Thaikkupin Tharam Movie: தேவரும் எம்.ஜி.ஆர்-வும்... இணைந்ததும் பிரித்ததும் ‛தாய்க்குப் பின் தாரம்’!
நடிகராகி இருந்து தேவர் தயாரிப்பாளராக இறங்கிய பின் தன்னுடைய தேவர் பிலிம்ஸ் நிறுவனத்தின் கீழ் தயாரித்த முதல் திரைப்படம் தாய்க்கு பின் தாரம். இப்படம் வெளியாகி இன்றோடு 66 ஆண்டுகள் நிறைவு பெறுகின்றன.
சதிலீலாவதி என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான எம்.ஜி.ஆர் அதற்கு பிறகு பல ஹிட் படங்களை கொடுத்தார். இருப்பினும் சமூகம் சார்ந்த ஒரு கதையில் அவர் நடித்து அமோக வெற்றி பெற்ற முதல் திரைப்படம் 1956ல் வெளியான "தாய்க்கு பின் தாரம்" திரைப்படம். இப்படம் வெளியாகி இன்றோடு 66 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. எம்.ஏ. திருமுகம் இயக்கிய இந்த படத்தில் நடிகை பானுமதி மற்றும் டி.எஸ். பாலையா, ராதாகிருஷ்ணன், கண்ணாம்பா, சகுந்தலா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு இசை அமைத்து இருந்தார் கே.வி. மஹாதேவன்.
தேவர் பிலிம்ஸ் முதல் தயாரிப்பு:
சினிமா மீது மிகுந்த மோகம் கொண்டவர் சாண்டோ சின்னப்ப தேவர் பல படங்களில் நடித்துள்ளார். ஆனால் அவர் தயாரிப்பாளராக இறங்கிய பின் தன்னுடைய தேவர் பிலிம்ஸ் நிறுவனத்தின் கீழ் தயாரித்த முதல் திரைப்படம் தாய்க்கு பின் தாரம். இவருக்கும் எம்.ஜி.ஆருக்கும் நல்ல சிநேகிதம் இருந்ததால் அவரின் முதல் படத்திற்காக கால்ஷீட் ஒதுக்கி கொடுத்துள்ளார் எம்.ஜி.ஆர். பின்னர் நடிகை பானுமதி இப்படத்தில் நடிக்க ஒப்புதல் அளித்துள்ளார்.
ரசிகர்களை கவர்ந்த சண்டை காட்சிகள்:
இப்படத்தில் முத்தையன் என்ற கதாபாத்திரத்தில் எம்.ஜி.ஆர் நடித்திருந்தார். அவரின் தாயாக கண்ணாம்பாவும், மாமாவாக பாலையாவும் நடித்திருந்தார்கள். ஒரு வில்லத்தனமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் நகைச்சுவை கலந்த அவரின் நடிப்பு மிகவும் சிறப்பாக இருந்தது. அவரின் மகளாக பானுமதி நடித்திருந்தார். இப்படத்தில் முத்தையன் தந்தை ஒரு ஜல்லிக்கட்டு காளையை அடக்கும் போது மோதி பலியாகிறார். அதே காளையை படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் எம்.ஜி.ஆர் அடக்கி தன்னை நிரூபிப்பார்.
காளை கிடைத்த கதை :
இந்த படத்தில் மிகவும் சிறப்பு வாய்ந்த அம்சமாக கருதப்பட்டது ஜல்லிக்கட்டு காட்சிகளும், சிலம்ப காட்சிகளும் தான். இந்த காட்சிகள் சிறப்பாக அமைந்ததற்கு முக்கிய காரணமாக இருந்தது ஒரு தரமான ஜல்லிக்கட்டு காளையை தேர்ந்தெடுத்தது தான். பல இடங்களில் தேடியும் கிடைக்காத காளை கடைசியாக ஒரு முஸ்லீம் மிராசுதாரர் வீட்டில் இருப்பதை அறிந்து பல பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு காளையின் உரிமையாளர் படத்தின் ஷூட்டிங்காக கொடுத்துள்ளார்.
தேவரோடு மோதிய எம்.ஜி.ஆர் :
தேவருக்கு நடிப்பின் மீது ஆர்வம் அதிகம் இருந்ததால் அவரே படத்தில் மாயாண்டி எனும் அடியாள் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தேவரும் எம்.ஜி.ஆரும் சிலம்ப சண்டை போடும் காட்சிகளை மிகவும் ரசித்தார்கள் ரசிகர்கள். அதே போல எம்.ஜி.ஆர் காளையை அடக்கும் காட்சியும் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்ததற்கு காளையும் ஒரு காரணம் என்பதால் தனது தயாரிப்பு நிறுவனத்திற்கு அதையே சின்னமாக வைத்து கொண்டார் தேவர்.
நட்பில் ஏற்பட்ட விரிசல்:
தாய்க்கு பின் தாரம் திரைப்படம் அமோக வெற்றியை பெற்று 100 நாட்கள் திரையரங்குகளில் ஓடி சாதனை படைத்தது. இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சி எடுப்பது குறித்த கருத்துவேறுபாடு காரணமாக அதுவரையில் நண்பராக இருந்த எம்.ஜி. ஆரும் தேவரும் பிரிந்தனர் பின்பு பல ஆண்டுகளுக்கு பின்னர் ஒன்று சேர்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.