சென்னையில் 9 இடங்களில் அமைகிறது " சார்ஜிங் மையம் " - எந்தெந்த இடங்கள் தெரியுமா ?
சென்னையில் மின் வாகனங்களுக்கு மின் சார்ஜிங் செய்ய ஒன்பது இடங்களில் மையங்கள் அமைக்கும் பணிக்கு , தனியார் ஒப்பந்த நிறுவனத்தை பசுமை எரி சக்தி கழகம் தேர்வு செய்துள்ளது

மின்சார வாகனம்:
மின்சார வாகனம் ( Electric Vehicle ) என்பது மின்சார மோட்டாரைப் பயன்படுத்தி இயக்கப்படும் ஒரு வாகனம் ஆகும். இது மின் கட்டத்திலிருந்து சார்ஜ் செய்யக் கூடிய பேட்டரிகளால் ஆற்றலைப் பெறுகிறது. பெட்ரோல், டீசல் வாகனங்களைப் போல கழிவுகளை உருவாக்காமல் சுற்றுச் சூழலுக்கு உகந்த மாற்று வாகனமாக இது கருதப்படுகிறது.
மின்சார வாகனங்களில் முழுமையாக மின்சாரத்தில் இயங்கும் வாகனங்கள் (BEVs) மற்றும் பெட்ரோல் என்ஜின் மற்றும் மின்சார மோட்டார் இரண்டையும் பயன்படுத்தும் கலப்பின வாகனங்கள் (HEVs) என பல வகைகள் உள்ளன.
மின்சார வாகனங்களின் வகைகள்
பேட்டரி மின்சார வாகனம் (BEV) ;
இந்த வாகனங்கள் முழுக்க முழுக்க மின்சாரத்தால் இயக்கப்படும். பெட்ரோல் என்ஜின்கள் இதில் கிடையாது.
ஹைப்ரிட் மின்சார வாகனம் (HEV) ;
இந்த வாகனங்களில் பெட்ரோல் என்ஜினும், மின்சார மோட்டாரும் இருக்கும். இது மின்சாரத்திலும் பெட்ரோலிலும் இயங்கும். பேட்டரி காலியாக இருக்கும் போது பெட்ரோல் என்ஜின் அதை சார்ஜ் செய்யும்.
குறைந்த இயக்க செலவுகள் ;
மின்சார வாகனத்தின் இயக்கச் செலவு , பெட்ரோல் அல்லது டீசல் வாகனத்தை விட மிகக் குறைவு. மின்சார வாகனங்கள் பெட்ரோல் அல்லது டீசல் போன்ற எரிபொருட்களைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக பேட்டரிகளை சார்ஜ் செய்ய மின்சாரத்தைப் பயன்படுத்துகின்றன. பெட்ரோல் அல்லது டீசலை நிரப்புவதை விட மின்சார வாகனத்தை சார்ஜ் செய்யும் விலை மலிவானது. சோலார் பேனல்கள் மூலம் சார்ஜ் செய்தால் மின்சாரச் செலவை மேலும் குறைக்கலாம்.
குறைந்த பராமரிப்பு செலவு ;
மின்சார வாகனங்களின் பராமரிப்பு செலவுகள் மிகக் குறைவு , ஏனெனில் அவற்றில் பெட்ரோல், டீசல் வாகனங்களைப் போல நகரும் பாகங்கள் அதிகம் இல்லை. மின்சார வாகனங்களுக்கான சேவைத் தேவைகள் வழக்கமான பெட்ரோல் அல்லது டீசல் வாகனங்களை விடக் குறைவு. எனவே, மின்சார வாகனத்தை இயக்குவதற்கான வருடாந்திர செலவு கணிசமாக குறையும்.
வரிக் குறைவு
மின்சார வாகனங்களை வாங்குவதற்கான பதிவு கட்டணம் மற்றும் சாலை வரி பெட்ரோல் அல்லது டீசல் வாகனங்களை விட குறைவு. நீங்கள் எந்த மாநிலத்தில் இருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்து அரசாங்கத்தால் வழங்கப்படும் சலுகைகள் உள்ளன.
500 சார்ஜிங் மையம் - மத்திய அரசு அறிவுறுத்தல்
தமிழகம் உட்பட நாடு முழுவதும் மின் வாகனங்களுக்கு தடையின்றி சார்ஜிங் வசதி கிடைக்க தேசிய நெடுஞ்சாலையில், 25 கி.மீ தூரத்துக்கு ஒன்றும் , மாநகரங்களில் 3 கி.மீ துாரத்துக்கு ஒன்றும் என , சார்ஜிங் மையங்களை அமைக்க , பொதுத்துறை நிறுவனங்களை மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. எனவே தமிழகத்தில் 500 சார்ஜிங் மையங்களை மாவட்ட நிர்வாகம் , உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து மின் வாரியத்தின் துணை நிறுவனமான பசுமை எரிசக்தி கழகம் அமைக்க உள்ளது.
சென்னையில் 9 இடங்களில் அமையும் சார்ஜிங் மையம்
முதல் கட்டமாக , சென்னையில் மயிலாப்பூர் நாகேஸ்வரராவ் பூங்கா, பெசண்ட் நகர் கடற்கரை, மெரினா கடற்கரை , செம்மொழி பூங்கா உட்பட , ஒன்பது இடங்களில் சார்ஜிங் மையங்கள் அமைக்க தனியார் நிறுவனங்களுக்கு, கடந்த ஆகஸ்டில் அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் பங்கேற்ற நிறுவனங்களில் ரிலக்ஸ் எலக்ட்ரிக் நிறுவனம் தேர்வாகி உள்ளது.
அந்நிறுவனத்துக்கு ஓரிரு தினங்களில் ஒப்புதல் கடிதம் அளிக்கப்பட உள்ளது. அந்நிறுவனம் தன் செலவில் சார்ஜிங் மையம் அமைத்து பராமரிக்க வேண்டும். இதற்காக வசூலிக்கப்படும் கட்டணத்தில் இருந்து கிடைக்கும் வருவாயை அந்நிறுவனம் , மாநகராட்சி , பசுமை எரிசக்தி கழகம் ஆகியவை பகிர்ந்து கொள்ளும்.






















