11 Years Of Vijay Antony: விஜய் ஆண்டனி ஹீரோவாகி 11 வருஷமாச்சா.. ஆச்சரியப்படும் ரசிகர்கள்..!
விஜய் ஆண்டனி தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாகி 11 ஆண்டுகள் நிறைவடைகின்றன
நான் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 11 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இசையமைப்பாளராக கலக்கிக் கொண்டிருந்த விஜய் ஆண்டனி இந்தப் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அவரது இசைக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது . ஆனால் அவரது நடிப்பிற்கு ?
இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி
புரியாத மொழியில் என்ன பாடினாலும் அதற்கு நம்மை வைப் செய்யவைக்கும் ஆற்றல் விஜய் ஆண்டனியின் பாடல்களுக்கு இருக்கிறது. சின்ன சின்ன படங்களுக்கு இசையமைத்த விஜய் ஆண்டனி விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து ஹிட்டான ஆல்பங்களை கொடுத்து வந்தார். என்ன தோன்றியதோ தெரியவில்லை திடீரென்று நடிகராகலாம் என்று முடிவு செய்துவிட்டார்.
நான்
ஜீவா சங்கர் இயக்கத்தில் விஜய் ஆண்டனி , சித்தார்த் வேனுகோபால் , ரூபா மஞ்சரி உள்ளிட்டவர்கள் நடித்து வெளியானத் திரைப்படம் நான். விஜய் ஆண்டனி நடித்து இசையமைத்து தயாரித்தும் இருந்தார். ஒரு த்ரில்லர் திரைப்படமாக உருவாகிய இந்தப் படத்தில் தனது சாந்தமான நடிப்பால் கதையோடு கச்சிதமாக பொருந்திப்போனார். ஏதோ இத்தனை நாள் தனியாக வீட்டில் நடித்து பயிற்சி எடுத்துக்கொண்டது போல் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார். சரி ஒரு படத்தோடு நிறுத்திக்கொள்வார் என்று பார்த்தால் அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகி இசையமைப்பதை சைடு பிஸினசாக மாற்றி முழுநேர நடிகராகவே மாறிவிட்டிருந்தார்.
பிச்சைக்காரன்
தொடர்ந்து அவர் நடித்த சலீம் , இந்தியா பாகிஸ்தான் உள்ளிட்ட படங்கள் சுமாராக ஓட அவரது நடிப்பின்மேல் கேள்வி எழுந்தது. அப்படியான நேரத்தில் அவர் நடித்த பிச்சைக்காரன் படம் அவருக்கு மீண்டும் ஒரு வெற்றியைப் பதிவு செய்து நடிப்பில் அவரது இடத்தை உறுதிப்படுத்தியது. தனது படங்கள் வசூல் ரீதியாகவும் வெற்றியடையும் என்பதை நிரூபித்து காட்டினார். இந்த 11 வருடங்களில் கிட்டதட்ட 15க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவிட்டார். இனிவரும் காலங்களிலும் அடுத்தடுத்தப் படங்கள் வெளியாக இருக்கின்றன.
விஜய் ஆண்டனியில் நல்ல நேரமோ என்னவோ பிச்சைக்காரன் படம் வெளியாகி சில ஆண்டுகளுக்குப் பின் யாரும் எதிர்பார்க்காத வகையில் பிரபலமாகியது. 2016 ஆம் ஆண்டு இந்திய ஒன்றிய அரசு பணமதிப்பிழக்கச் செய்தபோது கருப்பு பணத்தை ஒழிக்க என்ன செய்ய வேண்டும் என்று விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் படத்தில் இடம்பெற்ற காட்சி வைரலானது. இதனால் ரசிகர்கள் அனைவரும் அன்றே கணித்தார் விஜய் ஆண்டனி என்று அவரை ட்ரெண்டாக்கினார்கள்.
சமீபத்தில் வெளியான பிச்சைகாரன் 2 மற்றும் கொலை படம் ஓரளவிற்கு நல்ல வரவேற்பைப் பெற்றது. எல்லாரும் வியந்து பார்க்கும் ஒரு நடிகராக இல்லாவிட்டாலும் கூட யாரும் வெறுக்கும் நடிகாராக விஜய் ஆண்டனி இல்லை என்று சொல்லலாம்