CM MK Stalin : ’நாடாளுமன்ற தேர்தலுக்கு இப்போதே தயார்’ - மண்டல வாரியாக நிர்வாகிகளை தயார்படுத்தும் மு.க.ஸ்டாலின்..!
'ராமநாதபுரத்தில் பிரதமர் மோடி போட்டியிடுவதாக தகவல் பரவிய நிலையில், யார் இங்கு போட்டியிட்டாலும் திமுக கூட்டணி அவர்களை தோற்கடிக்கும் என்பது மாதிரி பேச முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டம்’
இது பாஜகவிற்கு வாழ்வா, சாவா தேர்தல். ஆட்சியை மீண்டும் பிடிப்பதற்காக அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். நாம் எதற்கும் தயாராக இருக்க வேண்டும் என்று சில நாட்களுக்கு முன் நடந்த திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசினார் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின். ஆளுநரை கண்டித்து விடுத்த அறிக்கையில் இன்னும் சில மாதங்களில் இந்தியாவில் மாற்றம் ஏற்படும் என தெரிவித்திருந்தார்.
ராமநாதபுரம் செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின்
இந்நிலையில், வரும் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க இப்போதே வியூகம் அமைத்து, வாக்குச்சாவடி பொறுப்பாளர்களை மண்டலம் வாரியாக சந்தித்து பேசத் தொடங்கியிருக்கிறார் அவர். ஏற்கனவே, திருச்சியில் நடைபெற்ற டெல்டா மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், எதிர்க்கட்சியாக இருந்தபோதே தமிழ்நாட்டில் 38 தொகுதிகளில் வெற்றி பெற்றோம். இப்போது ஆளுங்கட்சியாக இருக்கிறோம். புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற நீங்கள் உழைக்க வேண்டும் என்று அவர் கட்சி நிர்வாகிகளை உத்வேகப்படுத்தியிருந்தார்.
அந்த ஊக்கமும் வேகமும் குறைந்துவிடாமல் இருக்க, இன்று ராமநாதபுரத்தில் நடைபெறும் தென் மண்டல பாக முகவர்கள் கூட்டத்தில் பங்கேற்று மு.க.ஸ்டாலின் பேசவிருக்கிறார். முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதன் முறையாக மு.க.ஸ்டாலின் ராமநாதபுரம் செல்வதால் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்க திமுகவினர் முடிவு செய்துள்ளனர்.
இந்தியா கூட்டணியில் ஸ்டாலினுக்கு முக்கியத்துவம்
இந்தியா கூட்டணியில் மு.க.ஸ்டாலினுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வரும் நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 40 எம்.பி.க்களையும் பெற்றுவிட வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார். கடந்த முறை போன்றே காங்கிரஸ் அல்லாத கூட்டணி கட்சிகளை உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட வைக்க ஸ்டாலின் முடிவு செய்திருப்பதாகவும் அதோடு கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகளை கடந்த முறையை காட்டிலும் இந்த முறை குறைக்கவும் அவர் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசித்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அதே நேரத்தில் பாட்டாளி மக்கள் கட்சியை கூட்டணிக்குள் கொண்டுவந்தால், விடுதலை சிறுத்தைகள் வெளியேறும் என அறிவித்துள்ள நிலையில், கடந்த நாடாளுமன்ற தேர்தலைல் வெற்றி கூட்டணியாக இருந்த விசிக-வை மு.க.ஸ்டாலின் இழக்க விரும்பவில்லை என்றும், பாமகவிற்கு பதில் தேமுதிக மற்றும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தை கூட்டணிக்கு கொண்டுவர அவர் இப்போதே திட்டமிட்டிருப்பதாகவும் அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், இன்று ராமநாதபுரத்தில் நடைபெறும் வாக்கு சாவடி முகவர்கள் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ராமநாதபுரம் தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிடப்போவதாக பாஜகவினர் பேசிவரும் நிலையில், இன்றைய கூட்டத்தில் இங்கு யார் போட்டியிட்டாலும் மோடியே நம்மை எதிர்த்து போட்டியிட்டாலும் அவர்களை திமுக கூட்டணி வீழ்த்தும் என்பது மாதிரியான வீரியமிக்க உரையை நிர்வாகிகள் மத்தியில் ஸ்டாலின் பேசவுள்ளதாக கூறப்படுகிறது.
நிதானிக்க தொடங்கிய அதிமுக - பாயத் துவங்கிய திமுக
தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒருவழியாக நிதானிக்கத் தொடங்கி, வரும் 20ஆம் தேதி மதுரையில் மாநாடு போடவிருக்கும் நிலையில், திமுக பூத் பொறுப்பாளர்கள் கூட்டத்தை 2ஆம் கட்டமாக நடத்தி முடித்து, முன் கூட்டியே நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகி வருகிறது.
விரைவில், மற்ற மண்டலங்களின் பொறுப்பாளர்களுடன் கூட்டம், சென்னை மண்டலத்திற்கு தனியாக ஒரு கூட்டம் என ஜெட் வேகத்தில் தேர்தல் பணிகளை முடுக்கி விட முதல்வர் மு.க.ஸ்டாலின் தயாராகி வருகிறார்.