World Ocean Day: கடலும் காதலும்... கடலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட தமிழ் திரைப்படங்கள்!
இன்று உலகம் முழுவதும் கடல் தினம் கொண்டாடப்படும் நிலையில், கடலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படங்களைப் பற்றி பார்க்கலாம்.
ஆண்டுதோறும் ஜூன் 8ஆம் தேதி கடல் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. குழந்தைகள் தொடங்கி வயதானவர்கள் வரை கடலில் கால் நனைத்து விளையாடுவதை மகிழ்ச்சியாக அனுபவிக்காதர்களை விரல் விட்டு எண்ணலாம். இந்த உணர்ச்சி தமிழ் சினிமாவுக்கும் விதிவிலக்கல்ல! அந்த வகையில் கடலை மையப்படுத்தி, கடல்புரத்து மக்களின் வாழ்வியலை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட தமிழ் திரைப்படங்களைப் பார்க்கலாம்!
இயற்கை
இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன் இயக்கிய திரைப்படம் ‘இயற்கை’. ஷியாம், அருண் விஜய் , குட்டி ராதிகா , செந்தில் , கருணாஸ் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்திருந்தார்கள்.
மருது ( ஷியாம்) என்கிற இளைஞன் நான்சி என்கிற பெண்ணின் மீது காதல் கொள்கிறான். ஆனால் நான்சி என்றோ ஒரு நாள் சந்தித்த கேப்டன் முகுந்தன் (அருன் விஜய்) மீது காதல் கொண்டிருக்கிறார். முகுந்தன் திரும்பி வருவார் என்கிற நம்பிக்கையில் அவருக்காக காத்திருக்கிறார். இந்தக் காதலை கடல் சூழ எடுத்த திரைப்படம் இயற்கை. மேலும் இப்படம் வெண்ணிற இரவுகள் என்கிற தாஸ்தயேவ்ஸ்கியின் புகழ்பெற்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது. ராமேஸ்வரம் கடற்கரையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இத்திரைப்படத்தின், ஒவ்வொரு காட்சியிலும் கடல் காற்று, கடல் அலைகளின் ஓசை பார்வையாளர்களை எதார்த்தத்திற்கு நெருக்கமாக உணரவைக்கக் கூடியது.
நீர்ப்பறவை
சீனு ராமசாமி இயக்கிய மிகச் சிறந்த படமாகக் கொண்டாடப்படும் திரைப்படம் ‘நீர்ப்பறவை’. விஷ்ணு விஷால், சுனைனா, நந்திதா தாஸ், ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். அருளப்பசாமி ( விஷ்ணு) என்கிற குடிகாரனாக சுற்றும் இளைஞன் எஸ்தர் என்கிற பெண்ணின் மீது காதல் கொள்கிறான். அவளுக்காக குடிப்பழக்கத்தை கைவிடுகிறான். அவளைத் திருமணம் செய்துகொண்டு கடலுக்கு மீன்பிடிக்கச் செல்கிறார். ஆனால் அவரது சாதி காரணமாக அவரை மீன்பிடிக்க அனுமதிக்க மறுக்கிறார்கள் ஊர்க்காரர்கள். அதனால் சொந்தமாக படகு வாங்கி மீன் பிடிக்க செல்கிறார். ஆனால் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றவன் ஒரு நாள் வீடு திரும்பவில்லை. நிச்சயம் ஒரு நாள் திரும்பி வருவார் என்று அவருக்காக அவரது மனைவி கடற்கரையில் காத்துக்கொண்டிருக்கிறார்.
மரியான்
பாலிவுட்டில் ஹரி ஓம் என்கிற படத்திற்காக தேசிய விருது வென்ற இயக்குநர் பரத்பாலா தமிழில் இயக்கிய படம் மரியான். தனுஷ், பார்வதி திருவோத்து , விநாயகம், அப்புகுட்டி, ஆகியோர் இப்படத்தில் நடித்திருந்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் நீரோடி கிராமத்து மீனவர் மரியான் (தனுஷ்). மரியான் என்றால் மரணம் இல்லாதவன் என்று பொருள்.
தனது சொந்த உழைப்பில் கடல் ராசாவாக வாழ்ந்து கொண்டிருக்கும் மரியான் தனது காதலியின் கடனை அடைப்பதற்காக ஒப்பந்தத் தொழிலாளியாக ஆப்பிரிக்கா செல்கிறார். அங்கு புரட்சி கும்பல் ஒன்றால் கடத்தப்படுகிறார் மரியான். அங்கிருந்து தப்பித்து மீண்டும் தன்னுடைய நிலத்திற்கு வரும் போராட்டம் தான் இந்தப் படத்தின் கதை. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்த இந்தப் படத்தில் பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகின.
கடல்
இயக்குநர் மனிரத்னம் இயக்கிய திரைப்படம் கடல். கெளதம் கார்த்திக் மற்றும் நடிகை ராதாவின் மகளான துளசி இருவரும் இந்தப் படத்தின் மூலம் நடிகர்களாக அறிமுகமாகினர். இவர்களுடன் இணைந்து அர்ஜுன், அரவிந்த் சாமி ஆகியோர் நடித்திருந்தனர். மணிரத்னம் இயக்கிய திரைப்படங்களில் பெரும் தோல்வியடைந்த படங்களில் ஒன்று கடல். உறுதியான ஒரு கதைக்களத்தைக் கொண்டிருந்தாலும் திரைக்கதை படத்தின் பலவீனமாக அமைந்தது.