Factcheck Highcourt On Thaali : தாலி கழற்றியது தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தின் தீர்ப்பு.. வெளியான சாராம்சம்.. முழு விவரம்
தாலியை கழற்றியது கணவனுக்கு இழைத்த மோசமான கொடுமை என தீர்ப்பிலேயே குறிப்பிடப்படவில்லை என்பது தற்போது தெரியவந்துள்ளது.
தாலி கழற்றியது தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தின் தீர்ப்பு - முழு விவரம்
விவாகரத்து வழக்கு ஒன்றில், தாலி கழற்றியது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் கூறியதாக வெளிவந்த கருத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. தாலியை கழற்றியது கணவனுக்கு இழைத்த மோசமான கொடுமை என தீர்ப்பிலேயே குறிப்பிடப்படவில்லை என்பது தற்போது தெரியவந்துள்ளது.
நீதிமன்றத்தில், கடந்த 2016-ம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பு ஒன்றில், தாலி கழற்றியது, கணவனுக்கு மன வேதனை அதிகப்படுத்துதல் மட்டுமல்ல அதுவொரு மோசமான கொடுமை எனக் கூறப்பட்டதை மேற்கோள்காட்டி குறிப்பிட்டுள்ளனர். ஆனால், இந்த வார்த்தைகள், இந்த வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பின் ஓர் அங்கம் என்பது போல் கிட்டத்தட்ட அனைத்து ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகி இருந்தன. ஆனால், தற்போது தீர்ப்பிலே அப்படி ஏதும் குறிப்பிடவில்லை என தெரிய வந்துள்ளது.
வழக்கும், நீதிமன்றமும்:
விவாகரத்து கோரி, ஈரோடு மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரியும் சிவகுமார் என்பவர் தாக்கல் செய்த மனு குடும்பவியல் நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டிருந்து. அதையடுத்து தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுவை ஏற்று விசாரித்த, நீதிபதிகள் வேலுமணி, சவுந்தர் கொண்ட அமர்வு, கடந்த ஜூலை 5-ம் தேதி தீர்ப்பு வழங்கியது.
அப்போது, கணவர் நடத்தையின் மீது மனைவியின் சந்தேகம், கணவருக்கு தகாத உறவு இருப்பதாக, அவரது அலுவலக நண்பர்கள் முன் குற்றம்சாட்டுவது, எந்தவித அடிப்படையும் இல்லாமல் காவல்நிலையத்தில் கணவன் மீது புகார் கொடுத்தது மற்றும் இந்தப் பின்னணியில் மனைவி தாலியை கழற்றியது நீதிமன்றம் அணுகியது. இவை அனைத்தையும் பார்க்கும் போது, மனைவியின் செயல் கணவருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி இருக்கும் என நீதிமன்றம் கருதுகிறது. மேலும், இந்த செயல்கள், இணைந்து வாழ விருப்பமில்லை என்பதையே காட்டுகிறது உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு, கணவர் கோரிய விவாகரத்து மேல் முறையீட்டு மனுவை நீதிமன்றம் அனுமதிப்பதாகத் தெரிவித்துள்ளது.
இந்த இருவரும், கடந்த 2011- ம் ஆண்டு முதலே, தனித்தனியாகவே வாழ்ந்து வருகின்றனர் என்பதையும் இந்த இடைப்பட்ட காலத்தில் மீண்டும் இணைந்து வாழ்வதற்கான முயற்சியை மனைவி மேற்கொண்டதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்பதையும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
தாலி கழற்றியது குறித்து நீதிமன்றம்:
தாலியை கழற்றுவது என்பது பெரும்பாலும் சம்பிரதாயத்துக்கு மாறான ஒரு செயலாகவே பார்க்கப்படுகிறது. மனைவி, தாலியை கழற்றியது மட்டுமே, அந்த திருமண உறவுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு போதுமானதாக நீதிமன்றம் கருதவில்லை. ஆனால், இந்த செயலானது, அவரின் நோக்கம் என்ன என்பதை உணர்வதற்கு ஒரு சிறிய ஆதாரமாக அமைகிறது .
பிரியும் போது தாலியை கழற்றியது மற்றும் பிற ஆதாரங்கள் ஆகியவற்றை வைத்துப் பார்க்கும் போது, இணைந்து வாழ்வதற்கான இணக்கமோ, திருமண உறவை தொடர்வதற்கான நோக்கமோ மனைவிக்கு இருப்பதாகத் தெரியவில்லை என நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
இந்த தீர்ப்பு தொடர்பாக, தாலியை அடிப்படையாக வைத்து கிட்டத்தட்ட அனைத்து ஊடகங்களிலும் வெளியான செய்தி, சமூக வலைத்தளங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், தற்போது, தீர்ப்பின் சாராம்சம் வெளியாகியுள்ளது.