நகங்களை பராமரிப்பது எப்படி? சில வழிமுறைகள்
நகமும் சதையும் சேரும் இடத்தில், சதைக்குக் கீழே மறைந்திருப்பது நக வேர். இந்தப் பகுதியில்தான் நகம் முளைக்கும்
டென்ஷனாக இருக்கும்போது நகத்தைக் கடித்துத் துப்புவதும், மகிழ்ச்சியாக இருக்கும்போது நகப்பூச்சுக்களை பூசுவதும் என அனைத்து மனநிலைக்கும் பலிகடா ஆவது நகங்கள்தான். அழகுக்கு மட்டுமல்ல, ஆரோக்கியத்திற்காகவும் நகங்களை பாதுகாப்புடன் பரமாரிப்பது அவசியமாகும்.
நம் உடலில் ரத்த ஓட்டம் இல்லாத பகுதிகளில் ஒன்று நகம். ' ஆல்ஃபா கெரட்டின்' (Alpha-keratin) என்னும் புரதப் பொருளால் ஆனது. நகம், விரலுக்கு ஒரு கவசம் போன்றது. நகத்தின் மிகப்பெரிய வேலையே விரலின் முனைகளைப் பாதுகாப்பதுதான். நகத்தில் பல பாகங்கள் இருக்கின்றன. இந்த அமைப்புகள் கை மற்றும் கால்விரல் நகங்களுக்குப் பொதுவானவை.
மேற்புறத்தில் பளிச்சென்றும் வழுவழுப்பாகவும் இருக்கும் பாகமே நகத்தின் உறுதியான பாகம். இதில் நரம்புகளும் ரத்தக்குழாய்களும் இல்லை. வெளிநகத்துக்கு அடியில் உள்ள நகத் தளத்திலேயே திசுக்களால் ஆன ரத்த ஓட்டப் படுகை இருக்கிறது. நகத்துக்குத் தேவையான ஊட்டச்சத்தை அளிப்பதே இதன் பிரதானமான பணி. இந்த நகத்தளத்தைத் தாண்டி வளரும் நகப்பகுதியைத்தான் நாம், `வேண்டாம்’ என்று வெட்டிவிடுகிறோம். இது இறந்த நகப்பகுதியாகக் கருதப்படுகிறது. இதற்குக் காரணம், இந்தப் பகுதியை வெட்டும்போது எந்த வலியும் ஏற்படாததுதான்.
நகமும் சதையும் சேரும் இடத்தில், சதைக்குக் கீழே மறைந்திருப்பது நக வேர். இந்தப் பகுதியில்தான் நகம் முளைக்கும். இந்தப் பகுதியை அழுத்தினால் வலி உண்டாகும். அதற்குக் காரணம், நரம்புகளும் ரத்தக்குழாய்களும் இருப்பது.
நகத்தைச் சுற்றியிருப்பது, `U’ வடிவத் தோல் அமைப்பு (Nail fold). நகத்தின் அடியில் காணப்படும் பிறை போன்ற அமைப்பு `லுனுலா’ (Lunula) என்றும், நகத்துடன் இணைந்த தோல் பகுதி `எபோனைச்சியம்’ (Eponychium) என்றும், நகத்தைச் சுற்றியுள்ள உள்ள தோல் `பெரியோனைசியம்’ (Perionychium) என்றும், நகத்தைச் சுற்றியுள்ள மேல்தோலுக்கு `க்யூட்டிக்கிள்’ (Cuticle) என்றும் பெயர்.
நான்கு முதல் எட்டு மாதங்களில் ஒரு நகம் முழுவதுமாக வளர்ச்சியடைந்துவிடும். கோடை காலத்தில் வேகமாக வளரும். ஒரு மாதத்துக்கு, கை விரலில் மூன்று மில்லி மீட்டரும், கால் விரலில் ஒரு மில்லி மீட்டரும் நகம் வளரும்.
ஊட்டச்சத்து குறைபாடு, தொடர்ந்து நோய்வாய்ப்படுதல், சில வகையான மருந்துகளைத் தொடர்ந்து சாப்பிடுதல், வயது முதிர்ச்சி போன்ற காரணங்களால் நகத்தின் வளர்ச்சி குறையும்.
நகங்களைப் பாதுகாக்க,
° அடிக்கடி விரல்களைச் சோப்பு போட்டுக் கழுவி சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். கழுவிய பின்னர் ஈரம் போக நன்றாகத் துடைக்க வேண்டும்.
° நகம் கடிக்கும் பழக்கத்தைத் தவிர்க்க வேண்டும். இதனால், நகத்தில் உள்ள கிருமிகள் வாய்க்கும், வாயில் உள்ள கிருமிகள் நகத்துக்கும் செல்லும்.
° கெமிக்கலைப் பயன்படுத்தும்போது தகுந்த கையுறைகளை அணியவேண்டும்.
° நகப்பூச்சு பயன்படுத்துபவர்கள், அடிக்கடி பாலீஷ் ரிமூவரைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம்.
° வறண்ட நகம் கொண்டவர்கள் பாலிஷுக்குப் பதிலாக மாய்ச்சுரைசரைப் பயன்படுத்தலாம்.
° பாட்டில் மூடி, டப்பாக்களைத் திறப்பதற்கு நகங்களைப் பயன்படுத்த வேண்டாம்.
° நீளமாக நகம் வளர்ப்பதைத் தவிர்க்கலாம். இது பல காயங்களுக்கு வழிவகுக்கும்.
° சரியான அளவு ஷூ, செருப்பைப் பயன்படுத்த வேண்டும்.
° நகவெட்டியைக் கொண்டு நகங்களை வெட்டலாம். பிளேடு, கத்தரிக்கோல், கத்தி போன்றவற்றைக் கொண்டு நகம் வெட்டுவதைத் தவிர்க்க வேண்டும்.
° நகங்களின் நிறத்திலும் வளர்ச்சியிலும் திடீரென மாற்றம் இருந்தால், உடனடியாக மருத்துவரின் ஆலோசனை பெறுவது நல்லது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )