Varalakshmi: என்.ஐ.ஏ. சம்மன் அனுப்பியதா...? - பரபரப்பு விளக்கம் கொடுத்த வரலட்சுமி சரத்குமார்
போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் முன்னாள் உதவியாளர் கைதானது தொடர்பாக வதந்திகளை பரப்ப வேண்டாம் என நடிகை வரலட்சுமி கேட்டுக் கொண்டுள்ளார்.
Varalakshmi: கேரளாவில் போதைப்பொருள் மற்றும் ஆயுதங்கள் கடத்தல் விவகாரத்தில் முன்னாள் உதவியாளர் கைது செய்யப்பட்டதால், நடிகை வரலட்சுமியை விசாரணைக்கு ஆஜராகும்படி தேசிய புலனாய்வு முகமை சம்மன் அனுப்பியதாக தகவல் பரவியது.
கடந்த 2021ம் ஆண்டு கேரளாவின் விழிஞ்சம் கடற்கரை பகுதியில் படகு மூலம் கடத்தி வரப்பட்ட 300 கிலோ போதைப்பொருள் மற்றும் துப்பாக்கிகளை ரோந்து பணியில் ஈடுபட்ட கடலோர காவல்படையினர் கைப்பற்றினர். முதற்கட்ட விசாரணையில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் இலங்கையை சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் வழக்கு விசாரணை தேசிய புலனாய்வு முகமையான என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்பட்டது.
கடந்த 25ம் தேதி தொடர் விசாரணையில் அறிக்கையை என்.ஐ.ஏ. வெளியிட்டது. அதில், விடுதலை புலிகள் இயக்கத்தை மீண்டும் வலுப்படுத்தும் நோக்கத்தில் போதைப்பொருள் மற்றும் ஆயுதக்கடத்தல் நடைபெற்றதாகவும், இந்த சம்பவத்தில் தொடர்புடைய சென்னை சேலையூரை சேர்ந்த ஆதிலிங்கம் என்பவரை கைது செய்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் விடுதலை புலிகளின் ஆதவாளர்களை இந்தியாவில் தங்க வைக்க ஆதிலிங்கம் உதவியதாகவும் என்.ஐ.ஏ. தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தொடர் விசாரணையில் ஆதிலிங்கத்துக்கு சினிமாவிலும், அரசியலிலும் தொடர்பு இருப்பதும், நடிகை வரலட்சுமி சரத்குமாரின் முன்னாள் உதவியாளராக இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகின. பரபரப்பாக பேசப்பட்ட இந்த சம்பவம் குறித்து நடிகை வரலட்சுமி சரத்குமார் விளக்கம் அளித்துள்ளார். அதில், “ 3 ஆண்டுகளுக்கு முன்பு ஆதிலிங்கம் தற்காலிக மேனேஜராக தன்னிடம் வேலைப்பார்த்துள்ளார். தற்போது வேறு தற்காலிக மேனேஜர்கள் என்னிடம் வேலை பார்க்கின்றனர். எனக்கும் ஆதிலிங்கத்துக்கும் கடந்த 3 ஆண்டுகளாக எந்த தொடர்பும் இல்லை.
ஆனால் ஆதிலிங்கம் தொடர்பாக எனக்கு என்.ஐ.ஏ. சம்மன் அனுப்பியதாக தவறான செய்தியும், வதந்திகளும் பரப்பட்டு வருகிறது. இந்த செய்தியை கேட்டு நான் அதிர்ச்சி அடைந்ததுடன், மன வருத்தத்துக்கும் ஆளானேன். சம்பந்தப்பட்ட நபரிடம் எந்த ஒரு விளக்கமும் கேட்காமல் உண்மை என்னவென்று தெரிந்து கொள்ளாமல் வதந்தி பரப்படுகிறது. ஊடகத்துறையினர் தங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து உண்மை செய்திகளை வெளியிட வேண்டும்” என கேட்டு கொண்டார்.