சோலோ கிரியேட்டர்ஸ் VS கார்ப்பரேட் கிரியேட்டர்ஸ்.. சண்டை செய்யும் YouTube குழுக்கள்.. யாரு பாஸ் இவங்க?
அர்ச்சனா பதிவிட்ட பாத்ரூம் வீடியோ - யூட்டியூப் ட்ரோல் செய்த யூட்டியூபர்கள்.. என நீள்கிறது..
கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளமான யூட்டியூப் பக்கதில் "Solo creators vs Corporate creators" என்ற பெயரிலான கருத்து மோதல்கள் அதிகரித்தவண்ணம் உள்ளது. பிரபல யூட்டியூபர்களான மதன் கௌரி, இர்ஃபான் உள்ளிட்டவர்களும் இதில் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். முதலில் சோலோ க்ரியேட்டர்ஸ் மற்றும் கார்ப்பரேட் கிரியேட்டர்ஸ் என்பவர்கள் யார் என்பது குறித்து பார்க்கலாம்.
சோலோ கிரியேட்டர்ஸ் என்பவர்கள் தங்கள் சேனலின் ஆல் இன் ஆலாக இருப்பார்கள். அதாவது அவர்களுக்கான கேமரா வேலைகள், எடிட்டிங் வேலைகள், ஸ்க்ரிப்ட் எழுதுவது உள்ளிட்ட அனைத்து வேலைகளையும் தனி ஒரு ஆளாக செய்து முடிப்பார்கள்.
கார்ப்பரேட் கிரியேட்டர்ஸ் என்பவர்கள் ஒரு குழுவிற்கு கீழே செயல்படுபவர்கள் என கூறப்படுகிறது. இவர்களுக்கான வேலைகளை செய்வதற்கு தனித்தனி ஆட்கள் நியமிக்கப்பட்டிருப்பார்கள்.
சோலோ கிரியேட்டர்ஸ் VS கார்ப்பரேட் கிரியேட்டர்ஸ்
கொரோனா சூழல் காரணமாக திரைத்துறையை சார்ந்தவர்கள் உட்பட பல பிரபலங்கள் யூடியூப் பக்கம் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். பிரபல சின்னத்திரை தொகுப்பாளரான அர்ச்சனாவும் தன் மகள் மற்றும் தங்கையுடன் இணைந்து "வாவ் லைஃப்" என்ற யூடியூப் சேனலை நடத்திவருகிறார். இதில் ஒரு வாரத்திற்கு முன்பாக "பாத்ரூம் டூர்" என்ற பெயரில் வீடியோ ஒன்றினை பதிவேற்றியிருந்தார். அந்த வீடியோவில் அர்ச்சனா மற்றும் அவரது மகள் இருவரும் , தங்களது வீட்டில் உள்ள பகட்டான பாத்ரூமை எப்படி பராமரிக்கிறார்கள் என விளக்கியிருந்தனர்.
அதன்பிறகு சோலோ கிரியேட்டர்ஸ் பலரும் தங்களது யூட்டியூப் பக்கங்களில் அர்ச்சனாவைக் கிண்டலடித்தும், trolls செய்தும், அவர்களது பாணியில் வீடியோக்களை வெளியிட்டிருந்தனர். இதில் "தி பிரியாணி மேன்" என்ற பெயரில் யூட்டியூப் சேனலை நடத்திவரும் அபிஷேக்கும் ஒருவர். இவர் அர்ச்சனாவை குறித்து வெளியிட்டிருந்த வீடியோ மட்டும், கடந்த சில நாட்களுக்கு முன்பு யூட்டியூப் நிறுவனத்தால் நீக்கப்பட்டிருந்தது. முதலில் வடிவேலு நகைச்சுவை வசனங்களை பயன்படுத்தியதால் "காப்பி ரைட்ஸ் " பிரச்சனை வந்திருந்திருக்கலாம் என நினைத்த அவருக்கு பின்னர் அர்ச்சனாவின் வீடியோவை பயன்படுத்தியற்காக காப்பி ரைட்ஸ் க்ளைம் செய்திருப்பது தெரியவந்தது. பின்னர் இதுகுறித்து கண்டனங்களை தெரிவித்து வீடியோ ஒன்றினை பதிவிட்டிருந்தார். அதேபோல அர்ச்சனாவை கிண்டலடித்த மற்ற சோலோ கிரியேட்டர்ஸின் நிலையும் இதுதான் .
இரண்டு முறை காப்பி ரைட்ஸில் சிக்கிய சில சோலோ கிரியேட்டர்ஸ், அர்ச்சனாவால் மூன்றாவது முறை காப்பி ரைட்ஸுக்கு உட்பட்டு தங்கள் சிறிய சேனலை பறிகொடுத்துள்ளனர். இது தங்களின் "சுதந்திரத்தை முடக்குவது போல உள்ளது” என்றும், "ஒரு independent தளத்தில் ட்ரால் செய்யக்கூடாது என அர்ச்சனா காப்பி ரைட்ஸ் கொடுத்திருப்பது சோலோகிரியேட்டர்ஸை முடக்கும் செயல் என்றும்" பல யூட்டியூபர்ஸ் கண்டன முழக்கம் எழுப்பியுள்ளனர். மேலும் தங்களுக்கு கிடைக்கும் சிறிய விளம்பரங்களை கூட இத்தகைய கார்ப்பரேட் கிரியேட்டர்ஸ் நுழைந்து முடக்கிவிட்டதாக அவர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் இதற்கு விளக்கம் அளித்துள்ள அர்ச்சனா, "ட்ரால் செய்யப்படும் வீடியோக்கள் தகாத முறையில் இருந்தன, வீடியோவிற்கு கீழே உள்ள கமெண்ட்டுகளில், என்னையும் என் கணவரையும் இழிவாக பேசுகின்றனர். மேலும் சிறுமி என்றும் பாராமல் எனது மகளை தகாத வார்த்தைகளால் பேசுவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை, இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கமுடியாது என்பதால் காப்பி ரைட்ஸ் மூலம் நான் பதிலடி கொடுக்க விரும்பினேன் என தெரிவித்துள்ளார். ஆனால் இந்த காப்பி ரைட்ஸ் ஸ்ட்ரைக் மூலம் அர்ச்சணாவின் வீடியோவின் வீடியோவைப்பற்றி ஆரோக்கியமான ட்ரால் வீடியோக்களை பதிவிட்டவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு வருத்தம் தெரிவித்த அர்ச்சனா, தனிப்பட்ட முறையில் அவர்களிடம் பேசி வருவதாக தெரிவித்தார். அதில் "தி பிரியாணி மேன்" சேனல் அபிஷேக்கும் ஒருவர். பிரச்சனையை தொடங்கி வைத்தது அபிஷேக்தான் என்றாலும், அர்ச்சனாவும் அபிஷேக்கும் பேச்சுவார்த்தைக்கு பிறகு கிட்டத்தட்ட சமாதான உடன்படிக்கைக்கு வந்துவிட்டனர். ஆனால் மற்ற சோலோ கிரியேட்டர்ஸ்களோ இதற்கு முற்றுப்புள்ளி வைப்பதாக தெரியவில்லை.