உங்க செல்ல பிராணிகளுக்கும் ஹேப்பி தீபாவளியா இருக்கணுமா? இதெல்லாம் ஃபாலோ பண்ணுங்க..
பண்டிகை என்றால் சொந்தம் பந்தம் நட்பு என்று மட்டும் தான் நம் சிந்தனை விரிகிறதே தவிர அதைத்தாண்டி மற்ற ஜீவராசிகளைப் பற்றி நாம் சிந்திப்பதில்லை.
பண்டிகை என்றால் சொந்தம் பந்தம் நட்பு என்று மட்டும் தான் நம் சிந்தனை விரிகிறதே தவிர அதைத்தாண்டி மற்ற ஜீவராசிகளைப் பற்றி நாம் சிந்திப்பதில்லை. இந்த தீபாவளியை அப்படியில்லாமல் மற்ற உயிர்களையும் அரவணைத்துக் கொண்டாட இதோ உங்களுக்காக சில டிப்ஸ்.
இனிப்புகள் உங்களுக்கு மட்டும் இருக்கட்டும்:
தீபாவளி என்றாலே வீட்டில் இனிப்புகளுக்குப் பஞ்சம் இருக்காது. வடிவேலு காமெடியில் வருவதுபோல் பாசக்கார பயலுக விட்டுட்டு சாப்பிட மாட்டாய்ங்க.. என்ற ஸ்டைலில் கடையில் வாங்கிய வீட்டில் செய்தி இனிப்புகளை எல்லாம் உங்கள் செல்லப் பிராணிக்கு குறிப்பாக நாய்களுக்குக் கொடுக்காதீர்கள். இனிப்பு வகைகளை உங்கள் நாய்களுக்குக் கொடுத்தால் அவற்றின் சிறுநீரகம் பாதிக்கும். உங்களுக்கு உறவுகளும், நட்புகளும் விதவிதமான
சாக்லேட் பெட்டிகளை பரிசாகத் தரலாம். ஆனால் நீங்கள் அதில் உள்ளதை உங்கள் நாய்களுக்குக் கொடுக்காதீர்கள். ஏனெனில் அதில் உள்ள புரோமின் என்னும் வேதிப்பொருள் நாய்களின் இதயம் மற்றும் நரம்பு மண்டலத்தை பாதிக்கும். இவற்றை சாப்பிடும் பொழுது நாய்களுக்கு சோர்வு, வாந்தி மற்றும் ரத்தப்போக்கு ஏற்படும்.
கெட்டுப்போன பொருட்கள் வேண்டாம்; மிச்சம் மீதி எலும்பும் வேண்டாம்:
தீபாவளிப் பண்டிகைக்கு மீந்து போகும் உணவை எல்லாம் சேர்த்து வைத்து நாய்களுக்கு அளித்தால் வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி ஏற்படும். சமைத்த உணவில் உப்பு, மசாலா இருக்கும். நாய்களுக்கு உப்பு அதிகம் உள்ள உணவை தவிர்ப்பது நல்லது. இவை நாய்களின் உடலில் வறட்சியை ஏற்படுத்தும். தீபாவளி சிறப்பு அசைவ உணவில் வெங்காயம், பூண்டு அதிக அளவில் இருக்கும். இவை நாய்களுக்கு ரத்தச் சோகை ஏற்பட்டு உடல் ஆரோக்கியம் கெடும். அதேபோல் நீங்கள் சாப்பிட்டுப் போட்ட மிச்சம் மீதி உள்ள எலும்புகளை நாய்களுக்குப் போட வேண்டாம். அது அவற்றின் தொண்டையில் சிக்கிக் கொள்ளலாம், உயிருக்கே ஆபத்தை விளைவிக்கலாம்.
பட்டாசும், நாய்களுக்கு ஏற்படும் மனப்பதற்றமும்..
தீபாவளிப் பட்டாசு நமக்கு வேண்டுமானால் மகிழ்ச்சியைத் தரலாம். ஆனால், காக்கை குருவிகளுக்கும் நாய் பூனைகளுக்கும் இடையூறு தான். அவற்றில் இருந்து எழும் சத்தமும், வெடிப் புகையும் சிறு விலங்குகளை அதிர்ச்சியில் ஆழ்த்தும். தெரு நாய்கள் எல்லாம் ஓடி ஒளிந்து ஏதாவது வாகனத்தின் கீழ் கூட்டமாக சுருண்டு படுத்திருப்பதை நாம் பார்த்திருப்போம். பயத்தில் தான் அவை அப்படிப் படுத்திருக்கும். வீட்டில் வளர்க்கும் நாய்களுக்கு மனப் பதற்றம் ஏற்படுவதைத் தடுக்க அதற்கான மருந்து மாத்திரைகளை வாங்கிக் கொடுக்கலாம். திடீரெனக் கேட்கும் பட்டாசு ஓசையால் நாய்களின் இதயத் துடிப்பு அதிகரிக்கும்.
அதனால் விலங்குகளிடம் ரொம்பவே கனிவாக நடந்து கொண்டு அவற்றை அருகிலேயே வைத்துப் பாதுகாக்க வேண்டும். அந்த மாதிரி நேரங்களில் பாதுகாப்பான சற்றே குளுமையான வெளி சத்தம் அதிகம் கேட்காத அறையில் வைக்கலாம். உங்கள் நாய் மற்றும் செல்ல விலங்குகளின் கவனத்தைத் திசை திருப்புங்கள். வெடி சத்தத்தில் குழப்பம் ஏற்பட்டு நாய்கள் வீட்டை விட்டே எங்கேயாவது ஓட முற்படலாம். அதனால் வீட்டின் கதவை பூட்டிவையுங்கள். அதேபோல், டிவி அல்லது ரேடியோவை போட்டு நாய்களின் கவனத்தை திசை திருப்பலாம்.
இவ்வாறாக நமது செல்லப்பிராணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யலாம்.