சென்னை ; தேர்வு எழுத அனுமதி இல்லை , மன அழுத்தத்தில் மாணவர் தற்கொலை
தேர்வு எழுத அனுமதி தராததால் , கல்லூரி மாணவர் விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை.

சென்னையில் தேர்வு எழுத அனுமதி இல்லை , மன அழுத்தத்தில் மாணவர் தற்கொலை
சென்னை கோடம்பாக்கம் சிவன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வாசுதேவன் ( வயது 18 ) இவர் ராமாபுரத்தில் உள்ள தனியார் கல்லுாரியில், பி.சி.ஏ., இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 6 - ம் தேதி நடந்த தேர்விற்கு மொபைல் போனை எடுத்து சென்றுள்ளார். அங்கு, தேர்வு ஒருங்கிணைப்பாளராக இருந்த பேராசிரியர் ஸ்ரீமதி, மொபைல் போனை பறிமுதல் செய்து, தேர்வு எழுத அனுமதிக்காமல் வீட்டிற்கு அனுப்பி விட்டார். இதனால் வாசுதேவன் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் , வாசுதேவனின் தாய் கீதா கோவிலுக்கு சென்று இரவு வீடு திரும்பினார். அப்போது, வீட்டில் வாசுதேவன் துாக்கிட்டு தற்கொலை செய்தது தெரிய வந்தது. தகவல் அறிந்து வந்த கோடம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து, மாணவன் உடலை கே.கே.நகர் இ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வாசுதேவனின் தாய் கீதா, போலீசில் அளித்த புகார் ;
என் மகனுக்கு கடந்த 6ம் தேதி செமஸ்டர் தேர்வு நடந்தது. அவன் வகுப்பு கோ - ஆர்டினேட்டர் ஸ்ரீமதி என்பவர், என்னை மொபைல் போனில் அழைத்து, வாசுதேவன் மிகவும் மன உளைச்சலில் இருப்பதாகவும், இரண்டு மாணவர்களுடன் அவனை வீட்டிற்கு அனுப்புவதாகவும் கூறினார்.
அவன் வீட்டிற்கு வந்தவுடன், வீடியோ கால் செய்து, அவனை காட்டுமாறு கூறினார். என்ன நடந்தது என நான் கேட்டதற்கு அவன் தேர்வறையில் மொபைல் போன் உபயோகித்ததால், தேர்வு எழுத அனுமதி மறுத்து தனியாக அமர வைத்ததாக வாசுதேவன் கூறினார். அவர்கள் என் மகனை தனியாக வைத்து, உயிரை மாய்த்துக் கொள்ளும் அளவிற்கு, அங்கு என்ன நடந்தது என தெரியவில்லை.
அவனிடம் எதுவும் கேட்க வேண்டாம் , கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள் என பலமுறை ஸ்ரீமதி அறிவுறுத்தினார். அதற்கு என்ன காரணம் என சந்தேகமாக இருக்கிறது. ஆகவே, என் மகனின் இறப்பிற்கு, கல்லுாரியும் மற்றும் விரிவுரையாளர் ஸ்ரீமதியும் தான் காரணம். ஆகவே, அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகாரில் கூறியுள்ளார். இதுகுறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
முன்னாள் கல்லூரி மாணவரை பட்டா கத்தியால் தாக்கிய பச்சையப்பன் கல்லூரி மாணவருக்கு குண்டாஸ்
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் சஞ்சீவி மகன் துளசிராமன் ( வயது 19 ) சென்னை பச்சையப்பன் கல்லுாரி மாணவரான இவர் கடந்த ஜூலை 29 - ம் தேதி மாலை, கல்லுாரி முடிந்து திருத்தணி ரயில் நிலையம் வந்துள்ளார்.
அப்போது மாநில கல்லுாரி முன்னாள் மாணவரான திருத்தணியைச் சேர்ந்த மாணவர் நவீன் ( வயது 22 ) துளசிராமனை அடித்து பட்டா கத்தியுடன் மிரட்டி இருக்கிறார். இதுகுறித்து அரக்கோணம் ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து, கடந்த அக்டோபர் 11 - ம் தேதி நவீனை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
நவீன் மீது ஏற்கனவே அரக்கோணம், எழும்பூர் ரயில்வே காவல் நிலையங்களில், பல்வேறு வழக்குகள் உள்ளன. இதையடுத்து, கலெக்டர் பிரதாப் உத்தரவின்படி, நவீனை குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார். இந்த உத்தரவை புழல் மத்திய சிறையில், அரக்கோணம் ரயில்வே போலீசார் சமர்ப்பித்தனர்.





















