தனுஷ் பெயரை சொல்லி இளம் நடிகைகளிடம் கைவரிசை காட்டிய ஆசாமி...
நடிகர் தனுஷின் மேலாளர் போல் நடித்து மர்ம நபர் ஒருவர் இளம் நடிகைகளிடம் அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய சொல்லி வருவது தெரியவந்துள்ளது

பிரபல சீரியல் நடிகை மான்யா ஆனந்த் சமீபத்திய பேட்டியில் பேசியுள்ள விஷயங்கள் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. நடிகர் தனுஷின் மேலாளர் ஷ்ரெயஸ் என்று சொல்லி மர்ம நபர் ஒருவர் மெசேஜ் செய்து பட வாய்ப்பு தருவதாக சொன்னதாகவும் தனுஷூடன் அட்ஜஸ்ட் செய்ய கேட்டதாகவும் மான்யா இந்த பேட்டியில் பேசியுள்ளார். இதனைத் தொடர்ந்து சமூக வலைதளத்தில் தனுஷ் மீதும் அவரது மேலாளர் மீதும் கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. ஆனால் தனுஷின் மேலாளர் பெயரைச் சொல்லி இந்த செயல்களை செய்வது ஒரு மர்ம நபர் என்று தனுஷூக்கு ஆதரவாக பலர் குரல் கொடுத்து வருகிறார்கள்.
போலி அடையாளத்தில் நடிகைகளில் சில்மிஷம்
தனுஷ் தயாரிக்கும் படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி கடந்த சில மாதங்கள் முன்பு தனக்கு ஒரு நபர் மெசேஜ் செய்ததாகவும் அவர் தன்னை தனுஷின் மேலாளர் ஷ்ரேயஸ் என்று அடையாளப்படுத்திக் கொண்டதாகவும் மான்யா தெரிவித்தார். ஆனால் இதில் தனுஷூடன் அட்ஜஸ்ட் செய்ய வேண்டும் என்று சொன்னதும் மான்யா மறுத்துள்ளார். இதே போல் வேறு ஒரு நபர் நடிகர் தனுஷின் மேலாளர் என்று சொல்லி அண்மையில் தனக்கு கதை அனுப்பியதாகவும் தனுஷின் தயாரிப்பு நிறுவனமான வண்டர்பார் ஸ்டுடியோஸ் லொக்கேஷனை பகிர்ந்ததாகவும் அவர் சொன்னார். ஆனால் இந்த செயல்களை செய்வது தனுஷின் மேலாளர் தான என்று தனக்கு தெரியவில்லை. அவரது அடையாளத்தை பயன்படுத்தி வேறு ஒரு நபர் இதற்கு பின் இருப்பதாக மான்யா தன் தரப்பில் கூறியிருந்தார்.
இந்த நபர் பல இளம் நடிகைகளிடம் இதே போல் போலி அடையாளத்தை சொல்லி அவர்களை ஹோட்டலுக்கு வர வைப்பதாகவும் வலைப்பேச்சு யூடியூப் சேனலில் பேசியுள்ளார்கள். இந்த நபரை கண்டுபிடித்து அவர்மீது நடவடிக்கை எடுப்பதற்கு முயற்சிகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கலாம்
தனுஷ் மேலாளர் ஷ்ரேயஸ் விளக்கம்
இதே போல் கடந்த ஆண்டும் தனுஷ் தயாரிப்பில் நடிக்க வாய்ப்பு தருவதாக இளம் நடிகைகளை அனுகியிருக்கிறார்கள். அப்போது தனுஷின் மேலாளர் ஷ்ரேயஸ் தனது எக்ஸ் பக்கத்தில் இந்த தகவல் பொய்யானது என்றும் தனது பெயரை பயண்படுத்தி பரவும் தகவல் மற்றும் அந்த செல்ஃபோன் நம்பர் பொய்யானவை என்றும் பதிவிட்டிருந்தார். அதே போல் தனுஷின் வண்டர்பார் தயாரிப்பு நிறுவனம் சார்பாகவும் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியாகியிருந்தது.
திட்டமிட்ட சதியா ?
தனுஷ் தற்போது இந்தியில் நடித்துள்ள தேரே இஷ்க் மே திரைப்படம் வரும் நவம்பர் 24 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. ஒவ்வொரு முறையும் தனுஷ் படம் வெளியாக இருக்கும் நிலையில் இந்த மாதிரியான தகவல்கள் பரவுகின்றன. அதே போல் தற்போது தனுஷ் மற்றும் அவரது மேலாளர் தொடர்பாக பரவிவரும் இந்த குற்றச்சாட்டும் படத்தின் ரிலீஸை பாதிக்கும் நோக்கத்தில் நிகழ்த்தப்படும் சதியா என்கிற கேள்வியும் ரசிகர்களிடம் எழுந்துள்ளது





















