12ம் வகுப்பு முடித்திருந்தாலே போதும்! அரசே தரும் இலவச தொழிற்பயிற்சி - எப்படி அப்ளை பண்ணுவது?
தமிழக அரசு தாட்கோ மூலமாக தொழில்நுட்ப பயிற்சியாளர் பணிக்கு பயிற்சி அளிக்கிறது. தகுதியானவர்கள் பயன்படுத்திக் கொள்ளவும்.
தமிழக அரசு மக்களின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. ஒவ்வொரு சமுதாய மக்களின் வளர்ச்சிக்காக அந்தந்த துறைகளின் சார்பில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தொழில்நுட்ப பயிற்சியாளர், பிராட்பேண்ட் டெக்னிஷியன்கள்:
இந்த நிலையில், பட்டியலின மக்களின் வளர்ச்சிக்காக தமிழ்நாடு ஆதிதிராவிட வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகமான தாட்கோ செயல்பட்டு வருகிறது. தாட்கோ மூலமாக ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின சமுதாய மக்களுக்காக பல்வேறு தொழிற்பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.
இதன்படி, தாட்கோ மூலமாக தொழில்நுட்ப பயிற்சியாளர் மற்றும் பிராட்பேண்ட் டெக்னிஷியன்கள் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது. இந்த பயிற்சி பெற 12ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது தொழிற்பயிற்சியான ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். டிப்ளமோ அல்லது ஏதேனும் ஒரு டிகிரி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பது எப்படி?
இந்த திட்டத்தின் கீழ் பயனாளர்கள் ஆதிதிராவிட அல்லது பழங்குடியினர் பிரிவாக கண்டிப்பாக இருக்க வேண்டும். ஆண்டு வருமானம் ரூபாய் 3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். இது குறித்து மேலும் தகவல் அறிந்து கொள்ள www.thadco.com என்ற இணையதளத்தைத் தொடர்பு கொள்ளவும். தாட்கோ மூலமாக தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு நலத்திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு தகுதியான நபர்கள் விண்ணப்பித்து பயன்பெறுமாறும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
அதேபோல, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சமுதாய மக்களுக்காகவும் வேறு சில திட்டங்களும், பயிற்சி வகுப்புகளும் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.