Mission Impossible Final Reckoning முதல் நாள் கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா? தொடரும் டாக் க்ரூஸ் வசூல் வேட்டை!
நடிகர் டாம் க்ரூஸ் நடித்துள்ள மிஷன் இம்பாசிபிள் படம் தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் வசூலை குவித்து வருகிறது. முதல் நாள் வசூல் நிலவரத்தை கீழே காணலாம்.

ஹாலிவுட் திரையுலகின் உச்ச நட்சத்திரமாக உலா வருபவர் நடிகர் டாம் க்ரூஸ். இவரது மிஷன் இம்பாசிபிள் வரிசை படங்களுக்கு உலகெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இவரது மிஷன் இம்பாசிபிள் படத்தின் கடைசி பாகமான மிஷன் இம்பாசிபிள் ஃபைனல் ரெக்கானிங் திரைப்படம் நேற்று வெளியானது.
மிஷன் இம்பாசிபிள் முதல் நாள் வசூல் எவ்வளவு?
மிஷன் இம்பாசிபிள் டெட் ரெக்கானிங் திரைப்படம் கடந்த 2023ம் ஆண்டு வெளியாகி அடுத்த பாகத்திற்கான தொடக்கத்துடன் முடிய நேற்று இதன் இறுதிபாகம் ரிலீசானது. உலகெங்கும் பல மொழிகளில் ரிலீசான இந்த படம் இந்தியாவிலும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளில் ரிலீசானது.
இந்தியாவிலும் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீசான இந்த படம் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது. இந்தியாவில் முதல் நாள் மட்டும் ரூபாய் 17.5 கோடியை வசூலித்துள்ளது. இது மற்ற ஹாலிவுட் படங்களுடன் ஒப்பிடும்போது அதிகம் ஆகும். மார்வெல் படங்களை காட்டிலும் மிஷன் இம்பாசிபிள் படத்தின் வசூல் அதிகமாக உள்ளது.
மற்ற ஹாலிவுட் படங்களை பின்னுக்குத் தள்ளி அசத்தல்:
கேப்டன் அமெரிக்கா ப்ரேவ் நியூ வேர்ல்ட் 4.2 கோடி ரூபாயும், தண்டர்போல்ட் 3.8 கோடி ரூபாயும் வசூலித்துள்ளன. இந்த படங்களை காட்டிலும் மிஷன் இம்பாசிபிள் வசூலை குவித்துள்ளது. மும்பையில் 68 சதவீதமும், டெல்லியில் 67 சதவீதமும், புனேவில் 76.75 சதவீதமும், பெங்களூர் 92.25 சதவீதமும், கொல்கத்தாவில் 75 சதவீதமும், அகமதாபாத்தில் 77.75 சதவீதமும், சென்னையில் 98 சதவீதமும், கொச்சியில் 76.5 சதவீதமும் இருக்கைகள் தியேட்டர்களில் நிரம்பியுள்ளது.
அந்தந்த மாநில மொழிகள் மட்டுமின்றி ஆங்கிலத்திலும் இந்த படத்திற்கு முன்பதிவு நிரம்பி வழிகிறது.
தமிழிலும் வசூல் வேட்டை:
தமிழ்நாட்டில் முதல் நாளான படம் வெளியான நேற்று தமிழ் மொழியில் மட்டும் சென்னையில் 56.25 சதவீதமும், மதுரையில் 52.75 சதவீதமும், கோவையில் 56.75 சதவீதமும், பாண்டிச்சேரியில் 99 சதவீதமும், சேலத்தில் 43.25 சதவீதமும், வேலூரில் 33 சதவீதமும், திண்டுக்கல்லில் 46 சதவீதமும், திருச்சியில் 57.75 சதவீதமும் இருக்கைககள் நிரம்பியது. குறிப்பாக, மாலை மற்றும் இரவுக்காட்சிகளில் ரசிகர்கள் கூட்டம் நிரம்பியது.
டாம் க்ரூஸின் இந்த படம் இந்தியாவில் மட்டும் 100 கோடி ரூபாய் வசூலை குவிக்கும் என்று விரைவில் கருதப்படுகிறது.





















