Actor mayilsamy: குணச்சித்திர நடிகர் மயில்சாமி காலமானார்.. ரசிகர்கள் இரங்கல்
தமிழ் சினிமாவின் குணச்சித்திர நடிகர் மயில்சாமி காலமானார்.
தமிழில் பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து பிரபலமான மயில்சாமி, திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவால் காலமானார். மாரடைப்பு காரணமாக சென்னை போரூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த மயில்சாமி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 57. ஏராளமான தமிழ் படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் மயில்சாமி நடித்துள்ளார். தமிழ்நாட்டில் அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்ட அவர், அரசியல் தொடர்பாக பல்வேறு கருத்துகளையும் அவர் தெரிவித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மாரடைப்பு:
விருகம்பாக்கத்தில் வசித்து வந்த மயில்சாமிக்கு, அதிகாலை 03.30 நெஞ்சுவலி ஏற்படவே, குடும்பத்தினரால் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை மருத்துவர்கள் பரிசோதித்து பார்த்ததில் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். ஏற்கனவே ஒருமுறை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாகவு, இது இரண்டாவது முறை எனவும் கூறப்படுகிறது. இதையடுத்து, மயில்சாமி உடலுக்கு சென்னையிலேயே இறுதி சடங்கு செய்யப்பட்டு உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
கலை பயணம்:
1965ம் ஆண்டு ஜுன் மாதம் 5ம் தேதி ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் பிறந்த மயில்சாமி, முதன் முதலில் மிமிக்கிரி கலையால் பொதுவெளியில் அறியப்பட்டார். 1984ல் தமிழ் சினிமாவில் அறிமுகமான அவர், சிறியது முதல் பெரியது வரை பல்வேறு வேடங்களில் நடித்து வந்தார். கமலின் அபூர்வ சகோதரர்கள், ரஜினியின் பணக்காரன் உள்ளிட்ட எண்ணற்ற படங்களில் நடித்துள்ளார். அண்மையில் வெளியான லெஜண்ட் படத்திலும் நடித்து இருந்தார். 2000ம் ஆண்டுக்கு பிறகு பலரும் அறியப்படும் நடிகராக பல படங்களில் நகைச்சுவை மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்தார். நடிகர் விவேக் உடன் இணைந்து நடித்த பல திரைப்படங்களில் நகைச்சுவை காட்சிகள் ரசிகர்களை கவர்ந்தன. நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ”திருப்பதியில் லட்டுக்கு பதிலா அல்வா கொடுக்குறாங்க பாஸ், எதிர்த்து நிக்குறது தோனி மா, அது அநாவசியம்” போன்ற மயில்சாமியின் வசனங்கள் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துள்ள மீம் டெம்ப்ளேட்களில் குறிப்பிடத்தக்கவை ஆகும்.
தொலைக்காட்சியில் தொகுப்பாளர்:
2002 முதல் 2004 வரை தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நகைச்சுவை நிகழ்ச்சி ஒன்றையும் மயில்சாமி தொகுத்து வழங்கினார், அதற்காக 2003 இல் சிறந்த தொகுப்பாளருக்கான டெலி விருதையும் வென்றார்.