9 Years Of Kaththi: இட்லியை வைத்து கம்யூனிசம் பேசிய விஜய்.. 2ஜி பற்றிய வசனம்.. ‘கத்தி’ படம் வெளியான நாள் இன்று..!
ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான கத்தி திரைப்படம் வெளியாகி இன்றுடன் 9 ஆண்டுகள் நிறைவடைகிறது.
நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற கத்தி படம் வெளியாகி இன்றோடு 9 ஆண்டுகள் நிறைவடைகிறது.
கத்தி
ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் , சமந்தா, சதீஷ், உள்ளிட்டவர்கள் நடித்து கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியானத் திரைப்படம் கத்தி. அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்திருந்தார். ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவில் லைகா புரொடக்ஷன்ஸ் இந்தப் படத்தை தயாரித்தது. கத்தி திரைப்படம் வெளியாகி இன்றுடன் 9 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இப்படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார்.
விஜய் - முருகதாஸ் கூட்டணி
ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் விஜய் ஆகிய இருவரின் கூட்டணியில் முன்னதாக வெளியான துப்பாக்கித் திரைப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. சொல்லப்போனால் விஜய்யின் கேரியரில் முதல் ரூ.100 கோடியை வசூலித்த படமாகவும் துப்பாக்கி இருந்தது.
இப்படியான நிலையில் இரண்டாவது முறையாக இவர்களின் கூட்டணி இணைந்தது பெரும் எதிர்பார்ப்புகளை உருவாக்கி இருந்தது. துப்பாக்கி படத்தில் கூலாக, அதிகம் உணர்வுகளை வெளிப்படுத்தாத ஜெகதீஷ் கதாபாத்திரத்தில் விஜய் நடித்திருப்பார். அதே நேரத்தில் உணர்ச்சிவசமான ஜீவா கதாபாத்திரத்தில் கத்தி படத்தில் விஜய் நடித்திருந்தார்.
முருகதாஸ், அட்லீ, இப்போது லோகேஷ் கனகராஜ் ஆகிய மூவரிடம் விஜயின் ஒரே விதமான அணுகுமுறையை நாம் பார்க்கலாம். இந்த இயக்குநர்களுடன் ஒரு படத்தில் நடித்து அந்த படங்கள் வெற்றியும் பெற்றன. இதனைத் தொடர்ந்து இவர்களுடனான இரண்டாவது முறையாக விஜய் நடித்தப் படங்களில் தனது இயக்குநர்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்திருப்பதைப் கவனிக்க முடியும். மேலும் நடிப்பு ரீதியாக தன்னுடைய எல்லைகளை பெரிதாக்கி இருக்கிறார்.
கத்தி படத்தின் கதை
ஜீவானந்தம், கதிரேசன் என்ற இரண்டு கேரக்டரில் விஜய் நடித்திருந்தார். சிறையில் இருந்து தப்பிக்கும் கதிரேசன், ஒரு விபத்தில் தன்னைப் போல இருக்கும் விவசாயிகள் பிரச்சினைக்காக குரல் கொடுத்து போராடி வரும் ஜீவாவை பார்க்கிறார். ஆள்மாறாட்டத்தில் ஈடுபட ஜீவா சிறைக்குள் செல்கிறார். இந்த பக்கம் கதிரேசன் கார்ப்பரேட் கம்பெனியிடம் பணத்தை பெற்றுக் கொண்டு விவசாயிகளுக்கு எதிராக இருக்க நினைக்கும் நிலையில் ஜீவா பற்றிய உண்மை தெரிய வருகிறது.
இதனால் அவருக்கு பதிலாக விவசாயிகளுக்கு ஆதரவாக அவர்களின் பிரச்சினைகளை தீர்க்க நினைக்கிறார். இறுதியாக என்ன நடந்தது என்பதே இப்படத்தின் கதையாகும்.
சர்ச்சையை சந்தித்த படம்
மிகப்பெரிய ஸ்டார்கள் சமூக கருத்துக்கள் உள்ள படங்களில் நடித்தால் அது எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதற்கு கத்தி படம் ஒரு நல்ல உதாரணம். இந்தப் படத்தில் பேசிய கருத்துக்களின் மேல் பல விதமான விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் வைக்கப்பட்டன. குறிப்பாக திமுகவுக்கு மிகப்பெரிய பிரச்சினையாக இருந்த 2ஜி பற்றிய வசனம், கோகோ கோலா கம்பெனிக்கு எதிரான வசனம் என கிளைமேக்ஸ் காட்சியில் பேசும் அந்த சிங்கிள் ஷாட் வசனம் பலத்த வரவேற்பை பெற்றது.
என்றாலும் வெகு ஜனத்திடம் கார்ப்பரேட் நிறுவங்களால் விவசாயிகள் பாதிக்கப்படுவது குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியது. மேலும் தீவிரமான கருத்துக்கள் இருந்தபோதிலும் கமர்ஷியல் ரீதியிலாக பல சாதகமான அம்சங்களையும் படம் கொண்டிருந்தது. துப்பாக்கிப் படத்தைத் தொடர்ந்து 100 கோடி வசூல் இலக்கை 12 நாட்களில் எட்டியது கத்தி படம். வழக்கம்போல ஏ.ஆர்.முருகதாஸ் இந்த படத்திலும் கதை திருட்டு சர்ச்சையில் சிக்கினார்.
மேலும் படிக்க: 47 Years of Moondru Mudichu: ரஜினிக்கே வில்லியான ஸ்ரீதேவி.. மறக்க முடியாத கமல்.. “மூன்று முடிச்சு” வெளியான நாள்..!