Tamil Cinema: சூர்யாவால் வந்த பிரச்னை.. சிக்கலில் தமிழ் சினிமா.. இனி நிலைமை மோசம் தான்!
சூர்யாவிடம் சூரரைப்போற்று படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிடாதீர்கள், தியேட்டருக்கு கொடுங்கள் என எவ்வளவோ சொன்னோம். அப்போது எங்களை மார்க்கெட் நிலவரம் தெரியாமல் கூறுவதாக பேசினார்கள் என திருப்பூர் சுப்பிரமணியம் கூறியுள்ளார்.

படங்களை நேரடியாக ஓடிடி ரிலீஸில் விட்டது தான் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய பிரச்னையாக மாறியிருப்பதாக தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் விமர்சித்துள்ளார்.
ஓடிடி தளங்கள் வளர்ச்சி
இந்தியாவில் ஓடிடி தளங்கள் அசுர வளர்ச்சி பெற்றுள்ளது. குறிப்பாக 2020, 2021 கொரோனா காலக்கட்டத்தில் மக்கள் வீடுகளில் ஊரடங்கால் முடங்கி கிடந்த நிலையில் அவர்களுக்கு ஓடிடி தளங்கள் கைகொடுத்தது. மேலும் சில படங்கள் நேரடியாக ஓடிடி தளங்களிலும், பல படங்கள் தியேட்டருக்கு வந்து 4 வாரங்கள் கழித்தும் ரிலீசானது. ஓடிடி வந்த பிறகு தியேட்டர்கள் வெறிச்சோடியது. இதனால் 2 மாதங்கள் கழித்து படங்களை ஓடிடி தளத்தில் வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
ஜனவரி 1 முதல் புதிய கோரிக்கை
இப்படியான நிலையில் ஒரு நேர்காணலில் பேசிய திருப்பூர் சுப்பிரமணியம், “இந்தியில் ஓடிடி வந்ததில் இருந்தே 8 வாரங்கள் கழித்து தான் படம் ரிலீசாவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். அங்கு சாத்தியமானது, தமிழ் சினிமாவில் சாத்தியமாகாமல் போகுமா சொல்லுங்கள். ஓடிடி வந்த காலக்கட்டத்தில் உண்மையில் எங்களுக்கு விவரம் தெரியவில்லை. எங்களுக்கு போட்டியாக இருக்காது என நினைத்தோம். அதோட தாக்கம் மக்கள் தியேட்டருக்கு வராமல் போகும்போது தான் தெரிகிறது. அதனால் இப்போது ஜனவரி 1ம் தேதியில் பூஜை போடும் படங்களுக்கு ஓடிடி ரிலீசுக்கு 100 நாட்கள் அவகாசம் கேட்டிருக்கோம்.
தயாரிப்பாளர்கள் பட விநியோகம் உலகளவில் விரிவடையும்போது அதில் கிடைக்கும் லாபத்தை அப்படியே அதில் நடிப்பவர்களுக்கும், டெக்னீசியன்களுக்கும் கொண்டு போய் கொடுத்தார்கள். பணம் வர வர தயாரிப்பாளர் நிலை மோசமாக அமைந்தது. அதாவது இதனைக் காரணம் காட்டி கோடிக்கணக்கில் கடன் வாங்க ஆரம்பித்தார்கள். இதனால் தயாரிப்பாளர்கள் எண்ணிக்கை குறைந்து விட்டது. ஆனால் இன்றைக்கு புதுமுகங்கள் நடித்த படத்தைக் கூட சீண்டுபவர்கள் யாரும் இல்லை. ஓடிடி வந்த பிறகு நடிகர்களின் சம்பளம் 7 முதல் 9 மடங்காக அதிகரித்துள்ளது.
தியேட்டர் ஓனர்களிடம் சவால்
ஓடிடியில் பெரிய வியாபாரம் உள்ளது என நினைத்தார்கள். தியேட்டர் உரிமையாளர்களிடமே சவால் விட்டார்கள். நாங்கள் நேரடியாக ஓடிடியில் படம் வெளியிடுவோம். நீங்கள் தேவையில்லை என தயாரிப்பாளர்கள் சொன்னார்கள். நாங்க அன்றைக்கு அமைதியாக இருந்தோம்.
சேட்டிலைட் சேனல் வந்தபோது இப்படித்தான் சொன்னார்கள். ஆரம்பத்தில் பூஜை போடும்போதே படமும் பெற்றார்கள். ஆனால் ஒரு கட்டத்தில் உஷாராகி நீங்கள் தியேட்டரில் வெளியிடுங்கள். அப்புறம் பார்க்கலாம் என கூறி விட்டார்கள். சில படங்கள் தியேட்டரில் சரியாக போகாமல் இருக்கலாம். அதனை பெரிய விலைக்கு டிவி சேனல் வாங்கி விட்டால் அவர்களுக்கு நஷ்டம் ஆகிவிடும் என்பதால் அப்படி சொன்னார்கள்.
அப்படி ஒரு நிலை ஓடிடிக்கு உண்டாகும் என நினைத்தோம். அதுபோல் நடந்து விட்டது. தியேட்டருக்கு வராமல் எத்தனையோ படம் நேரடியாக ஓடிடியில் ரிலீசானது. அன்றைக்கு சூர்யா நடித்த சூரரைப்போற்று, ஜெய்பீம் ஆகிய படங்கள் நேரடி ஓடிடியில் தான் வெளியானது. ஆனால் இன்றைக்கு அவர் நடித்து ரிலீசுக்கு தயாராக உள்ள கருப்பு படம் ஓடிடியில் விற்பனை செய்யாமல் வைத்திருக்கிறார்.
இதே சூர்யாவிடம் தான் சூரரைப்போற்று படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிடாதீர்கள், தியேட்டருக்கு கொடுங்கள் என எவ்வளவோ சொன்னோம். அப்போது எங்களை மார்க்கெட் நிலவரம் தெரியாமல் கூறுவதாக சுற்றியிருந்தவர்கள் கேவலமாக பேசினார்கள். கார்த்தியின் சர்தார் 2 படமும் அப்படித்தான் விற்காமல் உள்ளது.
அன்றைக்கு சொல்லும்போது நிறைய பணம் தருகிறார்கள் முதல் ஆளாக பையை தூக்கிக்கொண்டு போன நீங்கள் இப்போது போங்கள் பார்க்கலாம். சூர்யா, கார்த்தி, தனுஷ் என அனைவருமே நேரடியாக ஓடிடி நிறுவனத்துடன் பேச வேண்டியது தானே?. இன்றைக்கு ஓடிடி நிறுவனம் சொல்வதை வைத்து தான் ரிலீஸ் தேதியை முடிவு செய்கிறார்கள். நீங்கள் அப்போது ஒழுங்காக தியேட்டரில் ரிலீஸ் செய்திருந்தால் உண்டான மரியாதை இருந்திருக்கும். தியேட்டரை நம்பி பிரயோஜனமில்லை என சொல்லி சென்றீர்கள். இப்போது ஓடிடி நிறுவனம் பல நிபந்தனைகளை விதிக்கிறது. தியேட்டர் கலெக்ஷனை வைத்து தான் பட வியாபாரத்தை நிர்ணயம் செய்ய முடியும் என சொல்லி விட்டார்கள். இன்று அப்படி நிலைமை மாறி விட்டது” என கூறியுள்ளார்.
திருப்பூர் சுப்பிரமணியன் சூர்யாவை குறிப்பிட்ட கருத்து சொல்ல காரணம் 2020ம் ஆண்டில் ஓடிடி தளங்கள் வளர தொடங்கியபோது முதல் பெரிய படமாக சூரரைப்போற்று தான் பார்க்கப்பட்டது. அப்படம் தியேட்டரில் வெளியாகியிருந்தால் நிச்சயம் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்து லாபமாக அமைந்திருக்கும் என இன்றளவும் பலரும் கூறி வருகின்றனர்.
ஓடிடி தளமும்.. சூர்யா படமும்
சூர்யா நடித்த சூரரைப்போற்று, ஜெய்பீம் ஆகிய இரு படங்களும் 2020, 2021 ஆகிய ஆண்டுகளின் தீபாவளிக்கு நேரடியாக ஓடிடியில் வெளியானது. அதேசமயம் கொரோனா காலக்கட்டத்தில் முதல்முறையாக ஓடிடியில் நேரடியாக வெளியான தமிழ் படம் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்து ஜோதிகா நடித்த “பொன்மகள் வந்தாள்” படம் தான். மேலும் ஜோதிகா நடித்த ‘உடன் பிறப்பே’ படமும் நேரடி ஓடிடி ரிலீஸானது.
அதேபோல் 2டி நிறுவனம் இணைந்து தயாரித்த ஓ மை டாக், ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் படங்களும் ஓடிடியில் நேரடியாக வெளியானது குறிப்பிடத்தக்கது.





















