பெண்கள் புனிதர்களாக இருக்க அவசியமில்ல...வெளுத்து வாங்கிய வெற்றிமாறன் உதவி இயக்குநர்
வெற்றிமாறன் உதவி இயக்குநராக பணியாற்றி தற்போது பேட் கர்ல் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாக இருக்கிறார் வர்ஷா பரத்

பேட் கர்ல் டீசர்
தமிழ் சினிமாவின் தனித்த அடையாளமாக திகழ்பவர் இயக்குநர் வெற்றிமாறன். சமீபத்தில் இவரது விடுதலை 2 திரைப்படம் வெளியானது. வெற்றிமாறனின் உதவி இயக்குநராக பணியாற்றியவர் வர்ஷா பரத். தற்போது பேட் கர்ல் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாக இருக்கிறார். வெற்றிமாறன் மற்றும் அனுராக் கஷ்யப் இணைந்து இந்த படத்தை வழங்கியுள்ளார்கள். அஞ்சலி சிவராமன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நிலையில் சாந்தி பிரியா, சரண்யா ரவிச்சந்திரன், ஹிருது ஹாரூன், டீஜே அருணாசலம், சஷாங்க் பொம்மிரெட்டிப்பள்ளி உள்ளிட்டவர்களும் படத்தில் நடித்துள்ளார்கள். பேட் கர்ல் படத்தின் டீசர் நேற்று வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.
பெண்கள் புனிதர்களாக இருக்க அவசியம் இல்லை
ஒரு பெண்ணின் பள்ளி பருவம் முதல் அவளது இளம் பருவத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள படம் பேட் கர்ட். மிக சாதாரணமாக தனது வாழ்க்கையை வாழ நினைக்கும் ஒரு பெண் சமூகத்தில் எதிர்கொள்ளும் நெருக்கடிகளை இப்படம் பேசும் என எதிர்பார்க்கலாம். இந்த டிசர் ஒரு தரப்பு ரசிகர்களை கவர்ந்திருந்தாலும் இன்னொரு தரப்பினர் விமர்சனங்களையும் கூறியுள்ளார்கள். எப்போதும் போல் ஆதிக்க சமூதாயத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை வைத்து புரட்சி பேசுகிறார்கள் என்பது அவர்களின் கருத்தாக உள்ளது.
பேட் கர்ல் படம் பற்றி பேசியபோது படத்தின் இயக்குநர் வர்ஷா பரத் இப்படி கூறியுள்ளார் " தமிழ் சினிமாவில் பெண் என்பவள் பூ மாதிரி , பத்தினியா , தெய்வம் மாதிரி இருக்கனும் என பல கற்பிதங்களை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். இது பெண்களின் மீது அதிகப்படியான அழுத்தத்தை சுமத்துகிறது. அதனால் பெண்களுக்கு தகுதியான ஒரு கதாபாத்திரத்தை நான் உருவாக்க நினைத்தேன். இந்த படத்தின் ஒரு பெண் இந்த வாழ்க்கையை கடக்க போராடுகிறாள். அதற்காக அவளை எல்லாரும் ஃபாலோ செய்ய வேண்டும் என்பது இல்லை. பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதை நான் சொல்லவில்லை. என்னால் அப்படி சொல்லவும் முடியாது. இந்த படத்தில் அந்த பெண் செய்வதை விட பல மடங்கு தவறுகள் செய்யும் ஆண்களை நான் படங்களில் பார்த்திருக்கிறேன். பெண்கள் புனிதர்களாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை மனிதர்களாக இருந்தால் போதும் " என் அவர் பேசினார்.

