Shocking Death 2021 | 2021-இல் அதிர்ச்சி கொடுத்த பிரபலங்களின் மரணங்கள்..!
2021-ஆம் முடியும் தருவாயில் தற்போது நாம் இருந்துகொண்டிருக்கிறோம். இந்தத் தருணத்தில் கொரோனா மற்றும் மற்ற பாதிப்பால் உயிரிழந்த பிரபலங்கள் யார்..? யார்..? என பார்க்கலாம்
2020-ஆம் ஆண்டில் கொரோனவால் மக்கள் மீள துயரத்தில் இருந்து, படிப்படியாக அதில் இருந்து மீண்டு வந்து 2021-ஆம் ஆண்டை மிகவும் மகிழ்ச்சியுடன் தொடங்குவோம் என்று எண்ணி அந்த ஆண்டை வரவேற்றனர். ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் நான்கு மாதங்களை கடந்த மக்கள், மே மாதம் கொடிய கொரோனாவின் இரண்டாம் அலையில் சிக்கி சின்னபின்னம் ஆகுவோம் என்று அப்போது அறிந்திருக்கவில்லை. முதல் அலையோடு, கொரோனா வராது என்ற நினைப்போடு இருந்த மக்களுக்கு மூன்றாவது அலை பேரலையாக மாறியது. இந்தப் பேரலையில், முதல் அலையில் ஏற்பட்ட மரணங்களை விட, இரண்டாம் அலையில் அதிக பலி வாங்கிய கொடூர அரக்கனாக கொரோனா மாறியது.
இதில், குறிப்பாக யாரும் சினிமா உலகை சேர்ந்த பிரபல நடிகர், நடிகைகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் அதிகமானோர் கொரோனாவுக்கு பலியானது. திரையுலக மட்டுமல்லாமல், பொதுமக்களையும் அதிக அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இவர்கள் எல்லாம், கொரோனாவால் இறந்துபோய்விட்டார்களா? என்று ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியுடன் மக்கள் இருந்தனர். அதன்பிறகே, கொரோனாவின் வீரியமும், வேகமும் பொதுமக்களுக்கு தெரிய வந்தது என்றும் கூறலாம்.
2021 முடியும் தரும் வரையில் தற்போது நாம் இருந்துகொண்டிருக்கிறோம். இந்தத் தருணத்தில் கொரோனா மற்றும் மற்ற உடல்நல பாதிப்புகளால் உயிரிழந்த பிரபலங்கள் யார்..? யார்..? என்பதை தெரிந்துகொள்ளலாம்.
இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன்
இயற்கை, பேராண்மை உள்ளிட்ட சிறந்த படங்களை இயக்கிய எஸ்.பி. ஜனநாதன், அடுத்து தன்னுடைய ‘லாபம்’ பட வெளியீட்டிற்கு மும்முரமாக வேலை செய்து வந்த நிலையில், மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு கடந்த மார்ச் 14-ஆம் உயிரிழந்தார்.
நடிகர் விவேக்
சின்னக்கலைவாணர் விவேக்கின் மரணம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களுக்கும் பேராதிர்ச்சியை கொடுத்தது. கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி, கொரோனா பெருந்தொற்று பரவாமல் இருக்க தடுப்பூசியை செலுத்திக் கொள்வதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்த தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகும், கொரோனா வரும். ஆனால், உயிரிழப்பு என்பது ஏற்படாது என, கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நடிகர் விவேக் பேசினார். மறுநாள் திரைப்பட படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்த விவேக்குக்கு திடிரென நெஞ்சுவலி ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பலனின்றி உயிரிழந்தார். இதற்கு, கொரோனா தடுப்பூசி காரணம் என்று ஒரு வதந்தி. ஆனால், தமிழ்நாடு சுகாதாரத்துறை அதற்கு மறுப்பு தெரிவித்து, விவேக் மாரடைப்பாலே உயிரிழந்தார் என தெரிவித்தது.
இயக்குநர் கே.வி.ஆனந்த்
ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான கே.வி.ஆனந்த் திடீர் மறைவு சினிமாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடல்நலக்குறைவால் மருத்துவமனைக்கு சென்ற அவருக்கு கொரோனா உறுதியாகி, பின்னர் உயிரிழந்தார்.
எழுத்தாளர், இயக்குநர் தாமிரா
இரட்டைசுழி, ஆண் மகன் படத்தை இயக்கிய தாமிரா கடந்த ஏப்ரல் 27ஆம் தேதி கொரோனா தொற்றால் உயிரிழந்தார். இவருடைய மறைவு எழுத்தாளர்களுக்கும், இளம் இயக்குநர்களுக்கும் பேரதிர்ச்சியை கொடுத்தது.
நடிகர் நிதிஷ் வீரா
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த இளம் நடிகர் நிதிஷ் வீரா கொரோனாவுக்கு கடந்த மே 17-ஆம் தேதி உயிரிழந்தார். இவர், புதுப்பேட்டை, வெண்ணிலா கபடி குழு, காலா, அசுரன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இதேபோல், நெல்லை சிவா (மாரடைப்பு), பிரபல தயாரிப்பாளர் சேலம் சந்திரசேகரன், பழம்பெரும் நடிகர் ஜோக்கர் துளசி, கில்லி, தலைநகரம் படத்தில் நடித்த மாறன், ரேணிகுண்டா, பில்லா 2 படத்தில் நடித்த தீப்பெட்டி கணேசன், நடிகர் காளிதாஸ், நடிகர் பால சரவணனின் தந்தை மற்றும் மைத்துனர், இயக்குநர் ,நடிகர் அருண்ராஜா காமராஸ் மனைவி, நடிகர் ஹம்சவர்தனின் மனைவி சாந்தி ஹம்சவர்தன் மனைவி சாந்தி, நடன இயக்குநர் சிவசங்கர், காதல் படத்தில் நடித்த பல்லு பாபு, தொரட்டி திரைப்பட ஹீரோ ஷமன் மித்ரு, ‛ஒவ்வொரு பூக்களுமே’ பாடல் புகழ் கோமகன், அம்மா கிரியேஷன்ஸ் வெங்கட் சுபா, நடிகர் பாண்டு, நடிகர் ஃப்ளோரன்ட் பெரைரா, பழம்பெரும் நடிகர் கல்தூண் திலக், சீரியல் நடிகர் குட்டி ரமேஷ், மெட்டி ஒலி புகழ் உமா மகேஸ்வரி (உடல்நலம்), சீரியல் நடிகர் வெங்கடேஷ், நடிகை கவிதாவின் மகன், கணவர் உள்ளிட்டோரை கொரோனா மற்றும் பிற உடல்நலக் காரணகளால் இந்தாண்டு உயிரிழந்தனர். கடைசியாக இயக்குநரும், நடிகருமான ஆர்.என்.ஆர்.மனோகர், கொரோனாவுக்கு பலியாகியுள்ளார்.
கன்னட திரையுலகில் பிரபல நடிகர் புனீத் ராஜ்குமாரின் திடீர் மறைவு ஒட்டுமொத்த இந்திய திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அவர் இறந்ததற்கு பிறகுதான், மற்ற மாநிலங்களில் அவர் எப்பேர்பட்ட மனிதநேயர், நடிகர் என்று தெரியவந்தது.