நீதிமன்ற ஆன்லைன் விசாரணையில் பெண்ணிடம் சில்மிஷம்: வழக்கறிஞர் சஸ்பெண்ட்... சிபிசிஐடி வழக்கு பதிவு!
வழக்கறிஞர்கள் மட்டுமின்றி நீதித்துறை வட்டாரத்தில் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த காட்சிகளைச் சிலர் பதிவு செய்ததால், இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது.
காணொளி காட்சி விசாரணையின் போது பெண்ணிடம் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட வழக்கறிஞரை தொழில் செய்யத் தடை விதிக்குமாறு பார் கவுன்சிலுக்கு பரிந்துரைத்துள்ளதோடு, சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து அறிக்கை தாக்கல் செய்யச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் கொரோனா பாதிப்பு மெல்ல அதிகரிக்கத் தொடங்கியபோது முதலில் முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கொரோனா பாதிப்பு குறைந்த பின்னரே, ஊரடங்கில் தளர்வுகள் கொஞ்சம் கொஞ்சமாக அறிவிக்கப்பட்டது. அந்த சமயத்தில் நீதிமன்றங்கள் தொடங்கி பள்ளிகள் வரை அனைத்தும் மூடப்பட்டன. அந்த சமயத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் ஏராளமாக இருந்தால், விரைந்து முடிக்க காணொளி காட்சி முறை கொண்டு வந்தாக வேண்டிய சூழல் இருந்தது.
கொரோனா தொற்று ஆரம்பித்த சமயத்தில் நீதிமன்ற வழக்கு விசாரணை முழுக்க ஆன்லைன் வாயிலாக நடத்தப்பட்டது. தொற்றின் விகிதம் குறையத் தொடங்கியதும் நேரடியாகவும் விசாரணை நடைபெறுகிறது, அதே நேரத்தில் கூட்டத்தை தவிர்ப்பதற்காக காணொளி காட்சி விசாரணை எனக் கலப்பு விசாரணை முறை தற்போது அமலில் உள்ளது. அனைத்து வழக்கு விசாரணையும் இப்படியே நடந்து வருகிறது. சமீபத்தில் நீதிமன்ற விசாரணையின் போது நீதிபதி ஒரு வழக்கில் உத்தரவு பிறப்பித்துக் கொண்டிருக்கையில், கேமரா ஆனில் இருந்தது தெரியாமல் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் வழக்கறிஞர் ஒருவர் பெண்ணுடன் ஒழுங்கீனமாக நடந்து கொண்டது சக வழக்கறிஞர்கள் மட்டுமின்றி நீதித்துறை வட்டாரத்தில் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த காட்சிகளைச் சிலர் பதிவு செய்ததால், இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது.
இந்த விவகாரம் தொடர்பாகத் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ள நீதிபதிகள் பி.என் பிரகாஷ், ஹேமலதா அமர்வு, சம்மந்தப்பட்ட வழக்கறிஞரைத் தொழில் செய்யத் தடை விதிக்குமாறு பார் கவுன்சிலுக்கு பரிந்துரைத்துள்ளதோடு, சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் சென்னை பெரம்பூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆர்.டி. சந்தான கிருஷ்ணன் "மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் விர்ச்சுவல் மீட்டிங்கில் கலந்துகொள்ளும் போது அநாகரீகமாக நடந்து கொண்டதற்காக" அவரை சஸ்பெண்ட் செய்தது. இது போன்ற சம்பவங்களைக் கண்ணை மூடிக்கொண்டு வேடிக்கை பார்க்க முடியாது எனத் தெரிவித்துள்ள நீதிபதிகள், சம்மந்தப்பட்ட காட்சிகளை சமூக வலைத்தளங்களிலிருந்து நீக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டு சூ மோட்டோ வழக்கின் விசாரணையை வரும் 23ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட வழக்கறிஞரைத் தொழில் செய்யத் தடை விதித்து தமிழகம் மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.