TVK Vijay: ”அதிமுக-காரங்க காமெடி பண்ணாதிங்கயா” வீணாய் குறுக்கே வருவதாக விஜய் விமர்சனம் - வேலூர் பேச்சு
TVK Vijay Vellore Meeting: அதிமுகவின் குறுக்கே வந்து காமெடி செய்வதாக, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கடுமையாக விமர்சித்துள்ளார்.

TVK Vijay Vellore Meeting: சீரியஸான போட்டிக்கு நடுவே காமெடிக்கு இடமில்லை என, தவெக தலைவர் விஜய் அதிமுகவை மறைமுகமாக சாடியுள்ளார்.
அதிமுகவை மறைமுகமாக சாடிய விஜய்
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அருகில் கொல்லமங்கலம் பகுதியில், நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் தவெக தலைவர் விஜய்,திமுகவை கடுமையாக விமர்சித்து பேசினார். அப்போது, ”தீய சக்தி, தூய சக்தி மற்றும் ஊழல் சக்தி என ஏன் சொல்கிறோம்? எதற்கு சொல்கிறோம்? யாரை சொல்கிறோம்? என மக்களுக்கு தெளிவாக தெரியும். தவெகவிற்கு போட்டி திமுக தான் என்பதும் மக்களுக்கு நன்றாகவே தெரியும். அப்படி இருக்கையில் நாம் ஏதாவது பேசினால், வாண்டட் ஆக சில பேர் வண்டியில் ஏறி அமர்ந்துகொண்டு குரல் கொடுக்கின்றனர். சீரியஸாக ஒரு போட்டி நடந்து கொண்டிருக்கும்போது, இங்கு காமெடிக்கு எல்லாம் இடமில்லை பாஸ். இது மக்களுக்கு தெளிவாக தெரியும்” என விஜய் பேசினார். இதன் மூலம் அதிமுகவையே விஜய் மறைமுகமாக விமர்சித்ததாக கூறப்படுகிறது.
அரசியல்வாதிகளுக்கு சவால்..
தொடர்ந்து பேசுகையில், “இந்த நாளில் இன்று இருக்கும் மூத்த அரசியல்வாதிகளிடம் ஒரு முக்கியமான கேல்வியை கேட்க விரும்புகிறேன். அரசியலுக்கு வருவதற்கு முன்பாக உங்களிடம் இருந்த சொத்து எவ்வளவு? அரசியலுக்கு வந்த பிறகு தற்போது உங்களிடம் உள்ள சொத்து என்ன? என்பதை வெளிப்படையாக அறிவிக்க முடியுமா? அப்படி வந்த பணம் என்னென்ன தொழில் செய்து வந்தது? என்ன வேலை செய்ததன் மூலம் வந்ததா? உண்மையிலேயே உழைத்து தான் சம்பாதித்தீர்களா? ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பிறகு ஆட்டையை போட்ட பணமா? என்பதை வெளிப்படையாக அறிவிக்க முடியுமா? இதை கேட்டால் எல்லா ஊழல்வாதிகளும் ஒன்றாக சேர்ந்து நம் மீது சேற்றை வாரி இறைப்பார்கள். ஆனால், அதை பற்றி நமக்கு கவலை இல்லை. ஏனென்றால் நாம் யார் என்பது மக்களுக்கு நன்றாகவே தெரியும்.” என விஜய் கடுமையாக சாடியுள்ளார்.
”அமைதியாக இருந்தாலே போதுமானது”
மேலும், “ஜனநாயகம் என்பது பெரும்பான்மை ஆட்சி அதிகாரத்தை மட்டுமே சார்ந்தது இல்லை. சிறுபான்மை மக்களின் உறவுகளையும், உணர்வுகளையும் புனிதம் என நினைத்து அவற்றை காப்பாதே ஜனநயாகம் என அறிஞர் அண்ணா சொன்னதை நாம் இங்கு இப்போது சொன்னால் பொருத்தமாக இருக்கும். ஆனால், அத்தனையையும் மறந்துவிட்டு எப்படியாவது, எதையாவது சொல்லி வாங்கிவிடலாம் என்பதற்காகவே இங்கே சில பேர் இருக்கின்றனர். அவர்களை போன்று சில பிரச்னைகளில் எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றும் எண்ணமே நமக்கு இல்லை. சில அரசியல் கட்சிகளும், சில அரசியல் தலைவர்களும் ஒரு சில நேரங்களில் அமைதியாக இருந்தாலே எந்த பிரச்னையும் வராது” என விஜய் குற்றம்சாட்டினார்.






















