Gemini Bridge: சென்னையின் முக்கிய அடையாளம்... இன்றுடன் 50 ஆண்டுகளை நிறைவு செய்த ஜெமினி ப்ரிட்ஜ்.. சுவாரஸ்யங்கள் இதோ..
அண்ணா மேம்பாலம் தென்கிழக்கு ஆசியாவின் முதல் மேம்பாலமாகவும், சென்னையில் கட்டப்பட்ட முதல் மேம்பாலமாகவும் தனி சிறப்பை இன்று வரை பெற்றுள்ளது.
ஜெமினி ப்ரிட்ஜ் என்று சென்னை வாசிகளால் அன்போடு அழைக்கப்படும் அண்ணா மேம்பாலம் இன்றோடு திறக்கப்பட்டு, 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. கடந்த 1973 ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட இந்த மேம்பாலம் ஜூலை 1-ஆம் தேதி 1973 ம் ஆண்டு போக்குவரத்துக்காக திறக்கப்பட்டது.
அண்ணா மேம்பாலம் தென்கிழக்கு ஆசியாவின் முதல் மேம்பாலமாகவும், சென்னையில் கட்டப்பட்ட முதல் மேம்பாலமாகவும் தனி சிறப்பை இன்று வரை பெற்றுள்ளது. இந்த மேம்பாலம் கட்டப்பட்டபோது இந்தியாவிலேயே நீண்ட பாலமாக திகழ்ந்தது.
ஜெமினி ப்ரிட்ஜ் என பெயர் வர காரணம்:
இந்த மேம்பாலம் கட்டப்படுவதற்கு முன்பாக, புகழ்பெற்ற ஜெமினி ஸ்டூடியோஸ் இங்கு அமைந்திருந்தது.தற்போது இடிக்கப்பட்ட ஜெமினி ஸ்டுடியோவின் நினைவாக அந்தப் பகுதியை அடையாளப்படுத்தும் விதமாக ஜெமினி சர்க்கிள் மற்றும் ஜெமினி மேம்பாலம் என்று அழைக்கப்பட்டது.
மேம்பாலம் கட்ட எவ்வளவு செலவு..?
அண்ணா மேம்பாலம் ரூ. 66 லட்சம் செலவில் சுமார் 21 மாதங்களில் கட்டப்பட்டது. சென்னை வாசிகளின் போக்குவரத்துக்காக ஜூலை 1ம் தேதி 1973 ம் ஆண்டு திறக்கப்பட்டது. இதன் சிறப்பு என்னவென்றால், மேம்பாலத்தின் கட்டிடக் கலைஞர்கள் தேவைப்பட்டால், அதன் இருபுறமும் நீட்டிக்க ஏற்பாடு செய்திருந்தனர். அதன் வடிவமைப்பு 1970 களில் இருந்து கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருந்து வருகிறது.
700 மீ நீளம் கொண்ட இந்த மேம்பாலம், 48 அடி அகலம் கொண்டது. மேம்பாலத்தில் மொத்தம் 80 தூண்கள் அமைக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அண்ணா மேம்பாலம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில், ரூ. 9 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது.
அண்ணா மேம்பாலம் இப்போது கார்ப்பரேட் சமூகப் பொறுப்பின் ஒரு பகுதியாக ஏர்செல் செல்லுலரால் பராமரிக்கப்பட்டு வருகிறது. ஒரு பொது கட்டமைப்பை அழகுபடுத்த LED விளக்குகள் இந்தியாவில் முதல் முறையாக நகரத்தை சார்ந்த Abra Media Networks மூலம் வழங்கப்பட்டது.
ஜெமினி மேம்பாலத்தை சுற்றியுள்ள அடையாளங்கள்:
அண்ணா மேம்பாலத்திற்கு அடியில் இரு பக்கமும் இரண்டு நபர்கள் குதிரையுடன் இருக்கும் சிலைகள் அமைக்கப்பட்டு இருக்கும். அதற்கு காரணம், தமிழ்நாட்டில் குதிரைப் பந்தயம் தடை செய்யப்பட்டதை நினைவுபடுத்தும் வகையில் அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அண்ணா மேம்பாலத்தில் ஏறுவதற்கு முன்பாக (விமான நிலையத்தை நோக்கி செல்லும் திசையில்) இடதுபுறம் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக அச்சகம் மற்றும் அமெரிக்க துணைத் தூதரகம் உள்ளது. புகழ்பெற்ற ஜெமினி ஸ்டுடியோ இடிக்கப்பட்டு, அங்கு பார்சன் மேனர் என்ற வணிக வளாகம் மற்றும் தி பார்க் 5 ஸ்டார் ஹோட்டல் கட்டப்பட்டது. அதன் இடது புறத்தில் சுமார் 80 லட்சம் செலவில் தோட்டக்கலைத் துறை சார்பில் 20 ஏக்கர் பரப்பளவில் தாவரவியல் பூங்காவான செம்மொழிப் பூங்கா உள்ளது.
சமீபத்திய கணக்கெடுப்பின்படி, மேம்பாலத்தின் வழியாக ஒரு மணி நேரத்திற்கு சராசரியாக 20,000 வாகனங்கள் செல்கின்றன. அண்ணா மேம்பாலத்தில் குறைந்தது ஒருநாளைக்கு சுமார் 1 லட்சத்திற்கு மேலானோர் பயணிப்பதாக கூறப்படுகிறது.