரிந்த இருவரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் வைத்திருந்த சூட்கேசில் கஞ்சா இருப்பது தெரிந்தது. இருவரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.
அதில், அவர்கள் எண்ணுாரைச் சேர்ந்த விக்னேஷ் ( வயது 23 ) தயாளன் ( வயது 19 ) என தெரிந்தது. இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த, 5.10 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 34 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.





















