90's கிட்ஸ்களின் கனவில் குடியேறிய ஈரமான ரோஜா.. மோகினி பிறந்த நாள் இன்று!
கல்லூரி தென்றலாய் ஈரமான ரோஜாவில் மலர்ந்திருந்த மோகினியை 90's கிட்ஸ் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. அறிமுக ஹீரோ-ஹீரோயின்களை வைத்து சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த படம் ஈரமான ரோஜாவே. அதில் புது முகமாக அறிமுகமான மோகினிக்கு இன்று 45வது பிறந்தநாள்.
‛‛நீலம் பூத்த பார்வைகள் நூறு கடிதம் போட்டது... நீயும் நானும் சேர்ந்திட நேரம் பொழுது கேட்டது...’’ என, அழகிய கண்களோடு 1991ல் கல்லூரி தென்றலாய் ஈரமான ரோஜாவில் மலர்ந்திருந்த மோகினியை 90's கிட்ஸ் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. அறிமுக ஹீரோ-ஹீரோயின்களை வைத்து சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த படம் ஈரமான ரோஜாவே. அதில் அறிமுகமான மோகினிக்கு இன்று 45வது பிறந்தநாள். மோகினி தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும் அவர் அதிகம் பிரவேசித்தது பிற மொழி படங்கள் தான்.
தஞ்சாவூரில் பிறந்து கேரளாவில் கோலோச்சிய மோகினி!
பிற மொழி படங்கள் என வரும் போது, தென் இந்தியாவின் பிரதான மொழிகளில் அதிகம் நடித்துள்ளார் மோகினி. ஆனால் அவர் சுத்தமான தமிழ் பெண். தஞ்சாவூரில் பிறந்து, கோவையில் வளர்ந்து ,சென்னையில் வாழ்ந்தவர். தமிழில் அறிமுகமானாலும் அடுத்த வாய்ப்பே இந்தியில் கிடைத்து அங்கும் தன் வருகையை பதிவு செய்தார். அதன் பின், கன்னடம், மலையாளம் என மோகினிக்கு வாய்ப்புகள் குவிந்தன . அதனாலேயே தமிழில் அடுத்தடுத்து சில படங்களில் மட்டும் அவர் நடிக்க நேர்ந்தது. குறிப்பாக மலையாளத்தில் மோகினிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதை அவரும் பற்றி, அங்கு காலூன்றினார். கேரள வரவுகளை தமிழகத்தில் இறக்குமதி செய்து கொண்டிருந்த அந்த காலகட்டத்தில், இங்கிருந்து ஒரு தமிழ் பெண் சென்று, மலையாளம், கன்னட மொழிகளை ஆக்கிரமித்தார் என்பது பெரிய விசயமே!
தமிழில் மறக்க முடியாத ஹிட் படங்கள்!
வெளிமாநில பட வாய்ப்புகள் இருந்தாலும், ஆண்டுக்கு சில தமிழ் படங்களை ஆவரேஜ் ஆக நடித்துக் கொண்டிருந்தார் மோகினி. அறிமுகமான 1991 ல் ஒரு படம் மட்டுமே நடித்திருந்தாலும், 1992ல் அவருக்கு அதிக படங்கள் கிடைத்தன. நாடோடி பாட்டுக்காரன், உனக்காக பிறந்தேன், உன்னை வாழ்த்தி பாடுகிறேன், சின்ன மருமகள், தாய் மொழி ஆகிய படங்களில் நடித்திருந்தார் மோகினி. அதன் பின், உடன் பிறப்பு, கன்மணி, நான்பேச நினைப்பதெல்லாம், புதிய மன்னர்கள், வனஜா கிரிஜா, பட்டுக்கோட்டை பெரியப்பா, ஜமீன்கோட்டை என அடுத்தடுத்து தமிழ் படங்களிலும் மோகினியை பார்க்க முடிந்தது. தமிழ் ஹிட் படங்களில் மோகினி நடித்த படங்களும் இடம்பெற்றுள்ளன.
சின்னத்திரை தொடர்களின் நாயகி!
ஒரு சிலரை தவிர பெரும்பாலான ஹீரோயின்களுக்கு ஹீரோக்களைப் போல சினிமா நிரந்தரமானதல்ல. குறிப்பிட்ட வயதிற்குப் பின் அவர்களே ஒதுங்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். ஆனால், மோகினி புத்திசாலித்தனமாக ஒரு முடிவு எடுத்தார். அது சின்னத்திரையில் ஹீரோயின்களை அறிமுகம் செய்து கொண்டிருந்த காலகட்டம். பிரபல தொலைக்காட்சியில் 1996ல் காதல் பகடை , 2006ல் ராஜராஜேஸ்வரி, பொதிகையில் பெண்ணின் கதை போன்ற பிரபல தொடர்களில் நடித்து, பெண்களின் பிரபலமாக தொடர்ந்து இருந்தார். மலையாளத்திலும் தொடர்களில் நடித்திருந்தார்,
வாழ்விலும் வித்தியாசமானர்!
மகாலட்சுமி என்கிற பெயருடன் பிராமண குடும்பத்தில் பிறந்த மோகினி, அதன் பின் 1999ல் பரத் என்பவரை திருமணம் செய்து அமெரிக்காவில் செட்டில் ஆனார். 2006ல் கத்தோலிக்க குழுவின் உறுப்பினராக இணைந்து, புனித மைக்கில் அகாடமியில் ஆன்மிக நலன் மற்றும் மீட்பு ஆலோசனை கல்வியை முடித்து, தற்போது கத்தோலிக்க நற்செய்தியாளராக உள்ளார். பிறப்பால் பிராமணராக இருந்தாலும், கிறிஸ்தவ மதத்தை ஏற்று மதம் மாறிய மோகினி, தன் வாழ்வியலை வித்தியாசமாக மாற்றிக்கொண்டவர்.
தமிழ் சினிமாவில் ஹீரோயின்கள் தங்களை புதுப்பிப்பது எளிதல்ல. ஆனால், மோகினி போன்ற ஒரு சிலரே தங்களை மக்கள் மனதில் பதிவு செய்து கொண்டே இருந்தனர். இன்று 45வது பிறந்த நாள் காணும் மோகினி, ஒரு காலத்தில் இளசுகளின் இதயக்கன்னி, கனவுக்கன்னி. கண்ணழகி என்று அனைவராலும் அழைக்கப்பட்ட மோகினி, தோற்றத்திலும் அழகிய மோகினியே!
மேலும் படிக்க: ஈரமான ரோஜாவே மோகினியின் 90களை திரும்பி பார்க்கும் ஆல்பம்!