தொடர் சர்ச்சைகளில் சிக்கும் பிரபல ராப் பாடகர்..யார் இந்த வேடன்?
பிரபல மலையாள பாடகர் வேடன் அண்மையில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு மக்கள் இடையில் மேலும் ஆதரவு வலுத்துள்ளது.யார் இந்த வேடன்?

யார் இந்த வேடன்
பிரபல மலையாள ராப் பாடகர் வேடன் சமீபத்தில் 6 கிராம் கஞ்சா வைத்திருந்ததாக கேரள போலீஸால் கைது செய்யப்பட்டார். இந்த நிகழ்விற்கு பிறகு சமூக வலைதளத்தில் மலையாளம் மற்றும் தமிழ் ரசிகர்கள் வேடனுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.
சமீபத்தில் இந்த பெயர் கேரளம், ஈழ மக்கள், தமிழ்நாடு என தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. வேடன் பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர். வேடனின் அம்மா ஈழ தமிழர், ஈழத்தில் இருந்து ஊட்டிக்கு சென்று பின் கேரளாவில் குடிபெயர்ந்து ஒரு மலையாளியை திருமணம் செய்துகொண்டார். இவரது மகன் தான் வேடன் என்கிற ஹிரன்தாஸ் முரளி பிறக்கிறார்.
இனத்தால் , நிறத்தால் , சாதியால் பல ஒடுக்குமுறைகளை சந்தித்து வளரும் ஹிரன்தாஸ் ராப் பாடல்களின் மீது ஆர்வம் கொள்கிறார். ராப் பாடல்களை எழுதி அதை பாடி தானே பயிற்சி எடுத்துக் கொள்கிறார். சாதி, மதம், இடதுசாரி, வலதுசாரி, அரசியல் என எல்லாவற்றையும் உள்வாங்கி "வேடனாக" தனக்கு தானே பெயர் சூட்டிக்கொண்டு Rapper ஆக உருவெடுக்கிறார்.
வேடனின் பாடல்கள் சாதி, மதம், பிரிவினைக்கு எதிரான வரிகளை மையமாக கொண்டவையாக இருந்தபடியால் சமூக வலைதளங்களில் அவருக்கு இளம் தலைமுறையினரிடம் பரவலான வரவேற்பு கிடைத்தது. 'குரலற்றவர்களின் குரல்' என ஒரு இசைக்குழுவை உருவாக்கி அதன் மூலம் பல பாடல்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வந்தார். கேரளாவில் மட்டுமில்லாமல் தமிழிலும் அவருக்கு பரவலாக ரசிகர்கள் பெருகினர்.
ஈழ போராட்டத்தை, பாலஸ்தீனத்தை ஆதரித்து பாடுகிறார். எங்கெங்கு யார் யார் ஒடுக்கப்படுகிறார்களோ அவர்களுக்காக பாடுகிறார். இவரது பாடல்கள் பெரும்பாலும் வலதுசாரிகளை கேள்வி கேட்கும் விதமாக அமைந்திருப்பவை.
வேடன் கைது செய்யப்பட்டது ஏன் ?
கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி கொச்சியில் வேடன் கைது செய்யப்பட்டார். 6 கிராம் கஞ்சா வைத்திருந்ததற்காக வேடன் உட்பட அவருடன் 8 நண்பர்கள் கைது செய்யப்பட்டார்கள். வேடனுக்கு ஆதரவாக கேரள இளைஞர்களும், கேரளத்தை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டும் நிற்க மேலும் பரவலான மக்கள் கவனத்தை ஈர்த்தார். மேலும் வேடன் கழுத்தில் புலி நகத்தை அணிந்திருந்தததால் புலியை வேட்டையாடினாரா என்கிற கோணத்தில் விசாரணை தொடங்கியது. தான் அணிந்திருந்த புலி நகம் தனது நண்பரால் தனக்கு பரிசளிக்கப் பட்டதாக வேடன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சாதி , மதத்தை வைத்து பிரிவினைவாத அரசியல் செய்பவர்களுக்கு எதிராக தொடர்ச்சியாக தனது பாடல்களில் வழியாக குரல் கொடுத்து வருகிறார் வேடன். அவருடன் தற்போது ஒட்டுமொத்த கேரள இளைஞர்களும் இணைந்து நிற்கிறார்கள்.




















