(Source: ECI/ABP News/ABP Majha)
Multigrain Dosa: ஊட்டச்சத்துக்கள் நிறைந்த நவதானிய தோசை செய்வது எப்படி? கட்டாயம் படிங்க..!
ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சுவையான நவதானிய தோசை எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
நாம் சாப்பிடும் சாதம், இட்லி, தோசை, உப்புமா போன்ற பெரும்பாலான உணவுகள் அரிசியில் தயாரிக்கப்படுபவை தான். இந்த உணவு பொருட்களையே நாம் சாப்பிடுவதால் நம் உடலுக்கு அதிகமான கார்போஹைட்ரைடு கிடைக்கின்றது. கார்போஹைட்ரைடு உடலுக்கு தேவையான சத்து தான் என்றாலும் மற்ற சத்துக்களும் உடலுக்கு அத்தியாவசியம் தான்.
நவதானிய தோசை:
நாம் அரிசியில் தயாரித்த உணவுகளை உண்ணுவதால் மற்ற சிறுதானியங்களில் உள்ள சத்துக்கள் நமக்கு கிடைக்காமல் போகின்றன. எனவே நாம் அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ளும் தோசையை நவதானிய தோசையாக செய்து சாப்பிட்டால் போதும்.
நம் உடலுக்கு அதில் உள்ள பல்வேறு சத்துக்களும் கிடைக்கும். இந்த நவதானிய தோசை நாம் வழக்கமாக் செய்யும் தோசையை போல் அல்லாமல் சுவை நிறைந்ததாக இருக்கும். இதனுடன் கார சட்னி போன்றவற்றை வைத்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும். வாங்க சுவையான நவதானிய தோசை எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
புழுங்கல் அரிசி - 1 கப், பச்சரிசி - 1 கப், உளுந்து - 1/4 கப் ,கொள்ளு - 2 ஸ்பூன், கடலைப்பருப்பு - 1 ஸ்பூன், கொண்டைக்கடலை - 2 ஸ்பூன், பாசிப்பருப்பு - 1 ஸ்பூன், துவரம்பருப்பு - 1 ஸ்பூன், பட்டாணி பருப்பு - 1 ஸ்பூன், காராமணி - 1 ஸ்பூன் ,வேர்க்கடலை - 1 ஸ்பூன் ,மொச்சை பயறு - 1 ஸ்பூன், பச்சை மிளகாய் - 3 ,வெங்காயம் - 1 ,கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி, உப்பு தேவையான அளவு, எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
மொச்சை பயிறு, கொண்டைக்கடலை, கொள்ளு, காராமணி இவைகளை கழுவி இரவே ஊற வைக்க வேண்டும். உளுந்து, அரிசியை 2 மணி நேரம் ஊற வைக்கவும். வெங்காயம், ப.மிளகாய், கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வேர்க்கடலையை தவிர மற்ற பருப்புகளை 2 மணி நேரம் ஊற வைக்கவும். வேர்க்கடலையை சிவக்க வறுத்து ரவை போல பொடித்து கொள்ளவும். ஊறவைத்த பருப்புகளை உப்பு சேர்த்து நைசாக தோசை மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த மாவுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்றாக கலந்து 2 மணிநேரம் புளிக்க விட வேண்டும். தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடனாதும் மாவை தோசைகளாக ஊற்றி சுற்றி எடுத்து பரிமாறவும். உடலுக்கு வலு சேர்க்கும் நவதானிய தோசை தயார். இந்த தோசை சுவை மிகுந்தது மட்டும் அல்லாமல் ஏராளமான சத்துக்கள் நிறைந்தது என்பதால் அடிக்கடி இந்த டிஷ்ஷை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
மேலும் படிக்க