Seeman On Vadivelu : வடிவேலு ஓர் அசாத்தியக் கலைஞன்.. அதனாலதான் இதை செஞ்சேன்.. நெகிழ்ந்து பேசிய சீமான்
வடிவேலு ஓர் அசாத்தியக் கலைஞர் என்று சிலாகித்துப் புகழ்ந்திருக்கிறார் நடிகரும், இயக்குநரும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமான்.
வடிவேலு ஓர் அசாத்தியக் கலைஞர் என்று சிலாகித்துப் புகழ்ந்திருக்கிறார் நடிகரும், இயக்குநரும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமான்.
யூ ட்யூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியிலிருந்து:
”வடிவேலு ஓர் அசாத்தியக் கலைஞன். எல்லாவற்றிற்கும் மேல் அவர் என் பங்காளி. அவருக்கும் பூர்வீகம் பரமக்குடி தான். அங்கிருந்துதான் அவர்களின் குடும்பம் மதுரைக்கு வந்து குடியேறியது. பாஞ்சாலங்குறிச்சி, பசும்பொன் படங்களில் எல்லாம் வடிவேலுவும் நானும் செட்டில் செம்ம கலாட்டாவாக இருப்போம். என்ன வடிவேலு எல்லோரும் அழுது நடிச்சிக்கிட்டு இருக்காங்க நீ எங்க சும்மா நிக்குறன்னு கேட்டா. அவிங்க காசு வாங்கிறாய்ங்க அழுவறாய்ங்க என்னையும் அழச்சொல்றியான்னுவாரு.
நானும் வடிவேலும் ஒரே குடும்பத்து ஆள் மாதிரி தான் பழகுவோம். சூட்டிங் இல்லாதப்ப ஒண்ணா சேர்ந்து பொழுதுபோக்குவோம். வடிவேலு எப்படிப் பார்த்தாலும் ஓர் அசாத்திய கலைஞர். ராசாவின் மனசிலே, சிங்காரவேலன் படங்களில் வடிவேலைப் பார்த்திருப்பீர்கள். அந்த வடிவேலு தான் 23 ஆம் புலிகேசியில் நடித்திருக்கிறார் என்றால் நம்ப முடிந்ததா உங்களுக்கு. அவர் தன்னைத்தானே அசாத்தியமாக வளர்த்துக்கொண்டார். நம்ம செந்தில், கவுண்டமணி அண்ணன்கள் கூட அப்படித்தான். அவர்கள் சூட்டிங் ஸ்பாட்டில் இயக்குநர்களிடமே ஐடியா சொல்லுவார்கள் இதை இப்படிச் செய்யலாமே என்று. அவர்கள் சொல்வது மிகச் சரியாக இருக்கும். அப்படித்தான் வடிவேலுவும் சொல்லுவார். நான் இப்படிப் போய் அப்படி வருகிறேன் சரியாக இருக்கும் என்பார். எடுத்துப் பார்த்தால் மிகச் சரியாக இருக்கும். அப்படி அசாத்திய வளர்ச்சி கண்டவர் வடிவேலு.
என்ன இடையில் அவர் அரசியல் அது இதுன்னு திமுகவுக்காகப் பேச சின்ன சலசலப்பு வந்தது. ஆனால், வடிவேலுவை வைத்து படம் எடுக்க வேண்டாம் என நிச்சயமாக ஜெயலலிதா சொல்லி இருக்கவே மாட்டார். அவரது அடிபொடிகள் யாராவது ஏன்யா பிரச்சினை, வடிவேலு திமுகவுக்காகப் பேசுனாரு விட்ருங்கன்னு வாய் வார்த்தையே சொல்லியிருக்கலாம். அதையே சிலர் பிடித்துத் தொங்கி 5 வருஷம் அப்படியே போச்சு.
ஆனா திரைமொழியில் வடிவேலு ஒரு ஜாம்பவான். தேவர்மகன் படத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நின்று கொண்டிருப்பார். மருத்துவமனையில் படுக்கையில் கைவெட்டுப்பட்டு படுத்துக் கிடப்பார் வடிவேலு. வீர வசனம் பேசி.. என்ன இனி திங்கிற கையில கழுவணும், கழுவுற கையில திங்கணும்னு ரொம்ப இயல்பாகக் கூறி பெருஞ்சோகத்தை வெளிப்படுத்தியிருப்பார். அந்த இடத்தில் உலக நாயகனுக்கே டஃப் ஃபைட் கொடுத்திருப்பார். அப்பேற்பட்ட கலைஞன் வடிவேலு. அந்தக் கலைஞன் வீணாக இருந்திடக்கூடாது. அந்த அடிப்படையில் தான் நான் வடிவேலு விவகாரத்தில் தலையிட்டேன்.
இன்றைக்கும் கூட பாருங்க வடிவேலுவை விட்டால் மீம்ஸுக்கு ஆளிருக்கா. எல்லா இமோஷன்ஸுக்கும் வடிவேலுகிட்ட முக பாவனை இருக்கு. அரசியலில் இருந்து அத்தனைக்கு அவர் கிட்ட கிண்டல் சரக்கு இருக்கு. அப்பேற்பட்ட கலைஞன் வீணாகிவிடக் கூடாது என்பதனாலேயே பேசினேன். வடிவேலு விவகாரம் முடிவுக்கு வந்ததற்கு காரணமாக இருந்தேன்” என்றார்