Mk stalin india alliance: இந்தியா கூட்டணிக்கு தலைமையேற்க தயாரா.? ஒரே வார்த்தையில் அசத்தலான பதில் சொன்ன ஸ்டாலின்
Mk stalin india alliance: பா.ஜ.க. E.D., I.T., C.B.I. என்று தன்னுடைய படைப் பரிவாரத்தை அழைத்துவந்தாலும், அதை ஒரு கை பார்க்க நாங்களும் தயாராகதான் இருக்கிறோம் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இன்று தனியார் தொலைக்காட்சி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
கேள்வி– இந்த தேர்தல் திராவிட மாடல் Vs North Indian Model என்று சொன்னீர்கள். அதைப்பற்றி சொல்லுங்கள்?
முதலமைச்சர் பதில் – என்னுடைய பேச்சில் நான் தெளிவாக சொல்லி இருக்கிறேன். மதச்சார்பின்மை, சோஷியலிசம், பாசிசத்தை எதிர்க்க வேண்டும். இதுதான் திராவிட மாடல்.எல்லார்க்கும் எல்லாம் என்ற கொள்கையை வழிவகுத்து கொண்டு எங்களுடைய திட்டங்களை நாங்கள் நிறைவேற்றிக் கொண்டு இருக்கிறோம்.
கேள்வி– பாஜக அந்த மாடலை பின்பற்றவில்லை என்று சொல்கிறீர்கள். அவர்களுடைய கூட்டணி கூட திராவிட
மாடலைத் தான் பின்பற்றுவதாக சொல்கிறார்கள்.
முதலமைச்சர் பதில் – நிச்சயமாக இல்லை. உறுதியாக சொல்கிறேன். பயன்படுத்திக் கொள்கிறார்கள். அவ்வளவுதான். அதைப் பயன்படுத்திக்கொண்டு போர்வையைப் போர்த்திக்கொண்டு உள்ளுக்குள் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்துகொண்டிருக்கிறார்கள்.
கேள்வி – இப்போது பலமுனை போட்டி களத்தில் இருக்கிறது என்கிறார்கள். நீங்கள் பலமுனைப் போட்டிகளாகப்
பார்க்கிறீர்களா? அப்படி வந்தால் அதில் உங்களுக்கு சாதகமா? பாதகமா? அதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
முதலமைச்சர் பதில் – நிச்சயமாக பல முனைப் போட்டிகள் இருக்கலாம். ஆனால், பலம் பொருந்திய போட்டியாக இல்லை.
கேள்வி – பிரதமர் 3 முறை இந்த மாதம் வரப் போகிறார்கள். பா.ஜ.க. தமிழ்நாட்டில் மிகவும் தீவிரமாக இருக்கிறது. அந்த கூட்டணியை வெற்றிப் பெற வைக்க வேண்டும் என்று நினைக்கிறது? அதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
முதலமைச்சர் பதில் – நான் அடிக்கடி சொல்கிறேன். பிரதமர் அடிக்கடி வர வேண்டும். அமித் ஷாவும் அடிக்கடி வர வேண்டும். இந்த கவர்னரை மாற்றக் கூடாது. இதுவே எங்களுக்கு பெரிய பிரச்சாரம்.
கேள்வி- தற்போது 5 ஆயிரம் ரூபாய் கொடுத்திருக்கிறீர்கள்.கிட்டத்தட்ட Surgical Strike என்று திமுகவில் அனைவரும் சொல்கிறார்கள். மக்கள் மத்தியிலும் பேசுப்பொருளாக இருக்கிறது. அது உங்களின் கடமையாக நினைக்கிறீர்களா? அல்லது இந்த தேர்தலுக்கான ஒரு Game Changer ஆக உள்ளதா?
முதலமைச்சர் பதில் – இதற்கு தொடக்கத்திலேயே விளக்கம் கொடுத்தேன். அதை என்றைக்கு தொடங்கினோமோ அன்று காலையிலேயே தொலைக்காட்சியில் நான் பேசியிருக்கிறேன். அதுதான் விளக்கம். இதற்கு மேல் விளக்கம் சொல்ல அவசியம் இல்லை.தொடர்ந்து நாங்கள் அதைத்தான் சொல்லிக்கொண்டிருக்கிறோம்.
கேள்வி – திரு. மணிசங்கர் அய்யர் அவர்களும் இருக்கிறார்கள். இன்னும் நிறைய பேர் அரங்கத்திற்கு வந்திருப்பது பார்க்கிறோம். இன்றைய நிகழ்வில் இருக்கிறார். அவர் உட்பட உத்தவ் தாக்கரே என்று இன்னும் பலரும் சொல்கிறார்கள். இந்தியா கூட்டணிக்கு நீங்கள் தலைமைத் தாங்க வேண்டும் என்று சொல்கிறார்கள். அப்படி ஒரு வாய்ப்பு வந்தால் நீங்கள் ஏற்பீர்களா?
முதலமைச்சர் பதில் – தலைவர் ஒருமுறை ஏற்கெனவே சொல்லியிருக்கிறார். என்னுடைய
உயரம் எனக்குத் தெரியும். அந்த உயரத்தின் அடிப்படையில் நான் இருப்பேன் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், பா.ஜ.க.வின் ‘Pattern’ என்ன என்று தி.மு.க. மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ்நாடே உணர்ந்திருக்கிறது. அவர்கள் மேல் மக்களுக்கு நம்பகத்தன்மை கிடையாது. மற்ற மாநிலங்களில் கட்சிகளை மிரட்டி, ஆட்சிகளைக் கவிழ்த்து, தங்களின் அரசைக் கொண்டுவரப் பயன்படுத்திக்கொண்ட‘வாஷிங் மெஷினை’, இங்கும் கொண்டு வந்து கூட்டணி அமைத்திருக்கிறார்கள். அவர்களின் N.D.A. கூட்டணி என்பது முழுக்க முழுக்க ஊழல்வாதிகளை மிரட்டி அமைக்கப்பட்டுள்ள கூட்டணிதான்.கடந்த அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் இருந்த முன்னாள் அமைச்சர்கள் பல பேர் ரெய்டுகளுக்கு ஆளானவர்கள்.
10 பேர் மேல் D.V.A.C-யில் வழக்குகள் இருக்கிறது. ஆனால், கூட்டணிக்காக அவர்களை இப்போது பாதுகாத்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் சொல்ல வேண்டும் என்றால், முன்னாள் அமைச்சர்கள் சில பேர் மேல் F.I.R. கூட பதிவு செய்ய விடாமல் நிறைய ஆண்டுகளாக ஆளுநர் மூலமாக நிறுத்தி வைத்திருக்கிறார்கள். இந்த இலட்சணத்தில், இப்போது E.D. – I.T. – C.B.I. ஆகியவற்றை வைத்து எங்களையும் மிரட்டலாமா என்று பார்க்கிறார்கள். என்னதான் பா.ஜ.க. E.D., I.T., C.B.I. என்று தன்னுடைய படைப் பரிவாரத்தை அழைத்து வந்தாலும், அதை ஒரு கை பார்க்க நாங்களும் தயாராகதான் இருக்கிறோம் என தெரிவித்துள்ளார்.























