Vijay - Vetrimaaran: ரெண்டு லட்டு தின்ன ஆசையா? வெற்றிமாறனுடன் கைகோர்க்க காத்திருக்கும் விஜய்...
விடுதலை, வாடிவாசல் , வடசென்னை படத்தைத் தொடர்ந்து தனது அடுத்தப் படம் விஜய்யுடன் இருக்கலாம் என தெரிவித்துள்ளார் இயக்குநர் வெற்றிமாறன்
வெற்றிமாறனின் படங்களில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை எந்த நடிகருக்குத்தான் இருக்காது. நடிகர்களுக்கு மட்டுமில்லை.. தனக்கு பிடித்த ஸ்டாரை அவரது படத்தில் பார்க்க வேண்டும் என்கிற ஆசை ஒவ்வொரு ரசிகருக்கும் இருக்கிறது. தற்போது விஜய் ரசிகர்களுக்கு ஒரு ஆரவாரம் என்னவென்றால் விடுதலை , வாடிவாசல், வடசென்னை 2 ஆகிய படங்களை முடித்த பின்பு நடிகர் விஜயுடன் இணைய இருக்கிறார் இயக்குநர் வெற்றிமாறன்.
அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட இயக்குநர் வெற்றிமாறன் வாடிவாசல் வடசென்னை குறித்த தகவல்களை பகிர்ந்துகொண்டார். அப்போது நடிகர் விஜய்யை வைத்து படம் இயக்குவாரா என்கிற கேள்விக்கு பதிலளித்த வெற்றிமாறன்.
“இது குறித்து நானும் விஜய்யும் தொடர்ந்து பேசிக்கொண்டுதான் இருக்கிறோம். அவர் என்னுடைய படத்தில் நடிப்பதற்கு ரெடியாக இருக்கிறார். தற்போது எனக்கு இருக்கும் கமிட்மெண்ட் எல்லாவற்றையும் முடித்துவிட்டு நான் அவருடன் இணைந்து பணியாற்றுவேன்“ என்று வெற்றிமாறன் உறுதியாக பதில் கூறியுள்ளார். வெற்றிமாறனின் கதையில் விஜய்யைப் பார்க்க அவரது ரசிகர்கள் மிக ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
விடுதலை 2
தற்போது வெற்றிமாறன் விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். ஏற்கனவே படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் சில காட்சிகள் இயக்குநருக்கு திருப்தியாக இல்லாத காரணத்தினால் குறிப்பிட்ட காட்சிகள் மட்டும் மீண்டும் எடுக்கப்பட்டு வருகின்றன.
வாடிவாசல்
விடுதலை படத்தின் தாமதம் வெற்றிமாறன் அடுத்ததாக இயக்க இருந்த வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பையும் சற்று தாமதப்படுத்தியுள்ளது. இந்த ஆண்டின் இறுதிக்குள்ளாக படப்பிடிப்பு தொடங்க இருந்த நிலையில் தற்போது அடுத்த ஆண்டுவரை தாமதாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வடசென்னை 2
இந்த இரண்டுப் படங்களின் வேலை முடிவடைந்துவிட்ட பின்பு வெற்றிமாறன் இயக்கத்தில் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் படமான வடசென்னை படத்தின் இரண்டாம் பாகத்தின் வேலைகள் தொடங்கும் என எதிர்பார்க்கலாம்.
விஜய், வெற்றிமாறன்
அண்மையில் நடிகர் விஜய் நிகழ்ச்சி ஒன்றில் வெற்றிமாறனின் அசுரன் திரைப்படத்தில் இடம்பெற்ற வசனம் ஒன்றை மேடையில் பேசியதற்காக அனைவராலும் பாராட்டப்பட்டார். இந்த இருவரின் கூட்டணியை திரையில் பார்ப்பதற்காக வெற்றிமாறன் மற்றும் விஜய் ரசிகர்கள் மிக ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.
லியோ
விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் லியோ திரைப்படத்தில் நடித்துள்ளார். இயக்குநர் லோகேஷ் கனகராஜூடன் நடிகர் விஜய் 2வது முறையாக ‘லியோ’ படத்தில் இணைந்துள்ளார். இதில் ஹீரோயினாக நடிகை த்ரிஷா நடித்துள்ளார். மேலும் சஞ்சய் தத், சாண்டி மாஸ்டர், இயக்குநர்கள் கெளதம் மேனன், மிஷ்கின் மற்றும் அர்ஜூன், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ், ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களும் இணைந்துள்ளனர். அனிருத் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.