‛வேட்டையாடிய ராகவன்... விளையாடிய இளமாறன்... அமுதன்...’ 16 ஆண்டுகளுக்கு முன் சம்பவம் செய்த கமல்!
Vettaiyaadu Vilaiyaadu: அந்த படத்திற்குப் பின் கமல் பார்த்த பெரிய ஹிட், சமீபத்தில் வெளியான விக்ரம் தான். கிட்டத்தட்ட 16 ஆண்டுகளுக்குப் பிந்தைய மெகா வெற்றி என்று கூட கூறலாம்.
‛ராகவன்... மாறா... அமுதா...’ இந்த பெயர்களை ஒரு காலத்தில் டிவியில் கேட்டுக் கொண்டே இருப்போம். இப்போதும் கூட கேட்டுக் கொண்டிருக்கிறோம். கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உலகநாயகன் கமல் நடித்த வேட்டையாடி விளையாடு. 2006 ம் ஆண்டு இதே நாளில் வெளியானது. இன்றோடு 16 ஆண்டுகள் ஆகிறது, இத்திரைப்படம் வெளியாகி.
ஏசிபி.,யாக வாழ்ந்து, செத்து, பிழைத்து வரும் ராகவன் கதாபாத்திரம்; அதன் பின் பல போலீஸ் கதாபாத்திரங்களுக்கு முன்னோடியாக இருந்ததையும் மறக்க முடியாது. கவுதமின் அக்மார்க் அடையாளங்களோடு அதே உடை, அதே நடை என எல்லாம் ஒரே மாதிரியாக இருந்தாலும், அதை அப்படியே தன் படமாக மாற்றியிருப்பார் கமல்.
View this post on Instagram
கிரனூரில் தொடங்கி லண்டன் வரை தொடரும் ஒரு விசாரணை வளையம்; அதை பின் தொடரும் போலீஸ் அதிகாரி. அவர்களோடு பயணிக்கும் கதை என விறுவிறுப்பாக போகும் வேட்டையாடு விளையாடு, குற்றவாளிகள் வேட்டையாடப்பட்டார்களா? போலீஸ் அதிகாரி ராகவன் விளையாடினாரா என்பது தான் கதை.
ஹாரீஸ் ஜெயராஜ் பீக்கில் இருந்த நேரம் அது. படத்தின் அத்தனை பாடல்களும் அம்சம். பின்னணி பின்னி எடுத்திருப்பார். உள்ளூருக்கு ஒரு பின்னணி, வெளிநாட்டிற்கு ஒரு பின்னணி என, ஹாரீஸ் மேஜிக் எங்கு பார்த்தாலும் இருக்கும். படத்தில் இரு கதாநாயகிகள், ஒருவர் ஜோதிகா, மற்றொருவர் கமலினி முகர்ஜி. பொதுவாகவே கவுதம் படத்தில் ஹீரோயின்கள் பேரழகாக தெரிவார்கள். இந்த இவரும் இயல்பாகவே பேரழகிகள். படத்தில் சொல்லவா வேண்டும்?
ரவிவர்மனின் ஒளிப்பதிவு, க்ரைம் காட்சிகளோடு ஓடிக் கொண்டே இருக்கும். நம்மையும் ஓட வைத்துக் கொண்டிருக்கும். 24 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு, 50 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்த மெகா ஹிட் திரைப்படம். மனரீதியாக பாதிக்கப்பட்ட இரு புத்திசாலி இளைஞர்களின் க்ரைமும், அவர்களை விட புத்திசாலியான ஒரு போலீஸ் அதிகாரியின் விசாரணை நுணுக்கமும் தான் கதையில் கிரீடம்.
View this post on Instagram
2006ல் தியேட்டர்களில் வேட்டையாடியது இத்திரைப்படம். விளையாடியது வசூல். 16 ஆண்டுகள் ஓடிவிட்டதா என்று பார்த்தால் அது ஆச்சரியமாக தான் இருக்கிறது. ஆனால், அந்த படத்திற்குப் பின் கமல் பார்த்த பெரிய ஹிட், சமீபத்தில் வெளியான விக்ரம் தான். கிட்டத்தட்ட 16 ஆண்டுகளுக்குப் பிந்தைய மெகா வெற்றி என்று கூட பார்க்கலாம். அந்த வகையில், உலக நாயகனை உற்சாகப்படுத்தி, தயாரிப்பாளரை மகிழ்வித்து, வினியோகஸ்தர்களை விண்ணில் குதித்த வைத்த மெகா ஹிட் திரைப்படம் ‛வேட்டையாடு விளையாடு’ வெளியான நாள் இன்று!