Happy birthday Deva: தேவா: இசையால் வேறு உலகத்திற்கான தாழை திறப்பவர்
விதவிதமா சோப்பு சீப்பு கண்ணாடி பாடலை கேட்டால், ஊர் திருவிழாவும், ஒரு கொண்டாட்ட காதல் மனநிலையும் தோன்றி அந்தக் காலகட்டத்திற்கு அழைத்து செல்லும்.
“ஒரு படத்துக்கு நான் இசையமைத்திருந்தேன். ஆனால் ஒரு பத்திரிகையில் ஏ. ஆர். ரஹ்மான் இசை சூப்பர் என விமர்சனம் எழுதுனாங்க சார்”... தேவா ஒரு பேட்டியில் சொன்ன வார்த்தைகள் மேற்கூறியவை.
சினிமாவுக்குள் நுழையும் காலகட்டமும் முக்கியத்துவம் வாய்ந்தது.. திறமை உள்ளவருக்கு எல்லா காலகட்டமும் எல்லையை பெருக்கி சாம்ராஜ்யம் படைக்கும் காலகட்டம்தான். தேவாவும் அப்படி நுழைந்து சாம்ராஜ்யம் படைத்தவர்தான்.
இளையராஜா காலத்தில் நுழைந்து தனது பயணத்தை ஆரம்பித்தாலும் தேவா பயணத்தின் மீது பலரது பார்வை பட்டது ரஹ்மான் அசுர வேகத்தில் சென்ற காலம். ஆனால் தேவா அந்த காலத்திலும் தனக்கென ரசிகர்களை உருவாக்கினார்.
தேவாவின் வெஸ்டர்ன் ஸ்டைல் பாடல்கள் ஆர்ப்பரிக்கும் அருவியின் எனர்ஜி கொடுக்கக்கூடியது. அவரது மெலோடிகள் மெல்லிய மழையின் சத்தத்தையும், குத்துப்பாடல்கள் வெயிலின் அமைதியையும், கானா பாடல்கள் கடலின் அலையையும் கொடுக்கக்கூடியன.
ஆனந்த பூங்காற்றே படத்தின் செம்மீனா பாடல் கேளுங்கள். பாடல் ஒரு ஹம்மிங்கோடு தொடங்கும் மெல்லிய நதியை கிழித்துக்கொண்டு போகும் மீனை போல ஹரிஹரன் செம்மீனா என்று தொடங்குவார்.
அதன் பிறகு 5.28 நிமிடங்கள் தேவா ஒரு மேஜிக் செய்திருப்பார். 100 வாத்தியங்கள் பயன்படுத்தி பிரமாண்டமாக ஆர்கெஸ்ட்ரா செய்தது போல் அந்தப் பாடல் உணர்வு தரும். சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் காதுக்குள்ளும் சிந்தனைக்களுக்குள்ளும் திருவிழா நடத்தும். அந்தப் பாடலுடைய சரணங்களின் இடையே வரும் பெண்ணின் குரல் பனித்துளியை மயிலிறகில் வைத்து தடவிக் கொடுப்பது போன்றது.
காதுகளுக்குள் திருவிழா நடத்தும் பாடல்கள் ஒருவகை. கண்கள் முன் காலங்களை நிறுத்தும் பாடல்கள் ஒருவகை. தேவாவின் பாடல்கள் இந்த இரண்டு வகைகளிலும் இருக்கும்.
விதவிதமா சோப்பு சீப்பு கண்ணாடி பாடலை கேட்டால், ஊர் திருவிழாவும், ஒரு கொண்டாட்ட காதல் மனநிலையும் தோன்றி அந்தக் காலகட்டத்திற்கு அழைத்து செல்லும். அதேபோல், அவரது மெலோடியான முதன் முதலில் பார்த்தேன் பாடல் யாருமற்ற கடலின் நடுவே ஒரு தோணியில் மிதப்பது போன்ற உணர்வை தரும்.
இளையராஜா, ஏ. ஆர். ரஹ்மானுக்கு ஒரு கூட்டம் போய்க்கொண்டிருக்க ஒரு இயக்குநர் கூட்டத்தை தன்னருகே வைத்திருந்தார் தேவா. வைத்திருந்தார் என்பதைவிட அவரது இசை ஈர்த்தது என்று சொல்ல வேண்டும்.
வாலி தேவா ட்யூனுக்கு எழுதி ஆரம்பித்து வைத்ததாலோ என்னவோ கவிஞர்களோடு எப்போதும் தேவாவுக்கு நெருக்கமான பழக்கமுண்டு. ஏராளமான கவிஞர்களோடு அவர் பொருந்திப்போனாலும் அவருக்கு பொருந்திப்போன கவிதைகளில் இரு கவிதைகள் பழனிபாரதி, வைரமுத்து.
வைரமுத்து தேவாவின் ட்யூனுக்குள் அனைத்து விதமாகவும் எழுத, பழனிபாரதி தெளிந்த நீரோடை போல் சென்றிருப்பார். உதாரணத்திற்கு, ஒரு மணி அடித்தால் கண்ணே உன் ஞாபகம், வெண்ணிலவே வெண்ணிலவே வெட்கம் ஏனம்மா. இரண்டு பாடல்களிலும் தேவாவும், பழனிபாரதியும் தங்களது மிகச்சிறந்த படைப்பை இறக்கி விட்டிருப்பார்கள்.
முக்கியமாக தேவா - பழனிபாரதி காம்போவில் நினைத்தேன் வந்தாய் படத்தில் இடம் பெற்றிருந்த பாடல்களில் பழனிபாரதி எழுதிய 5 பாடல்கள். வண்ண நிலவே வண்ண நிலவே வருவது நீதானா என்ற பாடல் இன்றுவரை நாஸ்டால்ஜியா நினைவு வாசனையை நம்மிடையே கொண்டு வந்து சேர்க்கும். அதேபோல்தான் மீதம் 4 பாடல்களும்.
தேவா - வைரமுத்து காம்போவில் அப்பு பட பாடல்கள் ஆகச்சிறந்த இன்பத்தின் உதாரணம். நினைத்தால் நெஞ்சுக் குழி இனிக்கும் அது ஏனோ என்ற பாடல் அமைதியின் ஆழத்திற்கு நம்மை அழைத்து செல்லும். பாடல் காட்சியமைக்கப்பட்ட விதமும், ஹரிஹரணின் குரலும் ரசிகர்களை நிச்சயம் வேறு உலகுக்கு அழைத்து செல்லக்கூடியது.
மெலோடி என்பது உடல் மற்றும் உள்ளத்தை இருக்கும் இடத்திலிருந்து அனைத்தையும் மறந்து ஒரு உலகத்துக்குள் பறக்க வைக்க வேண்டும். அதை மிக சரியாக செய்தவர்களில் தேவாவும் ஒருவர்.
தேவாவின் கானா பாடல்கள் எப்போதும் மனதுக்குள் கொண்டாட்டத்தையும், எளிய வாழ்க்கையையும் கொடுக்கக்கூடியது. அவரது கானா பாடல்கள் அனைத்தும் எளியவர்களை சுற்றியும், அவர்களின் வாழ்க்கையை சுற்றியுமே இருந்தது. வரிகளிலும் அவ்வாறு அமையும்படி பார்த்துக்கொண்டார். சலோமியா பாடலின் ட்யூனாகட்டும், அதில் இருக்கும் வரிகளாகட்டும் கடலோர மக்களுடன் இருப்பது போன்ற உணர்வை கொடுக்கும். இந்த ஒரு பாடல் உதாரணம்தான்.
அவருடைய எந்தப் பாடலை எடுத்துக்கொண்டாலும் ரசிகர்கள் வேறு பரிணாமம் அடைவார்கள். துள்ள வேண்டுமா தேவா, உருக வேண்டுமா தேவா, எளியவர்களுடன் வாழ வேண்டுமா தேவா இப்படி தேவா பலருக்கு இப்போதும் தேவைப்படுகிறார்.
மெலோடிகளிலும், சரி கானா பாடல்களிலும் சரி அவர் எப்போதும் கூடு விட்டு கூடு பாய செய்பவர். இசை என்பது எப்போதும் எந்தவித ஆர்ப்பாட்டமுமின்றி ரசிகர்களிடம் வேறு உலகத்தை எளிமையாக அறிமுகம் செய்ய வேண்டும். அந்த உலகத்தில் எளியவர்களுக்கான இசை இருக்க வேண்டும். அப்படிப்பட்ட இசை மூலம் வேறு உலகத்திற்கான தாழை திறக்க சாவி வைத்திருப்பவர் தேவா. பிறந்தநாள் வாழ்த்துகள் தேனிசை தென்றல்...
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்