Plantain Flower Chutney: ஊட்டச்சத்து நிறைந்த வாழைப்பூவில் சுவையான சட்னி செய்வது எப்படி என்று பார்க்கலாம்...
உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கும் வாழைப்பூவில் சுவையான சட்னி எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
வாழைப்பூ ஏராளமான நன்மைகளை உள்ளடக்கியது. வாழைப்பூவை வாரம் இருமுறை உணவில் சேர்த்துக் கொண்டால், ரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைத்து வெளியேற்ற உதவும். மூலத்திற்கும் வாழைப்பூ நல்லது என சொல்லப்படுகிறது. இப்படி பல்வேறு நன்மைகளை உள்ளடக்கிய வாழைப்பூவை கொண்டு சுவையான சட்னி எப்படி செய்வதென்று பார்க்கலாம் வாங்க.
தேவையான பொருட்கள்
வாழைப்பூ - 1 சிறியது
கடலை பருப்பு - 3 ஸ்பூன்
உளுந்தம்பருப்பு -உளுத்தம் பருப்பு 3 ஸ்பூன்
சின்ன வெங்காயம்- 10
பூண்டு - 5 பல்
மல்லிவிதை- 2 ஸ்பூன்
சீரகம் - ஒரு ஸ்பூன்
புளி - மிக சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
வரமிளகாய் -6
எண்ணெய் - தேவையான அளவு
கறிவேப்பிலை - ஒரு கொத்து
செய்முறை
வாழைப்பூவை நரம்பு நீக்கி சுத்தம் செய்து, கழுவி பொடியாக நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும்.
அடுப்பை மிதமான தீயில் வைத்து, கடாயில் தேவையான அளவு எண்ணெய் சேர்த்து, அதில் கடலை பருப்பு, உளுந்தம் பருப்பை சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும். பருப்பு சிவக்க ஆரம்பிக்கும் போது அதில் 6 மிளகாய் வத்தல், ஒரு ஸ்பூன் மல்லி விதை மற்றும் ஒரு ஸ்பூன் சீரகத்தை சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும். அதில் ஒரு கொத்து கறிவேப்பிலையையும் சேர்த்து தீயாமல் பக்குவமாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
இந்த பொருட்களை ஒரு தட்டில் கொட்டி ஆற விட வேண்டும். அதே கடாயில் நறுக்கி வைத்த வாழைப்பூவை சேர்த்து கொள்ள வேண்டும். மேலும் அதில் தோல் நீக்கிய சின்ன வெங்காயத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
வெங்காயமும் வாழைப்பூவும் நன்றாக வதங்கி சிவக்க ஆரம்பிக்கம் போது, தேங்காய் துருவலையும் சேர்தது வதக்க வேண்டும். அதில் ஒரு நெல்லிக்காய் அளவு புளியையும் சேர்த்து வதக்கி ஆற வைக்க வேண்டும்.
இப்போது வதக்கி ஆறிய பொருட்களை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அதில் தேவையான அளவு உப்பையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அரைத்து எடுத்துத் கொள்ள வேண்டும்.
இப்போது ஒரு கரண்டியில் எண்ணெய் சேர்த்து அதில் ஒரு ஸ்பூன் கடுகு உளுந்தம் பருப்பு, அரை ஸ்பூன் சீரகத்தையும் சேர்த்து தாளிக்க வேண்டும். பொடியாக நறுக்கிய 5 சின்ன வெங்காயத்தையும் இதில் சேர்த்து வதக்கி, இந்த தாளிப்பை சட்னியில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இந்த சட்னியை சூடான தோசை, இட்லியுடன் வைத்து சாப்பிட்டால் சூப்பரா இருக்கும்.