விக்ரம், துருவ், அர்ஜுமன் மூவரில் சிறந்தவர் யார்? - சியான் விக்ரம் தங்கை அனிதா பதில்!
விக்ரமின் தங்கை அனிதா சமீபத்தில் கலந்துகொண்ட ஒரு யூட்யூப் இன்டர்வ்யூவில் விக்ரம், துருவ் மற்றும் அவரது மகன் அர்ஜுமன் மூவரில் சிறந்த நடிகர் யார் என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார்.
இயக்குனர்கள் பாலா, ஷங்கர் என தமிழ் சினிமாவின் முன்னணி ஹிட் பட இயக்குனர்களின் திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகர் விக்ரம், ஏராளமான ரசிகர்களை தனது நடிப்பாற்றலால் கவர்ந்தவர். தனக்கே உரிய பாணியில் உடலை, ஒவ்வொரு திரைப்படத்திற்கும் ஏற்ப தகவமைத்துக் கொள்வதில் வல்லவர். தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ‘மகான்’. இப்படத்தில் விக்ரமும், அவரது மகன் துருவ் விக்ரமும் முதன்முறையாக இணைந்து நடித்துள்ளனர். கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் வருகிற நவம்பர் மாதம் தீபாவளி பண்டிகையன்று ரிலீசாக உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆதித்ய வர்மா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமான துருவ் விக்ரம் அதற்கு அடுத்தடுத்த தரமான கதைகளை அப்பா விக்ரம் தேர்வு செய்து நடிக்க வைத்து வருகிறார். சினிமாவில் தன்னை போலவே மகன் துருவ்வையும் நல்ல நடிகராக ஆக்க வேண்டும் என்ற முனைப்பில் முன்னணி இயக்குனர்களிடம் கதை கேட்டு நடிக்க வைத்து வருகிறார். விக்ரமின் தங்கை அனிதாவின் மகன் அர்ஜுமன் முரளி பொல்லாத உலகில் பயங்கர கேம் (PUBG) என்னும் படத்தில் நடித்து வருகிறார். விஜய் ஸ்ரீ இயக்கி வரும் பப்ஜி படத்தில் பிக் பாஸ் 2 நிகழ்ச்சி புகழ் ஐஸ்வர்யா தத்தாவுடன் இணைந்து நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் அர்ஜுமனின் அம்மா அதாவது நடிகர் விக்ரமின் தங்கையிடம் ஒரு யூட்யூப் இன்டர்வ்யூவில் கேட்கப்பட்ட கேள்விக்கு ஸ்வாரஸ்யமான கேள்விக்கு பதில் அளித்து இருக்கிறார். விக்ரம், துருவ், அர்ஜுமன் இவர்கள் மூவர் யார் சிறந்த நடிகர் என்ற கேள்விக்கு கொஞ்சம் கூட யோசிக்காமல், 'எப்பொழுதும் என் அண்ணா தான்' என்று பதில் அளித்துள்ளார்.
பிரம்மாண்ட பொருட்செலவில் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலைத் தழுவி உருவாகிவரும் பொன்னியன் செல்வன் திரைப்படம் இப்பொழுது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது, அதில் விக்ரம் ஆதித்ய கரிகாலனாக நடித்துள்ளார். கௌதம் மேனனுடன் விக்ரம் இணைந்து பணியாற்றிய துருவநட்சத்திரம் நீண்டகாலமாக வெளியாகாமல் கிடப்பில் போடப்பட்டிருந்தது. ஹாலிவுட் படங்கள் போல செம ஸ்டைலிஸாக உருவாகி வந்த இந்த படத்தின் டீசர் மற்றும் டிரைலர் மட்டுமே இதுவரை வெளியாகி உள்ளது. இது மட்டுமின்றி கோப்ரா,மகான் உள்ளிட்ட படங்கள் விக்ரமுக்கு அடுத்தடுத்து வெளியாக உள்ளன. தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வரும் விக்ரம் அடுத்ததாக பா ரஞ்சித் இயக்கும் சூப்பர் ஹீரோ திரைப்படத்தில் நடிக்க இருந்தார். ஆனால் அந்த திரைப்படம் தொடங்க கொஞ்சம் தாமதமாகும் என்பதால் கோமாளி பட இயக்குனர் பிரதீப் ரங்கனதன் கூறிய கதைக்கு ஓகே சொல்லியிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மிக விரைவிலேயே தொடங்க உள்ளது.