Tamil Cinema: இனியும் கதாசிரியர்களை தேடத் தவறினால் தமிழ் சினிமா தவறி விழும்!
Tamil Cinema: 50 கோடி ரூபாயிலிருந்து 100 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கும் நடிகர்கள் பலரும், பெரிய அளவில் ஹிட் கொடுக்கவில்லை.
ஃபான் இந்தியா திரைப்படங்கள் என்கிற பெயரில், தென்னிந்திய திரைப்படங்கள் எல்லாம், வசூலில் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கின்றன. பாலிவுட் கிட்டத்தட்ட படுத்துவிட்டது. ஹிந்தி படங்களின் மோசமான தயாரிப்பு, அடுத்தடுத்து அங்கு வெளியாகும் படங்கள் படுதோல்வியை சந்தித்து வருகின்றன.
இத்தனைக்கும் அதிக ரசிகர் பட்டாளங்களை கொண்ட மாஸ் ஹீரோக்களின் படங்கள் , சமீபத்தில் சந்தித்ததெல்லாம் படுதோல்வி தான். இதனால், தென்னிந்தியாவில் உருவான தரமான படங்கள், ஃபான் இந்தியா மூவி என்கிற பெயரில், வட இந்தியாவிலும் நல்ல வசூலை பெற்று வருகின்றன.
100 கோடியை தாண்டிய சம்பளத்தை பெற்றுக் கொண்டு, ஹிந்தி ஹீரோக்களுக்கு காவடி தூக்கி, தயாரிப்பாளர்கள் பலர் கடும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். சமீபத்தில் நடிகர் அக்ஷய் குமார், தனது சம்பளத்தை 100 கோடி ரூபாயிலிருந்து 20 கோடியாக குறைத்துக் கொள்ளும் அளவிற்கு அங்கே நிலைமை மோசமாகிவிட்டது.
இதெல்லாம் இந்தியில் தான் என்றில்லை; தமிழுக்கு வந்தால் இங்கு அதை விட நிலைமை மோசமாக உள்ளது. 50 கோடி ரூபாயிலிருந்து 100 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கும் நடிகர்கள் பலரும், பெரிய அளவில் ஹிட் கொடுக்கவில்லை. படத்தின் ப்ரொமோஷனுக்கு உதவவில்லை என்கிற பல்வேறு குற்றச்சாட்டுகள் இங்கு இருந்து வருகிறது.
சரி... அதெல்லாம் இருக்கட்டும், படத்தில் கதை இருக்கிறதா? அதுவும் இருப்பதில்லை. ஹீரோக்களை திருப்திப்படுத்த கதை எழுதுவதும், அதை ஒப்புக்கொள்ள கோடிகளை கொட்டி சம்பளம் கொடுப்பதும் தான் இங்கு நடந்து கொண்டிருக்கிறது. பிரம்மாண்ட எதிர்பார்ப்பை கொடுத்து விட்டு, தியேட்டருக்கு போனால், அங்கு படம் கொடூரத்தின் உச்சத்தில் இருக்கிறது. முன்பெல்லாம் ஒரு படத்தின் ரிவியூ தெரிய குறைந்தது இரண்டு மூன்று நாட்கள் ஆகும். இப்போது, முதல் காட்சி முடிவதற்குள் ரிவியூ வந்துவிடுகிறது.
மோசமான படங்கள், கழுகுகளிடம் சிக்கிய இறைச்சி போல மாறிவிடுகிறது. இப்படிப்பட்ட ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமான தத்தளிக்கிறது. எப்போதாவது விக்ரம் போன்ற ஏதாவது ஒரு படம் ஓடும் போது, அதை சொல்லிக் கொண்டே நூறு படங்கள் தோல்வியை சந்திக்கின்றன. இதற்கெல்லாம் காரணம், இன்னும் தமிழ் சினிமா இயக்குனர்களின் தோளில் பயணிப்பது தான்.
கேரளாவில் வெளியாகும் மலையாளப்படங்களுக்கு தனி மவுசு இன்னும் இருப்பதற்கு காரணம், அவை பெரும்பாலும் கதை ஆசிரியர்களின் படங்களாக இருக்கின்றன. அங்கு கதாசிரியர்கள் கொண்டாடப்படுகின்றனர். இயக்குனர்கள் அதை வடிவமைப்பவர்களாக இருக்கின்றனர். இங்கு ஹீரோ எப்படி பெரும்புள்ளியாக பார்க்கப்படுகிறாரோ... அதே போல் தான் இயக்குனரும் பார்க்கப்படுகிறார்.
கதை வேறு, இயக்கம் வேறு. நல்ல கதையை மோசமாக இயக்கலாம். மோசமான கதையை எப்படி இயக்கினாலும் தேற்ற முடியாது. இங்கு ஒரு டெம்பிளேட்டில் தமிழ் சினிமா இயங்கிக் கொண்டிருக்கிறது. ஒரு படம் ஓடினால், அவர் மீது பந்தயம் கட்டும் கண்மூடித்தனம் அது. இங்கு கதைகளை யாரும் நம்புவதாக தெரியவில்லை. இன்னும் இயக்குனர்கள் மீது சவாரி செய்து கொண்டிருக்கிறார்கள். அதனால் தான், கதையில்லாத படங்களை தமிழ் சினிமா தொடர்ந்து கொண்டிருக்கிறது.
எப்போது, கதை ஆசிரியர்களை சந்தித்து தயாரிப்பாளர்கள் கதை கேட்கத் தொடங்குகிறார்களோ அப்போது தான், சினிமா நிமிரும். ஹாலிவுட்டில் கூட, கதை ஆசிரியர்கள் கைகள் தான் உயர்ந்து நிற்கிறது. வெப்சீரிஸ்கள் வந்த பிறகு, சினிமாக்கள் மீது எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாகிவிட்டது. 5 மணி நேரத்தை கடக்கும் வெப்சீரிஸை பரபரப்பாக கொடுக்கும் போது, இரண்டரை மணி சினிமாவை எப்படி தர வேண்டும்?
அதை இயக்குனர்களிடமே தேடிக் கொண்டிருந்தால் கதை ஆகாது; ஆகும் கதைகளை தேட வேண்டும். கோடிகளில் விளையாடும் தொழிலில், முக்கிய மூலதனம் கதை தான். அதை இன்னும் இயக்குனர்களிடம் தேடிக் கொண்டிருந்தால், தயாரிப்பாளர்கள் புலம்பல் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும். இந்தியாவில் அதிகம் பேர் பார்க்கும் இந்தி படங்களே ஆட்டம் கண்டிருக்கும் போது, தமிழ் சினிமாவும் அந்த நிலையை அடைய ரொம்ப தூரம் இல்லை. இனியாவது தயாரிப்பாளர்கள் விழிக்க வேண்டும். இன்னும் குறிப்பாக, வெற்றி படங்களை விரும்பும் நடிகர்கள் விழிக்க வேண்டும். வெறுமனே இயக்குனர்களை மட்டுமே தேடிக் கொண்டிருக்காமல், நல்ல கதைகளை அவர்கள் தேட வேண்டும் . கதாசிரியர்களை தேட வேண்டும். அப்போது தான், தமிழ் சினிமாவை ரசிகர்கள் தேட வேண்டிய நிலை எதிர்காலத்தில் மாறும்.