Green Gram Snack : ஊட்டச்சத்து நிறைந்த பாசிப்பயறு கொழுக்கட்டைகள்.. செய்முறை இதோ!
ஆரோக்கியமான பாசி பயறு கொழுக்கட்டை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பாசி பயறு - 1 கப்
தேங்காய் துருவல் -அரை கப்
நாட்டுச் சர்க்கரை - முக்கால் கப்
உப்பு - 3 சிட்டிகை
நெய்- 2 டீஸ்பூன்
வாழை இலை 1
பச்சரிசி மாவு இரண்டு கப்
தண்ணீர் தேவையான அளவு
செய்முறை
ப்ரஷர் குக்கரை அடுப்பில் வைத்து சூடானதும், 1 கப் முழு பாசி பயரை அதில் சேர்த்து 3 நிமிடம் வறுத்துக்கொள்ள வேண்டும். பின் அடுப்பை அணைத்து விட்டு அந்த குக்கரில் இரண்டு கப் அளவு தண்ணீர் சேர்த்துக்கொள்ள வேண்டும். அதில் சிறிதளவு உப்பையும் சேர்த்து குக்கரை மூடி 5 விசில் வரும் வரை வேக வைக்க வேண்டும். பின் பாசி பருப்பை ஒன்றும் பாதியுமாக மசித்துக் கொள்ள வேண்டும்.
ஒரு கடாயில் இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்து அது உருகியதும் அரை கப் தேங்காய் துருவலை சேர்த்து வதக்க வேண்டும். இரண்டு நிமிடத்திற்கு பின் அதில் முக்கால் கப் நாட்டுச் சர்க்கரை சேர்த்து மீண்டும் ஒன்று அல்லது இரண்டு நிமிடம் வதக்க வேண்டும். இனிப்பு அதிகம் விரும்புபவராக இருந்தால் 1 கப் நாட்டுச் சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம். பின் மசித்து வைத்துள்ள பாசி பருப்பு மற்றும் சிறிதளவு ஏலக்காய் பொடி சேர்த்து கலந்து விட்டு அடுப்பை அணைத்து விட்டு , இந்த கலவையை ஆற வைக்க வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் இரண்டு கப் பச்சரிசி மாவு எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் சிறிதளவு உப்பும் ஒரு ஸ்பூன் நெய்யும் சேர்த்து மாவை நன்றாக கலந்து விட வேண்டும். இந்த மாவில் கொதிக்க வைத்த சூடான தண்ணீரை சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
வாழை இலைகளை உள்ளங்கையை விட சற்று பெரிய துண்டுகளாக கிழித்து வைத்துக் கொள்ள வேண்டும். இப்போது கையில் எண்ணெய் தடவிக் கொண்டு, மாவில் இருந்து சிறு உருண்டை பிடித்து இதை வாழை இலை மீது வைத்து அடைபோல் மெல்லியதாக தட்ட வேண்டும். இப்போது இதன் நடுவில் 1 ஸ்பூன் அளவு பாசி பருப்பு கலவையை வைத்து வாழை இலையை சாப்பிட்டு விட்டு மடிப்பதுபோல் இரண்டாக மடிக்க வேண்டும். இப்போது உள்ளே இருக்கும் அடை தோசையை இரண்டாக மடித்தது போன்ற வடிவில் இருக்கும்.
இதே போன்று அனைத்து மாவையும் தயார் செய்து அதை இட்லி பாத்திரத்தில் இட்லி அவிப்பது போல் அவித்து எடுத்துக்கொள்ள வேண்டும். அவ்வளவுதான் சுவையான பாசிப்பருப்பு கொழுக்கட்டை தயார். இதன் சுவை மிகவும் அருமையாக இருக்கும்.