(Source: ECI/ABP News/ABP Majha)
ஏலியன்கள் முதல் ஆள் குறைப்பு வரை...ட்விட்டர் ஊழியர்களுடன் எலான் மஸ்க் பேசிய ஐந்து விஷயங்கள்
சட்டத்தை மீறாத வகையில், மக்கள் எதை பேச விரும்புகிறார்களோ அதை பேச அனுமதிக்க வேண்டும் என ட்விட்டர் ஊழியர்களிடம் எலான் மஸ்க் பேசியுள்ளார்.
உலகின் முதன்மை பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், ட்விட்டர் ஊழியர்களுடன் நேற்று உரையாடினார். ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கொடுத்து வாங்க எலான் மஸ்க் முன் வந்த நிலையில், முதல்முறையாக அவர் ட்விட்டர் ஊழியர்களுடன் பேசியுள்ளார்.
எந்த வித கட்டுபாடும் இன்றி, ஊழியர்களுடன் சுமார் 10 நிமிடங்களுக்கு எலான் மஸ்க் உரையாடினார். ஊழியர்கள் கேட்ட பல கேள்விகளுக்கு அவர் நேரடியாக பதில் அளித்தார்.
பேச்சுரிமை முதல் வேற்றுகிரகவாசிகள் வரை அவர் ஊழியர்களுடன் விவாதித்த ஐந்து விவகாரங்கள் குறித்து கீழே காண்போம்.
பேச்சுரிமை
சுதந்திரமான பேச்சுரிமைக்கு ஆதரவாக தொடர்ந்து பேசி வரும் எலான் மஸ்க், "சட்டத்தை மீறாத வகையில், மக்கள் எதை பேச விரும்புகிறார்களோ ட்விட்டரில் அதை பேச அனுமதிக்க வேண்டும்" என ஊழியர்களை கேட்டு கொண்டார்.
இதுகுறித்து மேலும் பேசிய அவர், "ட்விட்டரின் சேவையால் மக்கள் வசதியாக உணர வேண்டும். இதற்காக, நிறுவனம் சமநிலையில் நடந்து கொள்ள வேண்டும் இல்லை என்றால், மக்கள் ட்விட்டரை பயன்படுத்த மாட்டார்கள்" என்றார்.
ஆட்குறைப்பு
ஆட்குறைப்பு குறித்த கேள்விக்கு பதில் அளித்து பேசிய அவர், "இந்த யோசனையை நிராகரித்து விட முடியாது. நல்ல ஆரோக்கியத்துடன் ட்விட்டர் இருக்க வேண்டும். குறிப்பிடத்தக்க பங்களிப்பாளராக இருக்கும் எவரும் கவலைப்பட வேண்டியதில்லை. எந்தவொரு பணி நீக்கங்களும் செயல்திறன் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படும். நிறுவனத்தின் கவனம் லாபத்தை ஈட்டுதல் மற்றும் தயாரிப்புகளை மேம்படுத்துதல் ஆகியவையாகவே இருக்கும்" என்றார்.
விளம்பரப்படுத்துதல்
மாடலாக விளம்பரம் செய்வதற்கு தான் எதிரானவன் அல்ல என வலியுறுத்திய மஸ்க், "ட்விட்டரின் வணிகத்திற்கு இது மிகவும் முக்கியமானது. ஆனால் விளம்பரங்கள் மற்றும் சந்தாக்கள் இரண்டும் வருவாயை அதிகரிக்க முக்கியம்" என்றார்.
மேலும் பேசிய அவர், "ட்விட்டருக்கு விளம்பரம் மிகவும் முக்கியமானது என்று நான் நினைக்கிறேன். நான் விளம்பரத்திற்கு எதிரானவன் அல்ல. நான் அநேகமாக விளம்பரதாரர்களிடம் பேசி, விளம்பரங்கள் முடிந்தவரை பொழுதுபோக்காக இருப்பதை உறுதி செய்வோம்" என்றார்.
விளம்பரங்கள் இல்லாத ட்விட்டராக மாறுவது குறித்து மஸ்க் முன்னதாக பேசியிருந்தார்.
வீட்டிலிருந்து பணிபுரியம் முறை
வீட்டிலிருந்து பணிபுரிவது குறித்து மஸ்க் என்ன நினைக்கிறார் என்பதே பெரும்பாலான ஊழியர்களின் கேள்வியாக இருந்தது. இதுகுறித்து பேசிய அவர், "சிறந்த பங்களிப்பாளர்கள் மட்டுமே தொலைதூரத்தில் அல்லது வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிக்கப்பட வேண்டும். இன்னும் நீண்ட காலத்திற்கு வீட்டிலிருந்து பணி புரிய வேண்டும் என பல ஊழியர்கள் நினைக்கின்றனர்" என்றார்.
வேற்றுகிரகவாசிகள்
வேற்றுகிரகவாசிகள் மற்றும் மற்ற விண்வெளி நாகரிகங்கள் குறித்தும் மஸ்க் ஊழியர்களுடன் உரையாடினார். வேற்றுகிரகவாசிகள் இருப்பதற்கான ஆதாரத்தை தான் காணவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.