30 years of Gokulam : சலிக்காத திரைக்கதை.. திகட்டாத பாடல்கள்.. 30 ஆண்டுகளை கடந்தும் எவர்க்ரீனாக இருக்கும் 'கோகுலம்' ..!
இயக்குநர் விக்ரமின் வெற்றிப்படங்களில் ஒன்றான கோகுலம் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 30 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
![30 years of Gokulam : சலிக்காத திரைக்கதை.. திகட்டாத பாடல்கள்.. 30 ஆண்டுகளை கடந்தும் எவர்க்ரீனாக இருக்கும் 'கோகுலம்' ..! Vikraman's Gokulam movie was released 30 years before on this day 30 years of Gokulam : சலிக்காத திரைக்கதை.. திகட்டாத பாடல்கள்.. 30 ஆண்டுகளை கடந்தும் எவர்க்ரீனாக இருக்கும் 'கோகுலம்' ..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/10/9e664e17ae016526ab662301058a097b1686414628109224_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
குடும்ப சென்டிமென்ட் படங்களுக்கு பெயர் போனவர் இயக்குநர் விக்ரமன். அவரின் படங்கள் அனைத்துமே குடும்பபாங்கான, பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களாக இருக்கும். அதிலும் முக்கியமாக பாடல்கள் அனைத்துமே சூப்பர் ஹிட் பாடல்களாக வெற்றி பெறும். 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் இயக்குநராக இருந்த விக்ரமனின் வெற்றிப் படங்களின் வரிசையில் ஒன்று 1993ம் ஆண்டு வெளியான 'கோகுலம்' திரைப்படம். இப்படம் வெளியாகி இன்றுடன் 30 ஆண்டுகளை கடந்துவிட்டது.
பானுப்ரியாவின் சிறப்பான நடிப்பு :
சிற்பியின் இசையில் நடிகர் அர்ஜுன், பானுப்ரியா, ஜெயராம், ஜெய்சங்கர், வடிவேலு, சின்னி ஜெயந்த் உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியான படம் 'கோகுலம்'. தன்னை காதலித்த காதலன் எதிர்பாராத இறப்புக்கு பிறகு அவனின் குடும்பத்திற்காக தன்னுடைய அடையாளத்தை மாற்றி காதலனின் குடும்ப பொறுப்புகளை ஏற்கும் கதாநாயகியாக மிகவும் யதார்த்தமாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் நடிகை பானுப்ரியா.
காதலனின் பொறுப்புகளை தன்னுடைய கடமையாக ஏற்று கொண்டு அங்கு அவளுக்கு கிடைத்த அவப்பெயர்களை எல்லாம் சகித்து கொண்டு ஒரு கனமான கதாபாத்திரத்தில் பானுப்ரியா, ஒரு சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும் மனதில் நிற்கும் அர்ஜுன், பானுப்ரியாவின் பிளாஷ்பேக் பற்றி தெரியாமல் ஒருதலையாக காதலிக்கும் ஜெயராம் என அனைவரும் அவரவரின் பங்கை சிறப்பாக வெளிப்படுத்தி படத்தை ஒரு வெற்றிப்படமாக கொடுத்தனர். படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்தது சிற்பியின் இசை.
பூவே உனக்காக:
விஜய் நடிப்பில் விக்ரமன் இயக்கத்தில் வெளியான 'பூவே உனக்காக' திரைப்படத்தின் திரைக்கதைக்கும் 'கோகுலம்' திரைக்கதைக்கும் ஒரு சில வேறுபாடுகள் மட்டுமே இருந்தாலும் அதிலும் காதலித்த பெண்ணுக்காக பிரிந்து இருந்த அவளின் குடும்பத்தை சேர்த்து வைத்து அவளின் காதலனோடு திருமணத்தையும் செய்து வைக்கிறார் விஜய்.
என்னதான் திரைக்கதை இரண்டையும் ஒப்பிடுகையில் ஒன்று போலவே இருந்தாலும் இரண்டு படங்களுமே திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பை பெற்றது. இன்றைய காலகட்டத்தில் குடும்ப ஒற்றுமை என்பதை பார்ப்பது அரிதான ஒரு விஷயமாக மாறிவிட்டது. அப்படி இருக்கையில் விக்ரமனின் எவர்கிரீன் படங்கள் தான் குடும்பத்தின் முக்கியத்துவத்தை பற்றி இன்றைய தலைமுறையினருக்கு எடுத்துரைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
சிற்பியின் இசையில் செவ்வந்தி பூவெடுத்தேன், புது ரோஜா பூத்திருக்கு பாடல்களும், பின்னணி இசையும் இன்றும் கேட்பதற்கு ஃபிரெஷ்ஷாக இருக்கும். இப்போது டிவியில் போட்டாலும் கோகுலம் படம் பார்க்க குவியும் ரசிகர்களும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)