TVK Vijay Kutty Story: சின்னப் பையனும் முரட்டுக் காளையும்; தவெக விஜய் சொன்ன தாறுமாறு குட்டிக்கதை! அரசியல் வியூகமா?
வேலூர் பள்ளிகொண்டாவில் பரபரப்பு! காளையை அடக்கிய சிறுவனின் கதை மூலம் அரசியல் வியூகம் சொன்ன தவெக தலைவர் விஜய்.

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அருகில் கொல்லமங்கலம் பகுதியில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:
’’ஒரு குட்டிக் கதையில் இருந்து தொடங்குவோம். பெரிய ஊர் ஒன்றில் ஒரு குட்டி பையன் இருந்தான். அங்கே 4 சாலைக்கு நடுவே ஜல்லிக்கட்டு காளை ஒன்று முரட்டுத்தனமாக நின்று கொண்டிருந்தது.
காளையை அடக்க வேண்டும்
அந்த இடம் நார்மலாக வேண்டுமெனில் அந்த காளையை அடக்க வேண்டும். அந்த காளையை அடக்க முடிபவர்களில் சிலர், அப்போது ஊரில் இல்லை. அப்போது கூட்டத்தில் இருந்த சிலர், எங்களுக்கு இல்லாத அனுபவமா? நாங்கள் பார்க்காத காளையா? என்று கூறிக்கொண்டே செல்கின்றனர். ஆனால் யாராலும் தொடக்கூட முடியவில்லை. அவர்கள் எல்லோரையும் தூக்கி வீசி விடுகிறது.
அப்போது கூட்டத்தை விலக்கிக்கொண்டு சின்ன பையன் உள்ளே வருகிறான். அவர்கள், ‘’டேய் எங்களாலேயே முடியவில்லை. நீ எதை கிழிக்கப் போகிறாய்?’’ என்று ஏளனமாகப் பேசுகின்றனர்.
ஸ்டைலாக, கெத்தாக, தில்லாக...
மேலும் சிலர் பரிதாபப்பட்டுப் பாவம் பார்த்துக்கொண்டே பேசுகின்றனர். ஆனால் சின்னப் பையன் ரெண்டு பாக்கெட்டுகளிலும் கையை விட்டுக்கொண்டு ஸ்டைலாக, கெத்தாக, தில்லாகச் செல்கிறான். காளை முறைக்கிறது. மேலும் அருகில் செல்கிறான். காளை முட்ட வந்ததும் பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்த புல் கட்டைக் காண்பிக்கிறான்.
காளை முகம் மாறி புல்லை உண்கிறது. அழைத்துக்கொண்டு நடந்தவாறே, அருகில் வயல் வெளியில் காளையை விட்டுவிட்டு வருகிறான். அருகில் ஒரு பெரியவர் வந்து கேட்கிறார். எப்படி காளையை அடக்கினாய் என்று?
யாராக இருந்தால் என்ன?
உடனே சிறுவன் சொல்கிறான். ’’ஐயா, காளை கோபமாக இருந்ததுபோலத் தெரியவில்லை. பசியாகத்தான் இருந்தது’’ என்றான். உடனே பெரியவர் சொல்கிறார். ’’யாராக இருந்தாலும் சூழலுக்கு ஏற்ற வகையில் பிரச்சினையைத் தீர்ப்பதுதான் விஷயம்’’.
ஜல்லிக்கட்டு காளைதான் தமிழக அரசியல் களம். அந்த பெரியவர்தான் தமிழக மக்கள். தவெகதான் அந்த சின்ன பையன். முதல்வரின் போலி வாக்குறுதிகளை இனியும் தமிழக மக்கள் நம்ப மாட்டார்கள்’’ என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்தார்.
























