கொரோனா தொற்று Vs கோவிட் தடுப்பூசி - ஏற்படுத்தும் அறிகுறிகளும் அதன் வேறுபாடுகளும் என்ன?
கொரோனா வைரஸ் ஏற்படுத்தும் பாதிப்பின் அறிகுறிகளைப் போலவே, கோவிட் தடுப்பூசி செலுத்தியவுடன் உடலில் சில அறிகுறிகள் தென்படுகின்றன.
கோவிட் - 19 நோயை ஏற்படச் செய்யும் கொரோனா வைரஸ் தாக்குதலால் உலகம் முழுவதும் பல்வேறு மாறுதல்கள் உருவாகியிருக்கின்றன. கொரோனா வைரஸ் தாக்குதல் சிலருக்கு அறிகுறி எதுவும் இல்லாத நிலையிலும், சிலருக்கு மிதமான அறிகுறிகளோடும், சிலருக்குத் தீவிர அறிகுறிகளையும் ஏற்படுத்தி, பாதிப்படையச் செய்கிறது.
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காகவும், பாதிக்கப்படுபவர்களின் நலனுக்காகவும் உலகம் முழுவதும் பல்வேறு வகை தடுப்பூசிகள் பரிந்துரை செய்யப்படுகின்றன. கொரோனா வைரஸ் ஏற்படுத்தும் பாதிப்பின் அறிகுறிகளைப் போலவே, தடுப்பூசி செலுத்தியவுடன் சில அறிகுறிகள் தென்படுகின்றன. அவற்றிற்கு இடையிலான வேறுபாடுகளை அறிந்துகொள்ள வேண்டும்.
கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட பிறகு, முதன்மை அறிகுறிகளாக காய்ச்சல், சோர்வு, உடல் வலி முதலானவற்றோடு சுவை, வாசனை ஆகியவற்றை உணரும் திறன் குறைவதும் ஏற்படுகின்றன. கொரோனா தொற்றில் இருந்து தப்பிக்க நாம் எடுத்துக் கொள்ளும் தடுப்பூசிகளும் உடலில் இதே போன்ற அறிகுறிகளை வெளிப்படுத்தினாலும், தற்போது பரவிவரும் டெல்டா வகை வைரஸ் பாதிப்பு, தடுப்பூசிகளால் தடுக்கப்படும் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.
தடுப்பூசிகளால் உருவாகும் அறிகுறிகள் மிதமானவையாகவும், பெரியளவிலான சிக்கல்களை ஏற்படுத்தாதவையாகவும் இருக்கின்றன. தடுப்பூசி செலுத்திக் கொண்ட பெரும்பாலானோர் காய்ச்சல், சோர்வு, உடல் வலி, தலை வலி முதலான அறிகுறிகளை அனுபவித்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றைப் போல அல்லாமல், தடுப்பூசி உருவாக்கும் அறிகுறிகள் ஒன்று அல்லது இரண்டு நாட்களில் குணமாகும் தன்மையைக் கொண்டது. சுவை, வாசனை ஆகியற்றை உணரும் திறன்கள் குறையும் அறிகுறி தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் போது வருவதில்லை எனவும் கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் போலவே தடுப்பூசிகளுக்கான மருந்தும் உருவாக்கப்பட்டிருப்பதால், ஒரே வகையிலான அறிகுறிகள் ஏற்படுகின்றன. மேலும், கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படும் போது, உடலுக்குள் நோய் எதிர்ப்புச் சக்தியால் நிகழும் அதே மாற்றங்கள், தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் போதும் நிகழ்கின்றன. இதனால், கொரோனா தொற்றும், தடுப்பூசியின் அறிகுறிகளும் ஒரே மாதிரியானவையாகத் தோன்ற, பலருக்கும் அச்சத்தை ஏற்படுத்துகிறது.
கொரோனா தொற்று பல்வேறு நீண்ட கால நோய்களை உற்பத்தி செய்வதாகப் பல்வேறு மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இதய நோய்கள், சுவாசம் தொடர்பான நோய்கள் முதலானவை கொரோனா ஏற்படுத்தும் நீண்ட காலத் தாக்கமாக கண்டறியப்பட்டுள்ளன. எனினும், தடுப்பூசிகள் செலுத்திக் கொள்வது, கொரோனா தொற்றைப் போல நீண்ட கால நோய்களைத் தராமல், உடல் நலத்தைக் காப்பதாக அமைந்திருக்கிறது.
இந்தியாவில் கோவேக்ஸின், கோவிஷீல்ட், ஸ்புட்னிக் வி ஆகிய தடுப்பூசிகள் மக்கள் பயன்பாட்டிற்காக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் செலுத்தப்படுகின்றன. இந்திய மக்கள் தொகையில் ஏறத்தாழ 8 சதவிகித மக்கள் தடுப்பூசிகளை இரண்டு தவணைகளுக்கும் செலுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )