Udhayanidhi Stalin: 'இதெல்லாம் ஒரு படமா.. இன்டர்வெல் சீனில் வெளியேறிய உதயநிதி சகோதரி’ .. ரசிகர்கள் அதிர்ச்சி
தான் நடித்த படங்களில் எந்த படத்தை வீட்டில் உள்ளவர்கள் கிண்டல் செய்தார்கள் என நடிகர் உதயநிதி ஸ்டாலின் நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார்.
தான் நடித்த படங்களில் எந்த படத்தை வீட்டில் உள்ளவர்கள் கிண்டல் செய்தார்கள் என நடிகர் உதயநிதி ஸ்டாலின் நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபஹத் ஃபாசில், கீர்த்தி சுரேஷ், லால், சுனில் என பலரும் நடித்துள்ள படம் மாமன்னன். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இப்படம் நேற்று தியேட்டர்களில் வெளியாகி ரசிகர்களிடம் கலவையான விமர்சனத்தைப் பெற்று வருகிறது. இந்த படம் உதயநிதியின் கடைசிப்படம் என்பதால், ரசிகர்கள் தியேட்டர்களில் படத்தைப் பார்த்து அவருக்கு பிரியாவிடை கொடுத்து வருகின்றனர்.
இதனிடையே மாமன்னன் ப்ரோமோஷன் தொடர்பாக உதயநிதி பல நேர்காணல்களில் பங்கேற்றார். அதில் ஒரு நேர்காணலில், ‘உங்களை முதல் படத்தில் இருந்தே நடிகராக மக்கள் ஏற்றுக்கொண்டார்கள். என்னதான் வெளியில் பாராட்டினாலும் வீட்டில் செல்லமாக கிண்டல் செய்த படம் ஏதாவது இருக்கிறதா?’ என உதயநிதியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர், “படம் பேர் சொல்ல மாட்டேன். எடுத்த எங்களுக்கே கடைசி வரை அது பேய் படமா, காமெடி படமா என தெரியல. அந்த படம் நல்லா ஓடுச்சி. அப்பதான் எனக்கு ஒன்னு புரிஞ்சிது. இதுதான் தமிழ் சினிமா ரசிகர்களின் ரசனை என்ன என்பது தெரிந்தது. அந்த படத்தை என்னுடைய குடும்பத்தினருக்கு பிரிவ்யூ போட்டேன். இடைவேளைக்கு பின் என் சகோதரியை காணவில்லை. உடனே போன் பண்ணி ஏதாவது அவசர வேலையா வீட்டுக்கு போய்ட்டியா, ஆளை காணோமே என கேட்டேன். அதற்கு அவர், “இதெல்லாம் ஒரு படம்ன்னு எடுத்து என்னை பிரிவ்யூ பார்க்க தைரியமா கூப்பிட்டுருக்க” என சொன்னார்.
அந்த படத்துல லாலா கடை சாந்தி, எம்புட்டு இருக்குது ஆசைன்னு பாட்டுகளை பார்க்க தனி கூட்டமே வந்தது’ என கலகலப்பாக சொன்னார்.
உதயநிதி சொன்ன படம் இதுதான்
2017 ஆம் ஆண்டு உதயநிதி ஸ்டாலின், ரெஜினா கசாண்ட்ரா, ஸ்ருஷ்டி டாங்கே, சூரி உள்ளிட்ட பலரின் நடிப்பில் வெளியான படம் ‘சரவணன் இருக்க பயமேன்’. விஜய், அஜித், பிரபுதேவா, ஜெயம் ரவி, சிவகார்த்திகேயன் ஆகிய நடிகர்களை இயக்கிய எழில் இயக்கத்தில் இப்படம் உருவானது. டி.இமான் இசையமைத்திருந்தார். இந்த கூட்டணி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில் இப்படம் ரசிகர்களை பெரிய அளவில் கவரவில்லை என கூறப்பட்டது. ஆனால் உதயநிதி ஸ்டாலின் இந்த படம் நன்றாக ஓடியதாக அந்த நேர்காணலில் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.