Vijayakanth: விஜயகாந்த் மீண்டும் திரையில் தோன்றுவார்.. ஆபாவாணன் தந்த அப்டேட்.. மகிழ்ச்சிக் கடலில் ரசிகர்கள்!
Vijayakanth: செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி மீண்டும் திரையில் நடிகர் விஜயகாந்த் நடமாடவிட இருப்பதாக இயக்குநர் ஆபாவணன் தெரிவித்துள்ளார்.
தேமுதிக தலைவர் நடிகர் விஜயகாந்த் (Vijayakanth) கடந்த டிசம்பர் 28ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். அவரது உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று (டிச.30) விஜயகாந்த் மறைவையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக சென்னை திரைப்படக் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சார்பாக இரங்கல் கூட்டம் ஒருங்கிணைக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் இயக்குநர் ஆபாவாணன், ஊமை விழிகள் படத்தின் இயக்குநர் ஆர்.அரவிந்த்ராஜ், டைமண்ட் ரவி, பக்கிரிசாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டார்கள்.
திரைப்படக் கல்லூரிக்கு அடையாளம் கொடுத்த விஜயகாந்த்
ஒரு காலத்தில் பெரிதும் கவனம் பெறாமல் இருந்த சென்னை திரைப்பட கல்லூரி மாணவர்களுக்கு மிகப்பெரிய அடையாளம் கொடுத்தவர் நடிகர் விஜயகாந்த். திரைப்பட கல்லூரியைச் சேர்ந்த பல்வேறு அறிமுக இயக்குநர்களுக்கு வாய்பளித்து அவர்களுக்கு பரவலான அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தவர் விஜயகாந்த். அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக அமைந்த இந்த இரங்கல் கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் விஜயகாந்த் குறித்து பல்வேறு தகவல்களை பகிர்ந்துகொண்டார்கள்.
விஜயகாந்தை உயிருடன் நடமாட விடுவோம்
இந்த நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் ஆபாவாணன் “திரைப்பட கல்லூரியைச் சேர்ந்த எங்களுக்கு வாழ்க்கை கொடுத்தவர் விஜயகாந்த். அவருக்கு கைமாறு செய்யும் வகையில் நாங்கள் ஒரு திட்டத்தை நிறைவேற்ற நினைக்கிறோம். விஜயகாந்த் உயிருடன் இருக்கும்போதே இது தொடர்பாக அவரிடம் பேசி ஒப்புதல் வாங்கிவிட்டோம்.
விஜயகாந்த் நடித்து நான் தயாரித்த ‘ஊமை விழிகள்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது. பல்வேறு முன்னோடியான முயற்சிகளை நாங்கள் முயன்றிருக்கிறோம்.
முதன்முறையாக ஒரு படத்திற்கு முதல் பாகம், இரண்டாம் பாகம் எடுக்க நாங்கள் திட்டமிட்டோம் . அப்படி நான் ராதாரவி இணைந்து விஜயகாந்தை வைத்து எடுக்க நினைத்த படம்தான் ‘மூங்கில் கோட்டை’. இந்தப் படத்திற்காக விஜயகாந்த் நடித்த சுமார் 70 ஆயிரம் ஃபுட்டேஜ்கள் எங்களிடம் உள்ளன.
அப்போது விஜயகாந்த் ‘உழவன் மகன்’ படத்தை தொடங்கியதால், இந்தப் படம் பாதியில் நின்றுபோனது. எங்களிடம் இருக்கும் இந்தக் காட்சிகளை வைத்து தற்போது இருக்கும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அடுத்த இரண்டு படங்களில் நடிகர் விஜயகாந்தை உயிருடன் திரையில் நடமாட விடுவோம்.
இதை நான் வெறும் பேச்சிற்காக சொல்லவில்லை. இந்தத் திட்டம் எனக்கு முன்னதாகவே இருந்தது. விஜயகாந்த் உயிருடன் இருக்கும்போதே இந்தப் படம் வெளியாக வேண்டும் என்று நான் நினைத்தேன். என்னுடைய மிகப்பெரிய வருத்தமும் அதுதான். இப்போது விஜயகாந்தின் ஆசீர்வாதம் நம்முடன் இருக்கும்” என்று ஆபாவாணன் கூறினார்.