ஜம்முவில் அதிகரிக்கும் டெங்கு; தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் அதிகாரிகள்!
ஜம்மு கோட்டத்தில் அதிகரித்து வரும் டெங்குவைக் கட்டுப்படுத்த மலேரியாலஜிஸ்ட் அலுவலகம் மற்றும் குடிமை அமைப்புகள் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன.
ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில், தடுப்பு நடவடிக்கைகளை சுகாதாரத்துறை தீவிரப்படுத்தியுள்ளது.
மழைக்காலம் தொடங்கினாலே கொசுக்களினால் ஏற்படும் வைரஸ் காய்ச்சலுக்கு பஞ்சமே இருக்காது. இதனைக்கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தாலும் அதில் எந்தவித பலனும் இல்லை என்று தான் கூறவேண்டும். ஏற்கனவே கொரோனா தொற்றின் தாக்கத்திலிருந்து இன்னும் மீளமுடியாமல் சுகாதாரத்துறை தவித்துவரும் நிலையில், தற்போது ஜம்முவில் வேகமாக பரவிவரும் டெங்குகாய்ச்சலைக் கட்டுப்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் திணறி வருகின்றனர். குறிப்பாக கடந்த சில நாள்களாக ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்துள்ளது. இதில் 659 பேர் ஜம்மு மாவட்டத்தில் உள்ளவர்கள். இதில் கதுவாவில் 194 பேர் மற்றும் சம்பாவில் 94 பேருக்கு டெங்கு காய்ச்சல் பதிவாகியுள்ளது. மேலும் யூனியன் பிரதேசத்தில் மொத்தம் 1,078 பேருக்கு டெங்கு காய்ச்சல் பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போது தான் கொரோனா தொற்றின் தாக்கம் சற்று குறைந்து மக்கள் பெருமூச்சுவிடும் சமயத்தில் தற்போது பரவிவரும் டெங்கு காய்ச்சல் மக்களுக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது. எனவே இந்த அச்சுறுத்தலைக்கட்டுப்படுத்த ஜம்மு காஷ்மீரில் தடுப்பு நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் ஒரு பகுதியாக நோயறிதல் வசதிகளுடன் கூடிய பத்து கண்காணிப்பு மருத்துவமனைகள் பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளது. இதோடு ஜம்மு கோட்டத்தில் அதிகரித்து வரும் டெங்குவைக் கட்டுப்படுத்த மலேரியாலஜிஸ்ட் அலுவலகம் மற்றும் குடிமை அமைப்புகள் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. இந்த தடுப்பு நடவடிக்கையில் ஜம்மு முனிசிபல் கார்ப்பரேஷனுடன் இணைந்து, ஜம்மு நகர்ப்புறங்களில் உள்ள 75 வார்டுகளில் கொசுக்களைக் கொல்லும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதேபோல சம்பா, கதுவா மற்றும் உதம்பூர் போன்ற பிற மாவட்டங்களிலும் இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்படி பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்திவருகிறது.
இது ஒருபுறம் இருந்தாலும், தமிழகத்தில் கடந்த ஆண்டைக்காட்டிலும் இந்தாண்டு டெங்கு காய்ச்சல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சமீபத்திய புள்ளி விபரங்கள் மூலம் தெரியவருகின்றது. நல்ல தண்ணீரின் மூலம் உற்பத்தியாகும் ஏடிஸ் கொசுக்களால் தான் டெங்கு காய்ச்சல் பரவும் நிலையில், மக்களுக்கு இதுக்குறித்த விழிப்புணர்வு வார்டு வார்டாக மக்களுக்கு ஏற்படுத்தப்பட்டுவருகிறது. மேலும் டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் உங்களுக்கு தென்பட்டால் உடனடியாக எந்த தடுப்பு மருந்தையும் உட்கொடுக்கக்கூடாது எனவும், மருத்துவரின் ஆலோசனையின் பேரில் டெங்கு காய்ச்சலைத் தடுப்பதற்கான மருந்தினை உட்கொள்ள வேண்டும் என அதிகாரிகள் மக்களுக்கு பரிந்துரைக்கின்றனர். குறிப்பாக மூன்று நாள்கள் கடுமையான காய்ச்சலுடன் 7 நாள்களுக்கு காய்ச்சல் நீடிக்கும் என்பதால் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )