Paneer Pea Pulao: பனீர் பட்டாணி புலாவை இந்த மாதிரி செய்து பாருங்க! சூப்பரா இருக்கும்!
சுவையான பனீர் பட்டாணி புலாவ் ரெசிபி எப்படி செய்வதென்று பார்க்கலாம்
இந்த பனீர் பட்டாணி புலாவ் மிகவும் சுவையான உணவாகும். இதை குறைந்த நேரத்தில் மிக எளிமையாக செய்து விட முடியும். இரவு உணவுக்கு இந்த புலாவ் மிகவும் ஏற்றது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதை விரும்பி சாப்பிடுவர். இதில் பனீர் மற்றும் காய்கறிகள் உள்ளதால் இதை அப்படியே சாப்பிடலாம். இல்லாவிட்டால், வெள்ளரி பச்சடி, வெங்காய பச்சடி சேர்த்து சாப்பிடலாம். இதற்கு அதிகம் ஃப்ரஷான காய்கறிகளை பயன்படுத்த வேண்டும்.
தேவையான பொருட்கள்
பாஸ்மதி அரிசி - 2 கப் (250 மி.லி. கப்)
பனீர் - 400 கிராம்
பச்சை பட்டாணி - 1 கப்
நெய் - 3 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
பட்டை - 1
கிராம்பு - 4
ஏலக்காய் - 1
அன்னாசி பூ - 1
ஜாதிபத்திரி - சிறிதளவு
சீரகம் – 1 ஸ்பூன்
பிரியாணி இலை - 2
வெங்காயம் - 2 (மெல்லியதாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 4 கீறியது
இஞ்சி-பூண்டு விழுது - 2 ஸ்பூன்
தக்காளி - 3 (பொடியாக நறுக்கியது)
தயிர் - 2 டேபிள் ஸ்பூன
மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்
மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
சீரகத் தூள் - 1 ஸ்பூன்
மல்லித் தூள் - 1 ஸ்பூன்
கரம் மசாலா தூள் – ஒரு ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
புதினா இலை – கைப்பிடி அளவு
கொத்தமல்லி இலை – கைப்பிடி அளவு
செய்முறை
பாஸ்மதி அரிசியை தண்ணீரில் கழுவி 30 நிமிடம் ஊறவைக்க வேண்டும்.
அடுத்து பனீரை சிறிய துண்டுகளாக நறுக்கி, அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து 5 நிமிடம் ஊறவைக்க வேண்டும்.
பின்னர் ஒரு அகலமான கடாயில் நெய் சேர்த்து சூடானதும் பனீரை சேர்த்து எல்லா பக்கங்களையும் திருப்பி விட்டு வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து ஒரு குக்கரில் நெய், எண்ணெய் சேர்த்து சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசி பூ, ஜாதிபத்திரி, சீரகம், பிரியாணி இலை, சேர்க்க வேண்டும்.
பின்னர் மெல்லியதாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவேண்டும். பின் பச்சை மிளகாய், இஞ்சி-பூண்டு விழுது, தக்காளி ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும்.
அடுத்து தயிர், மிளகாய் தூள், சீரக தூள், மல்லி தூள், கரம் மசாலா பொடி, உப்பு சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து விட வேண்டும்.
பின்னர் பச்சை பட்டாணி, புதினா இலை, கொத்தமல்லி இலை, பன்னீர்,பாஸ்மதி அரிசி ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
அடுத்து தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து விட்டு 1 விசில் வரும் வரை வேக வைத்து இறக்கினால் சுவையான பன்னீர் பட்டாணி புலாவ் தயார்.