Tamil Actors Union Election: “நடிகர் சங்க தேர்தல் செல்லும்” - தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம்
நடிகர் சங்க தேர்தல் செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ் நடிகர்கள் சங்கத்திற்கான தேர்தல் 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் 23ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்தல் செல்லாது என்று தனி நீதிபதி கல்யாணசுந்தரம் உத்தரவிட்டிருந்தார். அவரின் தீர்ப்பை ரத்து செய்து தற்போது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அத்துடன் அந்தத் தேர்தல் செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு 2019 ஜூன் மாதம் 23ஆம் தேதி நடந்த தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலுக்கு உறுப்பினர்கள் முறையாக அழைக்கப்படவில்லை மற்றும் தேர்தலை அனைத்து இடங்களிலும் நடத்தாமல் சென்னையில் மட்டும் நடத்தியதாக கூறி இதை ரத்து செய்ய வழக்கு ஒன்று தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி கல்யாணசுந்தரம் விசாரித்தார். இந்த வழக்கில் 2020ஆம் அவர் தீர்ப்பளித்தார். அதில், 2019ஆம் ஆண்டு நடைபெற்று தேர்தலை ரத்து செய்து அவர் உத்தரவிட்டார். மேலும் நடிகர் சங்கத்தை நிர்வகிக்க தனி அதிகாரி நியமனம் செல்லும் என்று தீர்ப்பளித்தார். அத்துடன் மூன்று மாதத்தில் நடிகர் சங்கத்திற்கு புதிதாக தேர்தலை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸை நியமித்து உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இந்தத் தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து நடிகர் சங்கம் சார்பில் மேல் முறையீட்டு வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த வழக்கை இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை நடத்தி வந்தது. அந்த வழக்கு விசாரணையின் போது, “கடந்த 2019ம் ஆண்டு ஜூன் 23 தேதி நடைபெற்ற நடிகர் சங்க தேர்தலில் 80 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. அனைத்து வாக்கு பெட்டிகளும் வங்கி லாக்கரில் பாதுக்காப்பாக வைக்கபட்டுள்ளன. வாக்கு பெட்டிகளில் வைக்கபட்டுள்ள வாக்குகளை எண்ணி முடிவுவை அறிவிக்க உத்தரவிட வேண்டும். தேர்தல் நேர்மையான முறையில் நடைபெற்றுள்ளது. ஏற்கனவே தேர்தலுக்காக 35 லட்சம் செலவு செய்யபட்டுள்ளது. மீண்டும் புதிதாக தேர்தலை நடத்த சங்கத்தில் பணம் இல்லை என்பதால் வாக்கு எண்ணிக்கைக்கு அனுமதி அளிக்க வேண்டும்” என நடிகர் சங்கம் தரப்பில் வாதிட்டப்பட்டிருந்தது. இந்த வழக்கில் நீதிபதிகள் அவர்களுடைய தீர்ப்பை ஒத்திவைத்திருந்தனர். இந்தச் சூழலில் இன்று இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்