Thalaivar170: பா.ரஞ்சித்தின் காலா, கபாலி.. யதார்த்தத்தின் மூலம் ரசிகர்களை வெல்வாரா ஞானவேல்?
மிக யதார்த்தமாக நடிக்கும் அற்புதமான கலைஞனாகிய ரஜினிகாந்தை, எழுத்தாளரும், பத்திரிகையாளருமாகிய ஞானவேல் மிகவும் யதார்த்தமான மக்கள் மனதை மீண்டும் கனமாக்கும் ஒரு கதையின் நாயகனாக திரையில் காட்டுவாரா?
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு உண்மையில் இன்று லைகா நிறுவனம் அளித்த அறிவிப்பு என்பது உண்மையில் அனைவரையும் ஆனந்தப்பட வைத்த அறிவிப்பு என்றே கூறலாம். சூப்பர்ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் ரஜினிகாந்தின் படத்தின் அறிவிப்பு என்றாலே ரசிகர்கள் அனைவருக்கும் தானாகவே ஒரு உற்சாகம் பிறந்துவிடும். இன்று வெளியானதும் அவரது புதிய படத்திற்கான அறிவிப்பே.
ரஜினியை இயக்கும் ஜெய்பீம் இயக்குனர்:
ஆனால், இந்த படத்திற்கான ஆனந்தத்திற்கும், எதிர்பார்ப்பிற்கும் ரஜினிகாந்த் மட்டுமே காரணம் அல்ல. படத்தை இயக்கப்போகும் இயக்குனர்தான் அதற்கு காரணம். ஜெய்பீம் என்ற நெஞ்சை உலுக்கும் படத்தை இயக்கிய ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார். ஜெய்பீம் படம் தமிழ் சினிமாவில் எப்போதுமே கொண்டாடப்பட வேண்டிய திரைப்படம் என்று பலரும் பாராட்டியுள்ளனர். காவல்நிலைய மரணங்களையும், சமூகத்தின் விளிம்புநிலையில் கல்வி கிடைக்காத சமூகத்தினர் படும் இன்னல்களையும், அவர்கள் மீது காட்டப்படும் அடக்குமுறையையும் அவ்வளவு அழகாக யதார்த்தமாக இயக்கிய திரைப்படமே ஜெய்பீம்.
அப்படி தமிழக மக்களின் பாராட்டுகளை பெற்ற ஜெய்பீம் படத்தை இயக்கிய இயக்குனருக்கு வாய்ப்பு அளித்த காரணத்தால் ரஜினிகாந்தையும் பலரும் பாராட்டி வருகின்றனர். ஆனாலும், ஞானவேலுக்கு மிகப்பெரிய சவால் காத்துள்ளது என்பதுதான் நிதர்சனமான உண்மை. லிங்கா படத்தின் தோல்விக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் தனது ரூட்டை மாற்ற நினைத்தபோது, அப்போது மெட்ராஸ் படம் மூலம் தமிழ் சினிமாவில் அதுவரை பேசப்படாத வட சென்னை மக்களின் வாழ்வியை அவ்வளவு அழகாக காட்டிய பா.ரஞ்சித்துடன் கூட்டணி சேர்ந்தார்.
கபாலி, காலா மீதான எதிர்பார்ப்பு:
கே.எஸ்.ரவிக்குமார், ஷங்கர், ஏ.ஆர்.ரஹ்மான், வைரமுத்து என்று பிரம்மாண்டங்களுடன் கூட்டணி சேர்ந்திருந்த ரஜினிகாந்த் முதன்முறையாக பா.ரஞ்சித்துடன் கூட்டணி சேர்ந்தது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இளைஞராகவே உலா வந்த ரஜினிகாந்தை அவரது வயதிலே கபாலியாக காட்டி பா.ரஞ்சித் போஸ்டர் வெளியிட்டதும் ஏற்கனவே இருந்த எதிர்பார்ப்பை மேலும் எகிறவைத்தது. ஆனால், மெட்ராஸ் படம் போலவே கபாலியும் ரசிகர்களை கட்டிப்போடும் என்ற எதிர்பார்ப்பு அதிகமான திருப்தியை தரவில்லை
ஏனென்றால், மெட்ராஸ் படமானது வடசென்னையில் வாழும் மக்களின் வாழ்வியலை மிகவம் யதார்த்தமாக காட்டியது. அதேபோல ஒரு யதார்த்தை கபாலியில் எதிர்பார்த்த ரசிகர்களுக்கு அது ரஞ்சித் படமாகவும் இல்லாமல், ரஜினிகாந்தின் சுறுசுறுப்பையும், விறுவிறுப்பையும் பார்த்த ரசிகர்களுக்கு அது ரஜினி படமாகவும் அல்லாமல் அமைந்தது பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. பா.ரஞ்சித் கபாலி படத்தை தன்னுடைய படமாக அல்லாமல் ரஜினிகாந்த் படமாக இயக்க நினைத்ததே ரசிகர்களை கபாலி சென்றடையாமல் போனதற்கு காரணம்.
ரஞ்சித் செய்த தவறென்ன?
அதற்கு அடுத்து, சூப்பர்ஸ்டாரை வைத்து மீண்டும் பா.ரஞ்சித் இயக்கிய படம் காலா. கபாலியுடன் ஒப்பிடும்போது காலா ரசிகர்களுக்கு நல்ல விருந்தாகவே அமைந்து என்று கூறலாம். மும்பையில் வாழும் தமிழர்கள் கதைக்களம், ரஜினிகாந்தின் நடிப்பு, நகைச்சுவை, நில அரசியல், ஆதிக்கத்தை எதிர்கொள்வது, தெறிக்கும் வசனங்கள் என்று பா.ரஞ்சித் படமாக காலா வந்தது.
ஆனாலும், மெட்ராஸ் மற்றும் சார்பட்டா பெற்ற மாபெரும் வெற்றியை கபாலியும், காலாவும் ரஜினி என்ற பிரம்மாண்டம் இருந்தும் பா.ரஞ்சித்தால் அளிக்க இயலவில்லை. அதற்கு காரணம், உச்ச நட்சத்திரங்களை இயக்கும்போது இயக்குனர்கள் அவர்கள் உருவாக்கிய கதையில் உச்சநட்சத்திரங்களுக்காகவும், அவர்களது ரசிகர்ளுக்காகவும் தாங்கள் எழுதிய கதையில் சமரசம் செய்வதாலுமே படம் முழுமையடையாமல் போகிறது.
மெட்ராஸ் படமும், சார்பட்டா படமும் முழுமையாக பா.ரஞ்சித் படமாகவே வந்திருக்கும். ஆனால், கபாலி படம் முழுமையாக பா.ரஞ்சித் படமாக வராமலே போய்விட்டது என்றே கூறலாம். அதன் எதிரொலியே காலா பா.ரஞ்சித்தின் படமாகவே வந்தது. சமூகத்தின் அவலத்தை அப்படியே தோலுரித்துக் காட்டி, சூர்யா என்ற உச்சநட்சத்திரம் இருந்தும் கதையில் அவருக்காக எந்தவொரு சமரசமும் செய்யாமல் ஞானவேல் தான் நினைத்ததை அப்படியே திரையில் கொண்டு வந்ததன் காரணமாகவே ஜெய்பீம் படம் ரசிகர்கள் அனைவரையும் ஜெய்பீம் என்று சொல்ல வைத்தது.
இன்னொரு ஜெய்பீம் அமையுமா?
அதனால், ரஜினிகாந்தை இயக்குவதால் ஞானவேல் சூப்பர்ஸ்டாருக்கென்று ஆக்ஷன் காட்சிகள், அவரது ரசிகர்களை கவர்வதற்கான பாடல்கள் என்று கதையை திசைதிருப்பும் எந்தவொரு செயலும் இல்லாமல், தான் என்ன திரையில் கொண்டு வர நினைத்தாரோ அதையே அப்படியே திரையில் கொண்டு வந்தால் அது நிச்சயம் ஜெய்பீம் காட்டிலும் மாபெரும் வெற்றிப்படமாக அமையும். ஏனென்றால், ரஜினிகாந்தை ஆக்ஷன் ஸ்டைல் மன்னனாகவே பார்த்து பழகிய நமக்கு அவருக்குள் ஒளிந்திருக்கும் நல்ல நடிகரை பார்த்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது.
மிக யதார்த்தமாக நடிக்கும் அற்புதமான கலைஞனாகிய ரஜினிகாந்தை, எழுத்தாளரும், பத்திரிகையாளருமாகிய ஞானவேல் மிகவும் யதார்த்தமான மக்கள் மனதை மீண்டும் கனமாக்கும் ஒரு கதையின் நாயகனாக திரையில் காட்டுவாரா? என்பதே அவர் முன்னால் தற்போது நிற்கும் சவால் ஆகும்.