(Source: ECI/ABP News/ABP Majha)
Meat Eating | ”எந்த இறைச்சியை சாப்பிடுவது நல்லது? எதைத் தவிர்க்கலாம்?” : மருத்துவர் கு.சிவராமன் சொன்ன பதில்..
இறைச்சி கேடானது அல்ல. இறைச்சிக்கான தேர்விலும் வணிகம் புகுந்துவிட்டது. உதாரணத்துக்கு ப்ராய்லர் கோழி, அவை கூவாது, நடக்காது, பறக்காது ஆனால் கோழி எனப் பெயர் வைத்துள்ளார்கள்
இறைச்சி சாப்பிடுவது குறித்துப் பலருக்கு பல்வேறு வகையான நம்பிக்கை உண்டு. மதரீதியான நம்பிக்கை உடையவர்கள் குறிப்பிட்ட சில கறிகளைச் சாப்பிடுவதைத் தவிர்ப்பார்கள். சிலர் சைவம் சாப்பிடுவதுதான் நல்லது என வாதாடுவார்கள். இதுபோன்ற கேள்விகளுக்கெல்லாம் விளக்கம் அளிக்கிறார் பிரபல சித்த மருத்துவர் கு.சிவராமன்.
கேள்வி: இறைச்சி சாப்பிடுவது குறித்து இன்றும் பல்வேறு மூடநம்பிக்கைகள் உள்ளன இறைச்சி சாப்பிடுவது தவறா? அதுகுறித்த உங்களது விளக்கம் என்ன?
மருத்துவர் கு.சிவராமன் பதில்: ”இறைச்சி மிக முக்கியமான உணவுகளில் ஒன்று. அதை நாம் பலகாலம் பலவகைகளில் சாப்பிட்டிருக்கிறோம். யானைக்கறி வரை உட்கொண்டிருக்கிறோம். இன்றைக்கும் நமது தேவையில் இறைச்சி முக்கியமான உணவு. ஆனால் இறைச்சி உண்பது தவறு என்பது அறிவியல் திணித்த விஷயம் அல்ல. அறிவியல் இறைச்சி நல்லது என்கிறது. இன்னும் சொல்லப்போனால் சிலர் சைவம் சாப்பிட்டால்தான் மூளை நன்கு வேலை செய்யும் என நினைப்பார்கள். அது மூடத்தனம். நோபல் பரிசு வென்ற 99 சதவிகிதம் பேர் மாட்டிறைச்சி சாப்பிட்டவர்கள்.
ஆக, இறைச்சி கேடானது அல்ல. இறைச்சிக்கான தேர்விலும் வணிகம் புகுந்துவிட்டது. உதாரணத்துக்கு ப்ராய்லர் கோழி, அவை கூவாது, நடக்காது, பறக்காது ஆனால் கோழி எனப் பெயர் வைத்துள்ளார்கள். 65-70 நாள் ப்ராய்லரில் வைத்து ஒவ்வொருநாளும் அதற்கான தீவணத்தில் ஆண்டிபயாட்டிக் சேர்த்துதான் இந்த வகை ப்ராய்லர் கோழிகளை வளர்க்கிறார்கள். நாம் தினமும் சாப்பிடும் ரசம் மற்றும் பொரியலில் இந்த ஆண்டிபயாட்டிக்குகள் எல்லாம் சேர்க்கிறோமா? ஆனால் அப்படி தினமும் ஆண்டிபயாட்டிக் சேர்க்கப்பட்ட கோழியை எப்படி உணவாக எடுத்துக் கொள்கிறோம்?
மத்திய அறிவியல் ஆராய்ச்சி மையத்தின் ஆய்வுகளின்படி வருடத்தில் 52 முறை இறைச்சி உட்கொள்கிறீர்கள் என்றால் நீங்கள் 52 முறை ஆண்டிபயாட்டிக்குகள் எடுத்துக்கொண்டதற்குச் சமம் என்கிறது. அதனால் கறியைத் தேர்வு செய்வதில் கவனமாக இருக்க வேண்டும். நாட்டுக்கோழிக் கறிகளை வாங்கலாம் என்றால் அவற்றையும் தற்போது ப்ராய்லரில் வளர்க்கத் தொடங்கிவிட்டார்கள்.
இன்னும் சில கறிகளை நாம் ஒழுங்காகப் பயன்படுத்துவது கிடையாது. காடைக்கறி பற்றி சர்வதேச ஆராய்ச்சியே உள்ளது. கோழி இறைச்சியை விட சிறந்தது. அதில் உள்ள பிரத்யேக சத்துகள் வேறு எதிலும் இல்லை. இறைச்சிகளில் சிறப்பானது மீன், உடலுக்குத் தேவையான உடனடி சத்து மீனில் மிகப்பெரிய அளவில் உள்ளது. இறைச்சிகளைப் பதப்படுத்துவதில் நிறைய ரசாயனம் சேர்க்கப்படுகிறது. அப்படியல்லாமல் நேரடியாக இறைச்சியைப் பயன்படுத்துவது நல்லது. அதனால் நமக்கு அக்கம்பக்கத்தில் இருக்கும் இறைச்சிக் கடைகளில் கறிகளை வாங்குவது சிறப்பானதாக இருக்கும்”.