Ghilli Re-Release: 20 ஆண்டுகளுக்கு பின் ரீ-ரிலீஸாகும் விஜய்யின் கில்லி.. என்னைக்கு தெரியுமா?
நடிகர் விஜய் நடித்த கில்லி (Ghilli) படம் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக ரசிகர்களிடையே இருந்து வந்தது.
நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த கில்லி (Ghilli Re-Release) படம் ரீ-ரிலீஸ் ஆகும் தேதி பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் படங்கள் எப்போது வெளியாகும் என ஒவ்வொரு ஆண்டும் தொடங்கும் போதும் எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எகிறும். ஆனால் சமீப காலமாக முன்னணி நடிகர்கள் மட்டுமல்லாமல் எந்த படங்களும் பெரிய அளவில் வெற்றி பெறாததால் தியேட்டர்களுக்கு மக்கள் வெளிவருவது குறைந்து விட்டதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இப்படியான நிலையில் கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் பல நடிகர்களின் பழைய படங்கள் மீண்டும் ரீ -ரிலீஸ் செய்யப்பட்டு வருவது வாடிக்கையாகி வருகிறது.
முன்னதாக நடிகர்களின் பிறந்தநாள் உள்ளிட்ட குறிப்பிட்ட சில தினங்களுக்கு மட்டுமே அவர்கள் நடித்த பழைய படங்கள் மீண்டும் வெளியாவது இருந்தது. ஆனால் அந்த ட்ரெண்ட் தற்போது முற்றிலும் மாறி பழைய படங்களை தியேட்டரில் வெளியிடுவதால் தாங்கள் சிறு வயதில் பார்க்க முடியாத படங்களை மீண்டும் திரையில் பார்ப்பது என இந்த ரீ ரிலீஸ் படங்களுக்கு ரசிகர்கள் மிகப்பெரிய ஆதரவை தருவதால் அன்று ஓடாத படங்கள் கூட இன்று வசூலை வாரிக் குவிக்கிறது.
அந்த வகையில் நடிகர் விஜய் நடித்த கில்லி படம் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக ரசிகர்களிடையே இருந்து வந்தது. அவர் நடித்த பல சூப்பர் ஹிட் படங்கள் கடந்த ஆண்டு மீண்டும் திரையிடப்பட்ட நிலையில் கில்லி படம் விரைவில் தியேட்டருக்கு 4k தொழில்நுட்பத்தில் மாற்றப்பட்டு வெளியாகும் என அப்படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் சில தினங்களுக்கு முன் ஒளிபரப்பான நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தார்.
*Tha Eduth Veingada Antha Re - Release Record Ah..!! 🛐🔥#Ghilli #ReRelease On April 17th 💥 pic.twitter.com/Towx0R8vfb
— MJ Rajesh 🐐 (@mj_rajesh_20) February 25, 2024
2004 ஆம் ஆண்டு விஜய்,த்ரிஷா,பிரகாஷ்ராஜ், தாமு, ஆஷிஷ் வித்யார்த்தி,ஜெனிஃபர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் கில்லி. தரணி இயக்கிய இந்த படம் தெலுங்கில் மகேஷ்பாபு நடித்த மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற ஒக்கடு படத்தின் ரீமேக் ஆகும். இதில் கபடி வீரராக விஜய் நடித்திருந்தார். வித்யாசாகர் இசையமைத்த கில்லி படம் இன்றும் டிவியில் ஒளிபரப்பினால் கூட டிஆர்பி ரேட்டிங்கில் எகிறும் அளவுக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்த ஒரு படமாகும்.
ஒரிஜினல் படத்தை விட ரீமேக் படம் சிறப்பாக இருக்கிறது என மகேஷ்பாபுவை பாராட்டிய அளவுக்கு கில்லி படம் தமிழ்நாட்டில் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இந்த படத்தில் இடம்பெற்ற அப்படிப்போடு பாடல் அந்தக் கால பார்ட்டி சாங்காக பட்டி தொட்டியெங்கும் ஒலித்தது. இப்படியான கில்லி படம் கடந்த ஆண்டு விஜய் பிறந்தநாள் அன்று ரீ ரிலீஸ் செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. ஆனால் பல பணிகள் காரணமாக இந்தத் திட்டம் அப்போதைக்கு கைவிடப்பட்டது.
இந்த நிலையில் வரும் ஏப்ரல் 17ஆம் தேதி விஜய் நடித்த கில்லி படத்தை மீண்டும் ரிலீஸ் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக கிட்டத்தட்ட உறுதியான தகவல் வெளியாகி உள்ளது. கில்லி படம் 2004 ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 17ஆம் தேதி வெளியாகி இருந்தது. மீண்டும் 20 ஆண்டுகள் கழித்து அதே தேதியில் வெளியாவது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பலரும் #Ghilli என்ற ஹேஸ்டேக்கை சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.