உள்ளேவா? வெளியேவா? காங்கிரஸ் முடிவுக்காக காத்திருக்கும் கூட்டணி கட்சிகள் - பலே ப்ளானா இருக்கே!
திமுக-வின் கூட்டணியில் நீடிப்பது குறித்து காங்கிரஸ் எடுக்கப்போகும் முடிவைப் பொறுத்து சில முக்கிய முடிவுகளை எடுக்க கூட்டணி கட்சிகள் முடிவு செய்துள்ளது.

சட்டமன்ற தேர்தலுக்காக தமிழ்நாடு விறுவிறுப்பாக தயாராகி வருகிறது. ஒவ்வொரு கட்சியினரும் அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், தமிழ்நாட்டின் முக்கியமான கட்சிகளில் ஒன்றான தேமுதிக நேற்று முன்தினம் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணியில் இணைந்தது.
உள்ளே வந்த தேமுதிக:
தேமுதிக-வின் வருகை திமுக-வை மிகவும் மகிழ்ச்சியாக்கியுள்ளது. அதற்கு முக்கிய காரணம் தேமுதிக வருகையால் காங்கிரசால் அதிக தொகுதி ஒதுக்கீடு என்ற கோரிக்கையையும், ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையையும் அழுத்தமாக எழுப்ப முடியாத சூழல் உருவாகியுள்ளது.
ஏனென்றால், திமுக கூட்டணியில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், தேமுதிக, மதிமுக, விசிக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, மனிதநேய மக்கள் கட்சி என கூட்டணி பட்டியல் மிகவும் பெரியதாக அமைந்துள்ளது.
காங்கிரஸ் உள்ளேவா? வெளியேவா?
கூட்டணி கட்சிகள் ஒவ்வொன்றும் கடந்த முறையை காட்டிலும் அதிக தொகுதிகள் எழுப்பி வரும் நிலையில், காங்கிரசின் கோரிக்கை மட்டுமே திமுக-விற்கு அதிக நெருக்கடியை ஏற்படுத்தி வந்தது. அவர்கள் மட்டுமே அதிக தொகுதிகள் தராவிட்டால் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்குச் சென்றுவிடுவோம் என்று மறைமுகமாகவும், நேரடியாகவும் எச்சரிக்கை விடுத்து வந்தனர்.
தற்போது தேமுதிக வருகையால் தேமுதிக-வை மேற்கோள் காட்டியே அதிக தொகுதிகளை தர இயலாது என்ற வாதத்தை காங்கிரசிடம் முன்வைக்க திமுக முடிவு செய்துள்ளது. தேமுதிக-விற்கு 6 தொகுதிகள் வரை தர திமுக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது காங்கிரஸ் திமுக-வின் முடிவிற்கு ஒப்புக்கொண்டு கூட்டணியில் நீடிக்க வேண்டும். இல்லாவிட்டால் தங்கள் கோரிக்கை நிறைவேறவில்லை என்ற வாதத்தை முன்வைத்து கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும்.
கூட்டணி கட்சிகள் முடிவு:
காங்கிரஸ் கூட்டணியில் நீடித்தாலும் அதை தங்களுக்கு சாதகமாகவும், கூட்டணியில் இருந்து சென்றால் தேமுதிக-வை அவர்களுக்கு மாற்றாகவும் பயன்படுத்திக் கொள்ள திமுக திட்டமிட்டுள்ளது. காங்கிரஸ் ஒருவேளை திமுக கூட்டணியில் இருந்து விலகினால் அதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள கூட்டணி கட்சிகள் முடிவு செய்துள்ளனர்.
அதாவது, காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகினால் அவர்களுக்கு கடந்த சட்டமன்ற தேர்தலில் ஒதுக்கிய 25 இடங்களை தங்களுக்கு பகிர்ந்து அளிக்க கூட்டணி கட்சிகள் முடிவு செய்துள்ளனர். அது சாத்தியமானால் ஒவ்வொரு கட்சியினருக்கும் அவர்களது எதிர்பார்ப்பிற்கு ஏற்ப அதிக தொகுதிகள் பங்கீடும் கிடைக்கும்.
திமுக திட்டம் என்ன?
இதனால், காங்கிரஸ் கட்சி கூட்டணியை விட்டு விலகினால் அவர்களுக்கான இடங்களை தங்கள் வசப்படுத்திக் கொள்ள ஒவ்வொரு கட்சியினரும் இப்போது முதலே வியூகம் வகுக்கத் தொடங்கியுள்ளனர். அதேசமயம், அவ்வாறு கூட்டணி கட்சிகள் அதிக தொகுதிகள் கேட்டால் அதை எப்படி சமாளிக்கலாம்? என்பதற்கும் திமுக வியூகம் வகுத்து வருகிறது.
திமுக கூட்டணியில் அடுத்தடுத்த நாட்கள் பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சம் இருக்காது என்பது மட்டும் உறுதியாகும்.






















