47 Years of Moondru Mudichu: ரஜினிக்கே வில்லியான ஸ்ரீதேவி.. மறக்க முடியாத கமல்.. “மூன்று முடிச்சு” வெளியான நாள்..!
இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் இயக்கத்தில் உருவாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற “மூன்று முடிச்சு” திரைப்படம் இன்றோடு 47 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் இயக்கத்தில் உருவாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற “மூன்று முடிச்சு” திரைப்படம் இன்றோடு 47 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
தெலுங்கு - மலையாளம் - தமிழ்
மறைந்த தெலுங்கு பட இயக்குநர் கே.விஸ்வநாத் இயக்கி 1973 ஆம் ஆண்டு வெளியான ஓ சீதா கதா படத்தின் ரீமேக் தான் “மூன்று முடிச்சு” படமாகும். இந்த படம் மலையாளத்தில் 1975 ஆம் ஆண்டு மாட்டோரு சீதா என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இந்த படத்தில் வில்லனாக கமல்ஹாசன் நடித்திருப்பார். இருமொழிகளிலும் படம் மிகப்பெரிய ஹிட்டடிக்க, தமிழில் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் படத்தை ரீமேக் செய்ய முடிவு செய்தார்.
இதில் கமல்ஹாசன் ஹீரோவாக நடிக்க, வில்லன் கேரக்டரில் ரஜினிகாந்த் நடித்திருந்தார். குழந்தை நட்சத்திரமாக ஜொலித்த மறைந்த நடிகை ஸ்ரீதேவி தனது 13வது வயதில் ஹீரோயினாக எண்ட்ரீ கொடுத்தார். மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இந்த படத்துக்கு இசையமைத்திருந்தார்.
படத்தின் கதை
கமலும், ரஜினியும் இணை பிரியா நண்பர்கள். இருவரும் ஸ்ரீதேவியை காதலிப்பார்கள். ஆனால் அவருக்கோ கமல் மீது விருப்பம் இருக்கும். அதேசமயம் ரஜினியின் இன்னொரு முகமும் ஸ்ரீதேவிக்கு தெரிந்திருக்கும். கமலின் காதலுக்கு சப்போர்ட் செய்வது போல நடிப்பார். இதனிடையே 3 பேரும் படகு பயணம் மேற்கொள்வார்கள். ஏரியின் நடுப்பகுதிக்கு வந்தவுடன் ரஜினி பிளான் பண்ணி படகை கவிழ்த்து விடுவார். நீச்சல் தெரியாத கமல் இறந்து விடுவார்.
இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் ஸ்ரீதேவிக்கு சகோதரி ரூபத்தில் சோதனை வரும். இதனால் 4 குழந்தைகளுடன் ஒரு செல்வந்தர் என்.விஸ்வநாத்தை திருமணம் செய்ய வந்த விளம்பரத்துக்கு விண்ணப்பிப்பார். முதலில் திருமணம் செய்ய மறுக்கும் என்.விஸ்வநாத், மூத்த மகன் ரஜினிக்கு ஸ்ரீதேவியை திருமணம் செய்து வைக்க நினைக்கிறார். இதற்கிடையில் ரஜினியால் ஸ்ரீதேவி சகோதரியும் தற்கொலை செய்து கொள்வார். இதனால் ஆத்திரத்தில் இருக்கும் ஸ்ரீதேவி, ரஜினியை பழிவாங்க என்.விஸ்வநாத்தை திருமணம் செய்து கொள்வார். இப்போது ரஜினிக்கு ஸ்ரீதேவி சித்தி முறையாகும். இதன்பிறகு என்ன நடக்கிறது என்பதே இப்படத்தின் கதையாகும்.
காலத்தால் அழியாத பாடல்கள்
வழக்கம்போல கே.பாலசந்தர் - கவியரசர் கண்ணதாசன் - எம்.எஸ்.விஸ்வநாதன் கூட்டணி காலத்தால் அழியாத பாடல்களை வழங்கினர். 3 பாடல்கள் இடம் பெற்ற நிலையில், “வசந்த கால நதிகளிலே” என்ற பாடல் அனைவரின் பேவரைட் ஆகவும் அமைந்தது. இப்படத்தில் கமல் வசிக்கும் வீடாக காட்டப்பட்டது அவரது சொந்த வீடாகும். ரஜினியின் மனசாட்சி கேரக்டரில் அவரின் நெருங்கிய நண்பர் கே. நட்ராஜ் நடித்திருந்தார். ரீமேக் படம் என்றாலும் எப்படி சுவாரஸ்யமாக கதை சொல்ல வேண்டும் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் “மூன்று முடிச்சு” படம்..!