Chalaki Chanti: மாரடைப்பால் பிரபல தெலுங்கு காமெடி நடிகர் மருத்துமனையில் அனுமதி.. ரசிகர்கள் அதிர்ச்சி
தெலுங்கு நகைச்சுவை நடிகர் சாலகி சாந்தி மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தெலுங்கு நகைச்சுவை நடிகர் சாலகி சாந்தி மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சமீபகாலமாக திரைத்துறையினர் மட்டுமல்லாமல் நம்மைச் சுற்றியுள்ள பெரும்பாலான நபர்கள் மாரடைப்பால் உயிரிழந்து வருவது தொடர்பாக செய்திகள் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக இளம் வயதினர் அடுத்தடுத்து உயிரிழந்து வருவது அல்லது பாதிக்கப்படுவது ஆரோக்கியமான உடல் நலம் குறித்த கேள்வியை எழுப்பி வருகிறது. இதுபோன்ற பிரச்சினைகளை தவிர்க்க டயட் உள்ளிட்ட பல விஷயங்களில் மக்கள் கவனம் செலுத்தி வருகின்றனர். இதனிடையே தெலுங்கு நகைச்சுவை நடிகர் சாலகி சாந்தி மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சாலகி சாந்தி ஈடிவி தெலுங்கு சேனலில் ஒளிபரப்பான ஜபர்தஸ்த் காமெடி ஷோவில் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார். இவரின் உண்மையான பெயர் வினய் மோகன். திரைத்துறைக்காக சாலடி சாந்தி என தனது பெயரை மாற்றுக் கொண்டார். ஆரம்பத்தில் டாடா இண்டிகாம் நிறுவனத்தில் பணிபுரிந்த அவர், டேங்க் பண்ட் சுற்றுலா படகு சவாரிகளில் மிமிக்ரி செய்யத் தொடங்கினார். அதன் தொடர்ச்சியாக ரேடியோ மிர்ச்சியில் ஆர்.ஜே. வாக சேர்ந்தார். இதில் அவர் செய்த சாந்தி பூந்தி நிகழ்ச்சியின் நினைவாக சாந்தி என்ற பெயரை தன்னுடன் இணைத்துக் கொண்டார்.
சந்தி ஜல்லு என்ற திரைப்படத்தின் மூலம் தெலுங்கு திரைப்படங்களில் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து பீமிலி கபடி ஜட்டு படத்தின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான சாலகி சாந்தி, தனு வச்செண்டா, ஆடகதாரா சிவா, ராகு, நல்லமேலா, திரிவிக்ரமா உள்ளிட்ட பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்துள்ளார். தெலுங்கு ரியாலிட்டி ஷோ பிக்பாஸ் சீசன் 6 இல் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்று பாதியிலேயே வெளியேறினார்.
பிக்பாஸில் இருந்து வெளியே வந்த பிறகு சில நிகழ்ச்சிகளில் பங்கேற்ற சாலகி சாந்தி அதன்பின்னர் பெரிய அளவில் வெளி நிகழ்ச்சிகளில் தலைகாட்டாமல் இருந்து வந்தார்.
இந்நிலையில் சாலகி சாந்தி மாரடைப்பு காரணமாக ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) சிகிச்சை பெற்று வருவதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனிடையே சாலகி சாந்தியின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
அவர் நலம் பெற வேண்டி அனைவரும் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். ஆனால் சாலகி சாந்தியின் உடல்நிலை குறித்து அவரது நண்பர்களோ அல்லது அவரது குடும்பத்தினரோ இதுவரை எந்த தகவலையும் பகிர்ந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Aindrila Sharma Death: பிரபல இளம் நடிகை மாரடைப்பால் மரணம்..! ரசிகர்கள் சோகம்..